கி.சீலதாஸ் – நாம் ஜனநாயகத்தைப் புகழ்கிறோம். அந்தத் தத்துவத்தைப் பற்றி கூறப்படும் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். அவையே நம் அரசியல் வாழ்வுக்கு ஏற்றவை என வலியுறுத்துகிறோம், அவற்றைக் கைவிட மாட்டோம் எனச் சூளுரைக்கிறோம்.
ஜனநாயகக் கோட்பாடு பலவிதமான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. ஏதன்ஸ் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஜனநாயகம் என்ற கருத்தைப் பொய்யாக்கும் பல ஆய்வுகள் தோன்றியுள்ளன. மேற்கத்திய நாடுகளின் கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஜனநாயகம் என்றால் மக்களாட்சி. அந்த மக்களாட்சியை நடத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது? ஜனநாயகத்தில் எல்லா குடிமக்களுக்கும் தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால் ஜனநாயகம் ஜனித்த நாட்டில் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது விழுக்காட்டினர் மட்டும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
பெண்களும், இளவயதினரும், அடிமைகளும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. அப்படிப்பட்ட ஆட்சியை ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தும் பலமடைந்தது. இப்படிப்பட்ட சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஆட்சி செய்யும் அரசியல் தத்துவத்தை மக்களுக்கு நல்லது என்று எவ்வாறு சொல்ல முடியும்?
சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ கூட ஜனநாயகத்தின் மீது நல்ல அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நெடுங்காலமாக ஜனநாயகத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கவில்லை.
காலப்போக்கில், குறிப்பாகப் பதினெட்டாம், பத்தொன்பதாம்* நூற்றாண்டுகளில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பிரதிநிதித்துவ ஜனநாயகம் தான் இன்று நம்மை ஆளுகிறது எனலாம். பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரிட்டன், அமெரிக்க நாடுகளில் பிறப்பு கண்டது. எனினும், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நாடுகள் ஏராளம்.
மன்னர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பார்களா? அது ஒரு புறமிருக்க, மன்னர்கள் ஆட்சி எனும்போது அவர்களின் ஆட்சியில் நேர்மை, அறம் காத்தல், அப்பழுக்கற்ற நீதி வழங்குதல் போன்றவற்றிற்குச் சிறப்பான இடம் நல்கப்பட்டிருந்தது என்ற வரலாற்றுகள் உள. இங்கே பிளேட்டோ சொன்ன “அரசன் தத்துவஞானியாக இருக்க வேண்டும்” என்ற கருத்தைக் கவனித்தால் மன்னன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.
மக்களின் நலம், நேர்மையான, தூய்மையான நீதி போன்றவை நல்ல மன்னனின் இலட்சணங்களாகக் கருதப்பட்டன. பல இலக்கியங்கள் மன்னர்களின் நீதி தழுவிய வாழ்க்கை, ஆளுமை, ஆட்சித்திறன் போன்றவற்றை விளக்குகின்றன.
எனவே, மன்னர்கள் வெறும் கைபொம்மைகளாக இருக்கக்கூடாது, சிந்தித்துச் செயல்படும் ஆளுமையைக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதுவே மன்னராட்சி சிறப்புடன் நீடிக்க உதவியது. ஆனால், ஜனநாயக ஆட்சியில் ஏதோ ஒரு கொள்கையை மக்களை நம்ப வைத்து ஆட்சியைக் கைபற்றுபவர்கள் நேர்மையானவர்களா? நியாயவாதிகளா? அவர்களின் கவனமெல்லாம் எதில் இருக்கும் என்பதைப் பார்த்து விரிவான, ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதில் தெளிவான விடைகள் கிடைக்காவிட்டாலும் பதவிகளைக் கைபற்றியவர்களின் செயல்களை ஆராய்ந்துப் பார்க்கும்போது மக்களின், நாட்டு நலன் என்கின்ற பேச்சுகள் யாவும் காலப்போக்கில் அவர்களின் சுய ரூபத்தை வெளிப்படுத்தின. அவர்கள் நியாயமானவர்கள் அல்ல, நாணயக் குறைவானவர்கள், பலரைக் கயவர்கள் என்றும் ஜனநாயக வரலாற்று ஆசிரியர்கள் துணிவோடு குறிப்பிடுகிறார்கள்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமரும் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தவர்களில் ஒருவரான சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஜனநாயகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் மற்ற எல்லா அரசுகளை விட ஜனநாயக அரசு மிகவும் மோசமானது என்றார்.
