ஒரே மலேசியா! ஒரே ஒடுக்குத்தனம்!

இன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம், ஒரே இண்டர்லோக் நாவல் என்று பலர், குறிப்பாக அரசியல்வாதிகள், இனவாதிகள், சமயவாதிகள், சந்தர்ப்பவாதிகள், ஏதாவதொன்றை முன்வைத்து அதற்கு ஒரே இது, ஒரே அது என்று போட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் இல்லாத ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை இருப்பதாக இடைவிடாது கரைகின்றார். இது வெறும் கரையல்தான். ஏனென்றால், ஒரே மலேசியா, ஒரே மலேசியர் என்று கரையும் அமைச்சர்கள் கூட தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை காட்டி விடுகின்றனர். தற்காப்பு அமைச்சர் ஹமிடியை பாருங்கள். இந்நாட்டு சீன மற்றும் இந்திய மக்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று அவரது ஒரே மலேசியா கூற்றில் இருக்கும் ஓட்டையைக் காட்டி விட்டார்.

இந்த ஒரே மலேசியா என்ற கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரியில் முற்றிலும் ஒதுக்கப்பட்டதோடு ஒதுங்கியிருக்கும் ஓர் இனம் இருக்கிறது. வெறும் ஓலத்திற்காகக் கூட அந்த இனத்தினரின் அமைப்புகள் தங்களை “ஒரே மலேசியா ஒரே அமைப்பு” என்று கூறி தங்களுடைய ஒருமைப்பாட்டைப் பறைசாற்ற இதுவரையில் முன்வரவில்லை.

தோசை சுட்டுக் கொடுத்தும் சிலை எழுப்பியும் ஒரே மலேசியாவைக் காண கோடிக்கணக்கில் செலவிடும் நாட்டின் பிரதமர் அந்த ஓர் இனத்திடம் ஒரே மலேசியா அமைப்பாக மாறுங்கள் என்று கூறவில்லை. எந்தத் தலைவரும் அந்த ஓர் இனத்தினரை மட்டும் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் திரளுமாறு, போராடுமாறு கேட்டுக்கொள்ளவில்லை. கோரவே மாட்டார்கள்.

இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும் – தெலுங்கர்களையும், மலையாளிகளையும், பஞ்சாபிகளையும் தேடிப்பிடித்து அடையாளங்கண்டு அரவணைத்து ஒன்றாக்குகிறார் பிரதமர்; சீனர்களும் ஒன்றாக வேண்டும்; மலாய்க்காரர்கள் ஒன்றாக வேண்டும். இத்தனை பேரும் பிஎன் என்ற அமைப்பின் கீழ் ஒன்றாக வேண்டும். இதுதான் ஒரே மலேசியா. இதற்குத்தான் பில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது.

இந்த நாட்டின் முதுகெலும்பான, ஆனால் இன்று வலுவிழந்து வளைந்து நிற்கும், தொழிலாளர் இனம் ஒன்றுபட்டு ஒரே அமைப்பின் கீழ், ஒரே தொழிற்சங்க அமைப்பின் கீழ், திரள வேண்டும் என்று நாட்டின் பிரதம ஊழியர் கோரவில்லை. அந்த இனத்தை ஒன்றுபட விடாமல் கூறுபோட்டு வைத்திருக்கும் தொழிற்சங்க சட்டங்களைத் தேடிப்பிடித்து அடையாளங்கண்டு அகற்ற பிரதம ஊழியர் முன்வரவில்லை. எந்த அரசியல் கட்சியும், மாற்றரசுக் கட்சிகள் உட்பட, தொழிலாளர் இனத்தை “ஒரே இனம்” என்ற அடையாளங்கண்டு அதனை ஒரே குடையின் கீழ் கொண்டுவர எண்ணவில்லை.

ஏன் இந்த வேறுபட்ட நிலை? ஒன்றுபட்ட தொழிலாளர் இனம் மிகப் பெரிய சக்தியாகும். அது நிமிர்ந்தால், சாலையில் ஒன்றுதிரண்டு நடந்தால், நின்றால், நாடும், அரசும் நிலைகுத்திவிடும். ஆகவே, அந்தத் தொழிலாளர் இனம் எங்கும் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும். இது கண்ணுக்குத் தெரியாத ஆண்டவன் கட்டளையல்ல. நம்முன் இருந்துகொண்டு அரசியல்வாதிகள் மூலம் நாட்டை ஆளும் முதலாளிகளின் கட்டளை. முதலாளிகளின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுவதுதான் அரசாங்கத் தலைவர்களின் கடப்பாடாக இருந்து வந்துள்ளது. இதனை 225 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் ஆடம் ஸ்மித் இப்படிக் கூறியுள்ளார்: “Whenever the legislature attempts to regulate the differences between masters and their workmen, the counsellors are always the masters.”

225 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடம் ஸ்மித் கூறியதை உறுதிப்படுத்துகிறார் மலேசியப் பிரதமர் நஜிப்.  கடந்த ஆண்டு அவர் அறிவித்த புதிய பொருளாதார வடிவம் “Business friendly” என்றார். 2011 ஜூன் 14இல் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அளித்த விருந்தை உண்டு விட்டு நஜிப் கூறினார்: “There is no reason for employers and the Government not to consider workers’ requests if they are reasonable.” தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச சம்பளம் நியாயமற்றது. ஆகவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று முதலாளிகள் முன்பே கூறிவிட்டனர். எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமாக இருந்ததாக முதலாளிகள் ஏற்றுக்கொண்டதே இல்லை. அடித்தப் பிறகுதான் நியாயம் பிறக்கும். இது உலகம் கண்ட தொழிலாளர் வரலாறு.

