கி.சீலதாஸ் – மதச் சார்பற்ற கொள்கை, கம்யூனிஸம் மற்றும் ஓர் இனப் பால் இணைதல், திருநங்கை, திருநம்பி போன்றவற்றை மலேசியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இபுராஹீம்.
கம்யூனிஸம் இனிமேல் தலைதூக்குவது கடினம் என்று சொல்வதைக் காட்டிலும் இந்நாட்டில் அது எடுபட வழியில்லை எனலாம். அப்படி உறுதியாகச் சொல்லும்போது கம்யூனிஸம் இந்நாட்டில் மறுபிறவி காணாமல் இருப்பதற்குத் தோதாக நல்ல சமுதாய, பொருளாதாரத் திட்டங்களை வகுத்தால் போதாது.
அது ஏட்டளவோடு நின்றுவிடக்கூடாது. மக்கள் திருப்திப்படும் அளவுக்கு அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமானால் ஊழலால் விளையும் கேடுகளைப் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதிவு செய்யும் பணியை இளம்பருவத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். எங்கே ஆரம்பிக்க வேண்டும்?
ஒவ்வோர் இல்லங்களிலும், பாலர் பள்ளியிலும் ஆரம்பமாக வேண்டும். அதன் பயணம் நிறுத்தவே கூடாது. கம்யூனிஸம் பொருளாதார, சமுதாய நீதியை விழைவது உண்மை. ஆனால், அது மனித உரிமைகளை அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதும் கண்கூடு.
கம்யூனிஸம் இறை நம்பிக்கையைப் புறக்கணிக்கும். அதில் சமயங்களுக்கு இடமில்லை. பழைய இலக்கியங்களுக்கு மதிப்பிருக்காது; கொடுக்கப்படமாட்டாது அல்லது பழைய இலக்கியங்களுக்குப் புது வியாக்கியானம் கூட உற்சாகப்படுத்தலாம். ஜனநாயகம் என்ற போர்வையின்கீழ் சர்வதிகார ஆட்சியை நிலைக்கச் செய்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. எவரை நியமிக்கிறதோ அவரை உறுதிப்படுத்துவதுதான் மக்களின் கடமை. அதுதான் கம்யூனிஸத்தின் ஜனநாயகக் கோட்பாடு.
பல கட்சிகளுக்கு இடமில்லை. கம்யூனிஸ நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் ஆட்சி செய்வார்கள். அவர்களின் கருத்துக்குத்தான் மதிப்பளிக்கப்படும். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் பிரதிநிதித்துவ கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது என்றால் வேட்பாளரை நியமிக்கும் பொறுப்பை அரசியல் கட்சி ஏற்றுக்கொள்கிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர் கட்சிக்கும், கட்சியின் தலைவருக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்; தவறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சு சுதந்திரம், பேச்சுரிமை என்று ஓலமிடுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கட்சியின் தலைமைத்துவத்திற்க்குக் கட்டுப்பட வேண்டும்.
தெரிவு செய்யப்பட்டால் கட்சித் தலைவருக்கு விசுவாசமாகச் செயல்பட வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்டால் தமது சுதந்திரத்தைத் துறந்து தமது பேச்சுரிமையை இழந்துவிடுகிறார். ஏனெனில், நாடாளுமன்றத் தீர்மானத்தின் போது எவ்வாறு வாக்களிக்க வேண்டுமெனக் கட்சித் தலைவர் சொல்கிறாரோ அதை மீற முடியாது.
கம்யூனிஸத்திற்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கும் என்ன வித்தியாசம்? பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தொகுதி வேட்பாளரை நம்பினர். தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர்களுக்குக் கட்டுப்படுகிறார். தலைவர் எல்லா அதிகாரங்களையும் கொண்ட சர்வதிகாரி என்றால் எப்படி தவறாகும்? இதுவும் சிந்திக்க வேண்டுமே! ஒருவகையில் கட்சி ஒழுங்கு என்ற மரபுப்படி கம்யூனிஸம், பிரதிநிதித்துவ ஜனநாயகம் சுதந்திர சிந்தனைக்கு வழிவிட மறுக்கிறது என்றால் மிகையாகாது.
கம்யூனிஸம் வேண்டாம் என்பதில் மலேசியர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதே வேளையில், வாழ்க்கையில் எல்லா தரங்களிலும் நீதி தேவை. அதை உறுதிப்படுத்தி நிறைவேற்றும் பொறுப்பு பிரதமர் அன்வர் இபுராஹீமுக்கு உண்டு.
அடுத்து, மதச் சார்பற்ற கொள்கை குறிப்பிட்டிருப்பதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். பாஸ் கட்சி சமய அரசியலை நடத்தியது, நடத்துகிறது. அம்னோ ஆரம்பமான காலத்திலிருந்து இஸ்லாத்துக்குச் சிறப்பிடம் வழங்குவதில் தயங்கியதில்லை.
