சுகாதார அமைச்சர் ‘திடீர்’ வருகை வழி மருத்துவமனை சேவையை  மேம்படுத்த இயலும்

இராகவன் கருப்பையா – கல்வியமைச்சு, நிதியமைச்சு மற்றும் உள்துறையமைச்சு ஆகியவற்றைப் போல சுகாதார அமைச்சும் ஒரு நாட்டுக்கு மிக முக்கியமான அமைச்சு என்பது எல்லாரும் அறிந்ந ஒன்று.

அந்த அமைச்சு இம்முறை ஒரு முற்றிலும் புதியவரிடம்  ஒப்படைக்கப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமின்றி மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜொகூரில் உள்ள செக்கிஜாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஸலிஹா முஸ்தஃபா சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட மறுகனமே நாட்டுக்குத் தேவையான பலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

இருந்த போதிலும் களத்தில் இறங்க வேண்டியதுதான் அவர் செய்ய வேண்டிய மிக முக்கியமான முதல் வேலை. அதாவது அரசாங்க மருத்துவமனைகளுக்கு, குறிப்பாக நகர் புறங்களுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு அவர் நேரடியாக வருகை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் வருகை மேற்கொள்ளப் போகிறார் என இரண்டொரு மாதங்களுக்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்படும்.

அந்த இடைப்பட்டக் காலத்தில் அம்மருத்துவமனையின் இயக்குனர் எல்லா மேல் நிலை ஊழியர்களையும் அழைத்து அமைச்சரின் வருகைக்காக தடபுடலான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துவிடுவார்.

அதன் பிறகு சொல்லவா வேண்டும்! கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் புதிய சாயம் பூசப்படும். அதன் வளாகத்தில் புதிய பூச்செடிகள் திடீரென முளைக்கும். நோயாளிகளின் படுக்கைகள் பளிச்சென்று மிளிரும். மொத்தத்தில் அந்த மருத்துவமனை ஒரு 5 நட்சத்திர உள்ளாசத் தளத்தைப் போல காட்சி தரும்.

குறிப்பிட்ட அந்த நாள் வந்தவுடன் எல்லா ஊழியர்களும் நேரத்தோடு வேலைக்கு வந்துவிடுவார்கள். வெளியே பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் ‘கொம்பாங்’ இசைக் கலைஞர்களும் பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் அமைச்சரின் வருகைக்காகத் தயாராய் காத்திருப்பார்கள்.

அமைச்சரை மருத்துவமனையின் எந்தெந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்ட வேண்டும் என இயக்குனருக்குத் தெரியும்.

அதனைத் தொடர்ந்து பந்தலில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிற்றுண்டிகளை சுவைத்த பிறகு, “இந்த மருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது, இதன் இயக்குனரும், மருத்துவர்களும், ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்,” என்று பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு, புகைப் படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்துவிட்டு அமைச்சர் கிளம்பிவிடுவார்.

மறுநாள் அம்மருத்துவமனை ‘பழையக் குருடி கதவைத் திறடி’ என்ற நிலைமைக்குத் திரும்பிவிடும்.

இதுவெல்லாமே செயற்கையான ஒரு ‘ட்ராமா’தான் எனும் விவரம் அமைச்சருக்குத் தெரியுமா அல்லது தெரிந்தும் தெரியாததைப் போல அந்நாடகத்தின் ஒரு பகுதியாக அவரும் நடித்துவிட்டுச் செல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் காலங்காலமாக நம் நாட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

எனினும் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி இந்த வழக்கத்திற்கு மாறாக ஒரு காரியத்தைச் செய்தார். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில் எவ்வித முன் அறிவிப்புமின்றி சிலாங்கூர், காஜாங் மருத்துவமனைக்கு தீடீர் வருகை மேற்கொண்ட அவர் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

முகக் கவசம் அணிந்து, ஒரு வருகையாளரைப் போல சாதாரண உடையில் அவரும் அவருடைய உதவியாளரும் மட்டுமே உள்ளே நுழைந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தனர்.

அதே போல வேறு மருத்துவமனை எதற்கும் அவர் அப்படி சென்றாரா தெரியவில்லை. ஆனால் அச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டிலுள்ள பல மருத்துவமனைகள் சற்று வழிப்படைந்ததாக நம்பப்படுகிறது.

இதைத்தான் நமது புத்தம் புதிய சுகாதார அமைச்சர் ஸலிஹா செய்ய வேண்டும். நகர் புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே வலம் வந்து அறிக்கை விடும் வழக்கத்தை மாற்றிக் கொண்டு நகருக்கு வெளியே களமிறங்கினால்தான் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் காணமுடியும்.