இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 2 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் மலேசியாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மீண்டும் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
கடந்த ஆண்டில் அனிருத், சிட் ஸ்ரீராம், இளையராஜா, அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் சகோதரர் கங்கை அமரன் போன்றோர் இங்கு வந்து நிகழ்ச்சிகளைப் படைத்து பெருமளவில் வசூல் செய்து செல்கின்றனர்.
இரு வாரங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் வந்திருந்த வேளையில், கடந்த வார இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான வகையில் தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்றது.
எதிர்வரும் மார்ச் மாதத் தொடக்கத்தில் பாடகி சித்ரா இங்கு வரவிருக்கும் வேளையில், மிக விரைவில் ஹரிஷ் ஜெயராஜ் மீண்டும் வரவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
எனினும் கோடிக்கணக்கான ரிங்கிட் வசூல் சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி நம் சமூகத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 60,000 ரசிகர்களை ஈர்த்த இந்நிகழ்ச்சிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் அவருடைய மனைவி வான் அஸிஸாவும் கூட சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பல நூறு ரிங்கிட்டை செலவழிக்கத் தயாராய் இருக்கும் நம் சமூகத்தினர், உதவிக்காக ஏங்கித் தவிக்கும் நம் இனத்தின் ஏழ்மைத் தரப்பினருக்கு ஏன் கைகொடுக்க முன் வருவதில்லை என பொது மக்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்ற சர்ச்சையொன்று நம் நாட்டில் ஏற்கெனவே ஒரு முறை எழுந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் குழு ஒன்று இங்கு வந்திருந்தது எல்லாருக்கும் தெரியும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குச் சென்னையில் கட்டிடம் கட்டுவதற்காக நிதித் திரட்ட கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்பட சுமார் 250 பேர் கொண்ட ஒரு பெரிய பட்டாளமே புக்கிட் ஜாலில் அரங்கில் குழுமி கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தி வசூல் வேட்டையாடியது.
நாமே இங்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் கட்டிடம் கட்டுவதற்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனும் ஆதங்கம் அப்போதே ஆக்ரோஷமாக எழுந்திருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் அல்ல என்றோ, தமிழ் பள்ளிகளுக்கோ பி40 தரப்பினருக்கோ அவர்கள் உதவியதில்லை என்றோ சகட்டு மேனிக்கும் நாம் சொல்லிவிட முடியாது.
பல வேளைகளில், கடுமையாக நோய்வாய் பட்டு உதவி நிதி கோருவோருக்கு, அல்லது உணவின்றி பசியால் வாடும் ஆதரவற்ற குடும்பங்கள் பரிதவித்து நிற்கும் போது, போதுமான ஆதரவு இல்லை என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டு மொத்த ஆதங்கமாகும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், டிக்கெட் வசூலில் குறிப்பிட்ட ஒரு விழுக்காட்டைத் தமிழ்ப் பள்ளிகளுக்கோ உதவித் தேவைப்படும் தரப்பினருக்கோ ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கோ வழங்கியிருந்தால், கேளிக்கையிலும் மனிதநேயம் உயிர்வாழ்கிறது என்பதைக் காட்டியிருக்கலாம்.
அறிவிப்போ விளம்பரமோ இல்லாமல் ஏற்பாட்டாளர்கள் அப்படியொரு முன்னெடுப்பை மேற்கொள்கிறார்களா என்று தெரியாது. அப்படி இல்லையென்றால் எதிர்வரும் காலங்களிலாவது அவ்வாறு செய்வது குறித்து அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
அப்படிச் செய்தால் டிக்கெட் வாங்கும் அனைவருமே தேவைப்படுவோருக்கு உதவி செய்வதாகப் பொருள்படும் அல்லவா!கேளிக்கை செலவினம் தனி நபரின் சுயதேவையின் அடிப்படையில் உருவாகிறது. ஆனால், அதன் மறுபக்கத்தில் மனிதநேயமும் இருக்க வேண்டும், நாம் மனிதர்கள் என்பதால்.