நாட்டின் பெரும் இனமான தொழிலாளர் இனம் அதன் வலிமையைக் காட்டி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரும் முதலாளிகள் அரசாங்கத்தின் மூலம் தொழிற்சங்கங்களைச் சிறுசிறு துண்டு அமைப்புகளாக்கும் சட்டங்களை உருவாக்கினர். தொழிலாளர்களிடையே இன, மத வேற்றுமைகளைத் தூண்டி விட்டனர். தொழிற்சங்கத் தலைவர்களுக்குப் பட்டம் பதவிகளைக் கொடுத்து அவர்களைத் தங்களுடைய கையாட்களாக மாற்றி விட்டனர்.

அரசியல் கட்சிகள் “labour bureau” என்ற பிரிவை வைத்துக்கொண்டு தொழிலாளர்களைத் தங்கள் வசம் இழுக்கின்றனர். அம்னோவில் அப்படி ஓர் அமைப்பு இருக்கிறது. மசீசவில் அப்படி ஓர் அமைப்பு இருந்தது. மஇகாவில் அப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் தொழிலாளர் அமைச்சர் மாணிக்கவாசகத்திடம் கிண்டலாகக் கூறப்பட்டது.

அம்னோ தலைவர்கள் மற்றும் பிரதமர்களில் ஓன் பின் ஜாபார் அக்கால தொழிற்சங்க தலைவர்களின் கூடவே இருந்து குழி பறித்தவர். துங்கு அப்துல் ரஹ்மான் சிரித்தே ஏமாற்றியவர். அப்துல் ரசாக் மிரட்டியே காரியம் சாதித்தவர். ஹ¤சேன் ஓன் சட்டம் இயற்றியே பாதகத்தை உண்டாக்கியவர். மகாதீர் தொழிற்சங்க தலைவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதியவர். பிபி நாராயணனை சந்திக்க மறுத்தவர். அப்துல்லா படாவி “நீங்கள் போராடிக் கொண்டே இருங்கள். எங்கள் முடிவில் மாற்றம் இல்லை”, என்றவர். நஜிப் வாழ்த்துச் செய்தி அனுப்பியே தொழிற்சங்க தலைவர்களை வளைக்கப் பார்க்கும் நரித்தனம் படைத்தவர்.

இவர்களில் மகாதிர் சிறந்தவர். தொழிற்சங்கங்கள், குறிப்பாக மலாய்க்காரர்களைப் பொறுத்தவரையில், தேவையற்றவை என்று பகிரங்கமாகக் கூறிவிட்டார்.

முதலாளிகளுக்காகத் தொழிற்சங்களைப் பலவீனப்படுத்தி, முடிந்தால் அவற்றை ஒழிக்க வேண்டும் என்பது பிரதமர்களின், அரசியல் கட்சி தலைவர்களின் கடப்பாடு. அதனை அவர்கள் சிறப்பாக ஆற்றி வந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் உருவாக்கிய தொழிற்கட்சியின் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேர் தொழிற்கட்சியின் விதி 4 ஐ அகற்றியவர்! இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் கடமை தவறாதப் பிரதமர்கள்!

தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்காமல், அதற்காகத் தொழிலாளர்களைத் தயார் செய்யாமல், தொழிற்சங்கங்கள் ரப்பர் தோட்டங்களைப்போல் துண்டாடப்படுவதைத் தடுக்காமல், தொழிலாளர்கள் அனைவரையும் தொழிற்சங்க உறுப்பினர்களாக்காமல், தொழிலாளர் இன எதிர்களிடம் கோரிக்கை விட்டுக்கொண்டு, விருந்து அளித்துக்கொண்டு, நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று மேடையேறி சத்தியம் செய்து கொண்டு, ஊரையும் உலகையும் வலம்வந்துக் கொண்டிருக்கும் தொழிற்சங்க தலைவர்கள்தான் தங்களுடைய கடமையிலிருந்து தவறியவர்கள், பெரும் குற்றவாளிகள், பெரும் துரோகிகள்.

தொழிற்சங்கங்கள் இருந்தால் போதாது. தொழிற்சங்க இயக்கம் இருக்க வேண்டும். பெர்லிஸ்சில் ஒரு தொழிலாளிக்கு ஆபத்து என்றால் ஜொகூரில் இடி முழங்க வேண்டும். அந்த இடி உலகின் பல பாகங்களிலும் கேட்க வேண்டும். அந்த நிலை 1946 இல் இருந்தது. அகில மலாயா தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கணபதி காலத்தில் இயக்கம் இருந்தது, இடி முழங்கியது. இப்போது கேட்பதெல்லாம் செனட்டர் பதவிக்கான கெஞ்சல்!

“மனிதன் ஓர் அரசியல் மிருகம்.” தொழிலாளர்களுக்கு அரசியல் வேண்டும், அரசியல் கட்சி வேண்டும். அக்கட்சி தொழிலாளர்கள் நலன் காக்கும் கட்சியாக இருக்க வேண்டும். சிறு சிறு துண்டுகளாக இருக்கும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் மாற வேண்டும். ஒரு நாட்டிற்கு ஒரு மத்திய அரசு. அவ்வாறே ஒரு நாட்டில் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே தொழிற்சங்கம். ஒரே மலேசியாவில் ஒரே தொழிற்சங்கம். அத்தொழிற்சங்கம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதுதான் தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற்சங்கம் ஆற்ற வேண்டிய கடமை.