அமெரிக்காவின் தலைச்சிறந்த நையாண்டிக்காரர்களில் ஒருவரான மென்க்கன் ஜனநாயகத்தைக் குறிப்பிடும்போது தனிப்பட்டவர்களின் ஒருமித்த அறியாமையால் வளர்ந்த பரிதாபமான நிலை என்றார்.
ஆகவே, ஜனநாயகம் மக்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறதா என்று கேட்டால் திருப்திகரமான பதில் கிடைப்பது அரிதிலும் அரிது. ஜனநாயகத்தின் சிறப்புகளைப் பேசி சாதாரண மக்களை நம்ப வைத்து ஆட்சியைக் கைபற்றுகிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயங்குவார்கள். கேட்டால் அவர்களுக்குச் சினம் மேலோங்கும். ஆட்சி அரியணையில் அமர்த்திய மக்களையே தண்டிக்கத் தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?
விவேகமில்லாதவர்களை நம்பினால் மோசம் போவது நிதர்சனம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஜனநாயகம் மக்களுக்கு உதவாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதை எல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது ஜனநாயகம் உண்மையில் மக்களுக்கு உதவாத ஒரு தத்துவம் என்ற வாதம் வலிவுபெறுவது உண்மையே! அதனால்தான் என்னவோ ஒரு சிலர் நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் வேண்டாமெனத் தைரியமாகக் கூறத் தொடங்கிவிட்டனர்.
மன்னராட்சி திரும்ப வர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். இத்தகைய கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் எல்லா மலேசிய மாநிலங்களும் இணைந்து இயங்க முடியாத நிலை உருவாகும். அப்படிப்பட்டதொரு சிதறல் மலேசியாவையும், மலேசியர்களையும் பாதிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மலேசியர்களுக்கு உண்டு.
இக்காலகட்டத்தில் அன்வர் இபுராஹீம் தலைமையில் இயங்கும் ஒற்றுமை அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சியில் சிலர் ஒன்றுகூடி செயல்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 2020ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்ட நம்பிக்கை கூட்டணி கவிழ்த்த நாடகம் மீண்டும் நிகழ வழி உண்டு.
அது நடக்கக்கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் மட்டும் தீர்மானித்தால் போதாது. நல்ல ஆட்சிக்கு, உறுதியான ஒற்றுமை ஆட்சிக்குத் துணை நிற்போம் என்று மலேசியர்கள் உறுதி செய்து மலேசியாவைக் காப்பாற்ற வேண்டும். மாற்றம் தேவை, மாற்றம் தேவை என்று கோருவது போதாது, நல்ல மாற்றத்துக்கு மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டும்.
அது எப்படிப்பட்ட மாற்றமாக இருக்க வேண்டும்? மக்களை மக்களாக, மலேசியர்களை மலேசியர்களாக மதித்துச் செயல்படும் அரசுக்குத் துணையாக நிற்க வேண்டும்.
மாற்றத்திற்கு அரசு தயார் எனின் அதைத் தற்காக்கும் பொறுப்பு மலேசியர்களுக்கு உண்டு.மலேசியர்கள் சிக்கல்கள் மலிந்த சூழ்நிலையில் சிக்கியுள்ளார்கள் என்பதை எல்லோரும் உணருகிறார்கள். இதற்கு நிவாரணம் என்ன?
அது தான் முக்கியம். இதுகாறும் நடத்தப்பட்ட அரசியல் பலன் தந்ததா என்ற கேள்வி பல கோணங்களில் இருந்து பார்க்கும்போது நல்லிணக்கத்தை வளர்க்கும் வாய்ப்பை இழந்ததைத்தான் காண்கிறோம்.
பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவற்றில் ஊழல் குடி புகுந்து நேர்மையற்ற ஆட்சியை வலுவடையச் செய்ததை உணரும்போது, ஜனநாயகம் தோல்வி கண்டுவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது.
அதே சமயத்தில், மன்னராட்சி தான் தீர்வு என்று நினைத்தால் விசுவா மித்திரரின் அகங்கார கோரிக்கைகள் போன்றவை வளர வழியும் உண்டு. ஜனநாயகக் கோட்பாட்டை ஊழலற்ற வழியில் நடத்திச் சென்றால் எல்லோரும் பயனடைவர் என்பது திண்ணம்.