மலேசிய கூட்டரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றம் என்றால் பேரரசர், டேவான் நெகரா (செனட்) மற்றும் டேவான் ராக்யாட் (மக்களவை) ஆகியன உள்ளடக்கியதாகும். எனவே, மலேசிய நாடாளுமன்றத்தை ஈரவைக் கொண்டதாகும். அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் 44ஆம் பிரிவு தரும் விளக்கம்.
மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமே மக்களவையானது விதிக்கப்பட்டிருக்கும் வரம்புக்குள் தன் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும். மக்களவை எப்பொழுதாவது வரம்பு மீறி செயல்படுமானால் அதைத் தடுக்கும் அதிகாரத்தை டேவான் நெகரா பெற்றிருக்கிறது.
ஆனால், தேசிய முன்னணியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது அது நினைத்தது போல் செயல்பட உதவியது. இதற்குத் துணையாய் அமைந்திருந்தது டேவான் நெகராவின் உறுப்பீயம்.
இதுதான் கையாளப்பட்ட அரசியல் நாகரீகம். அதே சமயத்தில், பொதுத் தேர்தலில் தோல்வியுற்றோருக்கு அரசியல் புனல் வாழ்வு வழங்குவதுபோல் அவருக்குச் செனட்டர் பதவியைத் தந்து கூட்டரசின் அமைச்சராகவும் நியமிக்கப்படுவது ஒன்றும் விசித்திரம் அல்ல.
சட்டமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட செனட்டர்களைத் தவிர்த்து பிரதமரின் பரிந்துரைக்கிணங்க நாற்பது செனட்டர்களைப் பேரரசர் நியமிக்க முடியும். பேரரசரின் நியமனத்துக்குரியவர்கள் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். செனட்டர்களாக எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள், அவர்களின் தகுதி என்ன என்பதை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்று குறைபடுவோர் கூறும் காரணங்கள் நியாயமானதாகவே தென்படுகிறது.
ஜனநாயகக் கோட்பாடு புறக்கணிக்கப்பு
ஜனநாயகம் என்றால் எல்லா நிலைகளிலும் மக்கள் ஈடுபாடு, பங்களிப்பு இருக்க வேண்டுமெனக் கோருவதில் நியாயம் இருக்கிறது. எனவே, உள்ளாட்சி மன்றங்களும் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லைதான். ஆனால், அதிகாரம் ஒரே கையில், ஒரே கட்சியிடம் குடிகொண்டு விட்டால் ஜனநாயகக் கோட்பாடு புறக்கணிக்கப்படலாம். அதற்கு உதாரணம் தேவை என்றால் சிங்கப்பூரைப் பார்க்கலாம்.
சிங்கப்பூர் நகராண்மைக் கழகத்தைக் காலஞ்சென்ற லீ குவான் யூவின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் செயல் கட்சி கைபற்றியது. சிங்கப்பூரின் மேயராக – நகரத் தந்தையாக ஓங் எங் குவான் பொறுப்பேற்றார். அவருக்கும் லீ குவான் யூவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஓங் எங் குவான் மக்கள் செயல் கட்சியிலிருந்து நீங்கி புது அரசியல் இயக்கம் கண்டார். ஓங் எங் குவானின் செல்வாக்கினை ஒழிக்கும் நோக்கத்துடன் தான் சிங்கப்பூர் நகராண்மைக்குத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அது ஜனநாயகத்திற்குப் பலத்த அடி. அதை நிறைவு செய்தவர் லீ குவான் யூ.
உள்ளாட்சி தேர்தல்
மலேசியாவை எடுத்துக் கொண்டால் ஐம்பதுகளில் உள்ளாட்சி தேர்தல் தான் முதலில் அறிமுகமானது. ஆனால், அன்றைய தொழிற்கட்சியின் தவறான அணுகுமுறையால் அறுபதுகளில் தேர்தலைப் புறக்கணித்தது. தமது அதிகாரத்தில் இருந்த நகராண்மைக்கழக உறுப்பினர்கள் ஏற்படுத்திய சங்கடமான அரசியல் நெருக்கடியைப் பின்பற்றி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஜனநாயகத்துக்குக் கொடுக்கப்பட்ட மரணத் தண்டனை எனலாம். ஆகமொத்தத்தில், தங்களுக்குச் சாதகமாக எது பயன்படுமோ அந்த முறையைப் பயன்படுத்த தேசிய முன்னணியும் அதன் முன்னோடியான கூட்டணியும் தயங்கியதில்லை.
