இந்தியர் பிரச்சினைகளை கவனிக்க நடவடிக்கை குழு எப்போது அமையும்

இராகவன் கருப்பையா – இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலைவதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் செய்யப்பட்ட அறிவிப்பு நாமெல்லாம் நீண்டநாள் காத்திருந்த ஒரு நல்ல செய்தி.

“இந்தியர் விவகாரங்களை நான் மட்டுமே தனியாக கவனிக்கப் போவதில்லை. மாறாக ஒட்டு மொத்த அமைச்சரவையும் இந்தியர்களின் நலனையும் கவனிக்கும்”, என புதிய அரசாங்கத்தில் இருக்கும் ஒரே இந்திய அமைச்சரான சிவகுமார் ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஆனால் கடந்த 4ஆம் தேதி ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீரவுகாணும் வகையில் சிறப்பு நடவடிக்கை குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

எனினும் அவ்வறிவிப்பு செய்யப்பட்டு தற்போது 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அது தொடர்பான எவ்வித முன்னெடுப்பையும் காணவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. ஏனெனில் புதிய அரசாங்கம் அமைந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் நம் சமுதாயம் இன்னமும் ஒரு தெளிவான இலக்கின்றிதான் பரிதவிக்கிறது.

இந்திய சமூகத்தின் பி40 தரப்பினருக்கு உதவி தேவைப்படுகிறது எனும் உண்மையை தேர்தல் காலத்தின் போது அன்வார் பல தடவை ஒப்புக் கொண்டிருந்தது நமக்கெல்லாம் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்கான மேல்நடவடிக்கையில் இன்று வரையில் சுணக்கம்தான்.

இதே போலதான் கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அமைக்கப்பட்டதிலிருந்தே உறுப்பினர்களுக்கிடையே ‘ஈகோ’ எனும் அகங்காரம் ஊடுருவி கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.

இப்படிப்பட்டச் சூழலில் உருப்படியானக் காரியம் எதனையும் முழுமையாக அவர்கள் அமல்படுத்துவதற்குள் அரசாங்கம் கவிழ்ந்து எல்லாமே வெறும் ‘புஸ் வானம்’ ஆனதும் நமக்குத் தெரிந்ததே.

பிறகு ஆட்சி புரிந்த முஹிடின் அரசாங்கமும் சப்ரி ஆரசும் நமது பிரச்சினைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. தங்களுடையப் பிரதமர் பதவியை தற்காப்பதில் கவனம் செலுத்தவே அவர்களுக்கு அவகாசம் சரியாக இருந்தது.

எனவே இப்படிப்பட்ட சோகமான அனுபவங்களை சுமந்து நிற்கும் நம் சமூகம் இப்போதும் கூட அச்சத்தில்  மூழ்கியிருப்பதில் வியப்பில்லை.

அன்வார் ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் எனும் நம்பிக்கை நமக்கு இருக்கிற போதிலும் ‘ஷெரட்டன் நகர்வை’ப் போல ‘புதிய நகர்வு’கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணமாக இருப்பதை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது.

ம.சீ.ச., ம.இ.கா, ஆகியக் கட்சிகளோடு அம்னோவைச் சேர்ந்த சிலரும் இத்தகைய யூகங்களுக்கு அவ்வப்போது உரமூட்டி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இத்தருணத்தில் அவசியமாகிறது.

எனவே சிவகுமார் குறிப்பிட்ட அந்த நடவடிக்கைக் குழு மிக விரைவில் அமைக்கப்பட்டு நம் சமூகத்திற்குத் தேவையான முன்னெடுப்புகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

நாடளாவிய நிலையில் உள்ள இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்குழுவில் இணைக்கப்படுவர் என்றும் நம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலைவதற்கு அவர்கள் பிரத்தியேகத் திட்டங்களை வகுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மலேசிய இந்தியர்களில் பலர் காலங்காலமாக எதிர்நோக்கி வரும் குடியுரிமை பிரச்சினை, ஆலய நில விவகாரம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம், தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் மற்றும் தொழில் கல்வி, போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அக்குழு செயல்படும் என சிவகுமார் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த இந்தியர்களுக்கான நடவடிக்கை குழு என்பதை அமைப்பது பற்றி, இந்திய பிரதிநிதிதான் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இது ஒரு தேசிய பிரச்சனை என்ற நிலையில் கையாள வேண்டும்.

இந்தாட்டில் நம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஓரு ஆண்டிலோ 5 ஆண்டுகளிலோ தீர்க்கப்படக் கூடியவை அல்ல. எனவே நாம் வெறுமனே பேசிக் கொண்டு இனிமேலும் காலம் கடத்தாமல் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டு’ செயல் வீரர்களாக மாற வேண்டும்.