எனினும், தீவிர இஸ்லாத்தை ஆதரிக்கவில்லை. எனவே, அது தலைமை வகித்த கூட்டணி கட்சியின் கொள்கையில் மலாயா, பின்னர் மலேசியா, மதச் சார்பற்ற நாடு என்ற நிலையை உறுதிப்படுத்தியது. துங்கு அப்துல் ரஹ்மான் முதல் துன் உசேன் ஓன் வரை மலேசியாவின் சமயச் சார்பற்ற நிலையை உறுதிப்படுத்தினர். அவர்கள் தீவிர இஸ்லாத்தை ஆதரிக்கவில்லை; மலேசியா இஸ்லாமிய நாடு அல்ல என்பதையும் உறுதிப்படுத்தினர். துன் மகாதீர் முகம்மது பிரதமரானதும் தமது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்துடன் பாஸ் கட்சிக்கு ஈடாக அல்லது அதை மிஞ்சும் நிலைக்கு உந்தப்பட்டு பல சிக்கல்களுக்கு நாட்டை உட்படுத்தியது நினைவிருக்கும். ஆனால், காலங்காலமாக மலேசியாவின் சமய நிலை வித்தியாசமாகவே இருந்தது என்று சொன்னால் தவறாகாது.
பிரதமர் அன்வரும் மற்றவர்களும் கவனிக்க வேண்டியது என்னவெனில், அரசமைப்புச் சட்டமானது இஸ்லாம் தான் கூட்டரசின் சமயம் என்று கூறிவிட்டு அதே மூச்சில் பிற சமயங்கள் இயங்குவதை ஏற்றுக்கொள்கிறது. எனவே, இஸ்லாம் தான் கூட்டரசின் சமயம் என்றாலும் பிற சமயங்கள் இயங்குவதைத் தடுக்காதது சமயச் சார்பற்ற நிலையைத் தாங்கி நிற்கிறது என்றால் தவறல்ல.
சமயச் சார்பற்ற நாடு என்றால் என்ன? ஆங்கிலத்தில் “செக்யுலர்” என்ற சொல் லத்தின் மொழியிலிருந்து வந்தது. ஆரம்பத்தில் அதன் பொருள் சமயச் சார்புடையதாக இருக்கவில்லை. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அதற்குப் புது பொருள் வழங்கப்பட்டது.
அதாவது, அரசு எந்தச் சமயத்தையும் சார்ந்ததாக இல்லாமல் நடுநிலை பேணும் என்றாயிற்று. இதற்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் தந்த நாடுகளில் ஃபிரஞ்சும், அமெரிக்காவும் அடங்கும். இப்பொழுது பல நாடுகள் இந்தியா, சீனா, ஐக்கிய முடியரசு மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மதச் சார்பற்ற நாடுகளாகத் திகழ்வதைக் காணலாம். ஆனால், இங்கும் சில பிரச்சினைகள் இருப்பதும் கண்கூடு.
மதச்சார்பற்ற நாடு எனின் அது மதத்தை மட்டும்தான் குறிவைக்கிறது, இறைவனை அல்ல என்று கூட சொல்லலாம். இறைவனை ஏற்றுக்கொள்வோர் சமயத்தை நம்ப வேண்டும் என்றபோதிலும் சமயத்தை உருவாக்கிய மனிதன் இறைவனைத் தனதாக்கிக்கொள்ள முற்பட்டு இறைவனுக்குச் சமயத்தைப் புகுத்திவிட்டான்.
இந்தச் சமய வேறுபாடுகள் இன்று உலகைத் துன்புறுத்துகிறது. இவ்வாறு மதச்சார்பற்ற நாடு என்றால் அது எல்லா மதங்களையும் மதிக்கும் தத்துவத்தை வெளிப்படுத்துவதோடு சமய அரசியலுக்கு இடம் தராத நாடு என்று சொல்லலாம். சமயச் சார்பற்ற நாடு என்பதற்குப் புது அர்த்தத்தைக் கண்டால் தான் சமயப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்.
நடப்பில் இருக்கும் சட்டம் எல்லா சமயங்களுக்கும் இடமளிக்கின்றது. எல்லா சமயங்களையும் ஏற்றுக்கொள்வதே மதச் சார்பற்ற நாடு என்ற தகுதியைப் பெறும். எனவே, பிரதமர் எப்படிப்பட்ட மதச் சார்பற்றதை ஏற்க மறுக்கிறார் என்பது தெளிவாக இல்லை. எனினும், எல்லா மதங்களும் யாதொரு இடர்களுக்கும் உட்படுத்தாமல் இயங்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாமிற்கு அரசமைப்புச் சட்டம் முதன்மை தருவதால் பிற மதங்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்ல இயலாது.
பிரதமர் அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது. அதே சமயத்தில், எண்பதுகளில் துன் டாக்டர் மகாதீர் சமய விஷயங்களில் மேற்கொண்ட முறையை புதுப்பிக்கக்கூடாது என்பதே மலேசியர்களின் இன்றைய பிரார்த்தனையாக இருக்கும்.
திருநங்கை, திருநம்பி சமுதாயம் இயற்கையின் கோளாறு என்பதைப் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அவர்களை ஒதுக்குவது, அவர்களின் உறவைக் குற்றப்படுத்துவது காலனித்துவத்தின் சமயக் கொள்கை சட்டமாக்கப்பட்டதை மறு உறுதிப்படுத்துவதாகவே கருதப்படும். இந்தப் பிரச்சினையை விஞ்ஞான மருத்துவ முறையை மனத்தில் கொண்டு அணுகுவதுதான் மனித நேயம்.