உள்ளாட்சித் தேர்தலுக்குக் கொடுக்கப்பட்ட மரண அடி ஓர் எடுத்துக்காட்டு எனின் தமது திட்டங்கள் நிறைவேற்ற ஜனநாயகத்துக்குப் புறம்பான முறைகளைக் கையாள ஆளும் கட்சியான தேசிய முன்னணி ஒருபோதும் தயங்கியதில்லை. எனவே, டேவான் நெகரா உறுப்பினர்கள், செனட்டர்கள் நியமனத்தில் தமது கட்சிக்கு ஆதரவு நல்குவோரை மட்டும் நியமித்து அந்த உயர்வான டேவான் நெகராவின் அமைப்பையும் அதன் நோக்கத்தையும் சிறுமைப்படுத்திய புண்ணியவான்கள் தான் தேசிய முன்னணியினர்.
டேவான் நெகரா தனது உயரிய அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும். அது மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருக்கும் கட்சிக்கு ஆதரவு முத்திரை குத்தும் அங்கமாக விளங்கக்கூடாது.
இந்தக் காலகட்டத்தில் டேவான் நெகராவின் உண்மையான நோக்கத்தை, இலட்சியத்தை அடையும் பொருட்டு சில கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில் செனட்டர் உறுப்பீயத்திற்கான மக்கள் நேரிடையாகப் பங்குபெற வேண்டும் என்பதாகும். இதன்வழி, செனட்டர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் தரம் என்ன என்பனபோன்ற தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள உதவும்.
டேவான் நெகரா நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது என்பது உண்மை. அந்தப் பொறுப்பைச் செவ்வெனச் செய்யும் திராணி கொண்டவர்கள்தான் டேவான் நெகராவில் அங்கம் வகிக்க வேண்டுமென மக்கள் தீர்மானிக்கட்டும் என்று கேட்பதில் நியாயம் உண்டு. நகராண்மைக் கழகச் சுதந்திரத்தை இழந்தது போல் டேவான் நெகராவும் தனது சிறப்பு மிகுந்த பொறுப்பை, சுதந்திரத்தை இழக்கக்கூடாது. மக்களவையைக் கட்டுப்படுத்தும் தகுதி அதற்கு மட்டுமே உண்டு.
அதே சமயத்தில், இது இளைஞர்கள் உலகம். நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்டர்களும் வயது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோருவதில் குறை காண இயலாது உதாரணத்திற்கு, அரசும் பொதுத் துறையில் பணிபுரிபவர்கள் அறுபது வயது அடைந்ததும் பணி ஓய்வு பெறுகிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறுபத்தைந்து வயது வரை சேவையாற்றலாம். அதற்குப் பிறகு, ஓய்வு பெற்றாக வேண்டும்.
வயது கட்டுப்பாடு
அதுபோலவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுபது வயது வரை சேவை செய்த பிறகு ஓய்வு பெறலாம். அவர்கள் தொடர்ந்து பொதுச் சேவை செய்ய விரும்புவார்களேயானால் டேவான் நெகரா உறுப்பீயத்தை நாடலாம். எனவே, டேவான் நெகராவின் தரம் உயரும். அனுபவமிக்கவர்கள் நல்ல ஆலோசனைகளை நல்க உதவும்.
டேவான் நெகரா உறுப்பினர்களுக்கு வயது கட்டுப்பாடு இருக்க வேண்டும். எண்பது வயது அடைந்ததும் அவர்கள் ஒதுங்கிவிட வேண்டும். அவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடையில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால்தான் நாட்டுக்கு வேலை செய்ய முடியும் என்று சொல்வது பேராசைக்காரர்களின் புலம்பல் என்றால் மிகையாகாது.
நாடாளுமன்றத்தில் முறையான திருத்தம் தேவை. அதை இந்த ஒற்றுமை அரசு செய்து முடிக்கும் என்று நம்புவோமாக!