அம்னோவை ஆட்டி வைக்கும் ஸாஹிட்டின் அதிரடி முடிவுகள்

இராகவன் கருப்பையா – அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த ஒரு வார காலமாக கட்சியில் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பாதிக்குமா என பலவாறான ஆரூடங்கள் எழுந்துள்ளன.

இதுவரையில் இருந்த அம்னோ தலைவர்களிலேயே பலம் குன்றிய ஒருவராகக் கருதப்படும் அவர் கட்சியில் தனது எதிராளிகளை ஒட்டு மொத்தமாகக் களையெடுத்துள்ளார்.

அதற்கு முன்னதாக, தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் இம்முறை போட்டி இருக்கக் கூடாது எனும் ஒரு தீர்மானத்தை கட்சியின் பொதுப் பேரவையின் போது மிகவும் லாவகமாக அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

இதன் வழி, தலைவர் பதவிக்குப் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததாகக் கருதப்படும் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரியின் கனவையும் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடினின் எண்ணத்தையும் நொடிப் பொழுதில் அவர் சுக்கு நூறாக்கினார்.

போட்டி இருந்திருந்தால் அநேகமாக கைரியிடம் அவர் தோல்வியடைந்திருக்கக் கூடும் எனும் சாத்தியத்தையும் நாம் நிராகரித்துவிட முடியாது. கைரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வேளையில் ஹிஷாமுடின் 6 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜொகூரின் செம்பரோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஷாமுடினை அந்தப் பதவிதான் காப்பாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இல்லையேல் கைரியின் கதிதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சி அமைப்பது எனும் சூழல் நிலவிய போது ஹிஷாமுடினின் தலைமையில்தான் பாரிசானைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தானுக்கு ஆதரவாக சட்டப் பத்திரத்தில் கையெழுத்திட்டது பிறகு அம்பலமானது. ஆதே போல கடந்த 2018ஆம் ஆண்டு முற்பகுதியில் பக்காத்தான் ஆட்சி கவிழ்ப்பிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு என நம்பப்படுகிறது.

அம்னோவை தோற்றுவித்த ஓன் ஜாஃபாரின் பேரனும் நாட்டின் 3ஆவது பிரதமர் ஹூசேன் ஓனின் மகனுமான அவர் இது போன்ற திரைமறைவு வேலைகளில் சாணக்கியர் என்றே தெரிகிறது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றோரு முக்கியப்புள்ளி ஊராட்சி வீடமைப்புத்துறையின் முன்னாள் அமைச்சர் நோ ஓமார். கட்சிக்கு எதிராக செயல்பட்டனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது உச்சமன்றத்தின் முடிவில்லை என்று பலர் வாதிடுகின்றனர்.

எனவே கட்சியில் தனது பலத்தை ஸாஹிட் வலுப்படுத்திக் கொண்டுள்ளதைப் போல் தோன்றினாலும் கீழ்மட்ட உறுப்பினர்களிடையே சலசலப்பு அதிகரித்துள்ளதைப் போல் உள்ளது. இதனால் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அம்னோவுக்கான ஆதரவு மேலும் சரியக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் பக்காத்தானுக்கும் அது பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பொதுத் தேர்தலில் கிடைத்த மகத்தான ஆதரவில் குளிர் காயும் பெரிக்காத்தானுக்கு சுலபமானதொரு வெற்றிக்கு இது வழி வகுத்தாலும் வியப்பில்லை என்றே சொல்ல வேண்டும். ‘பச்சை அலை’ எனப்படும் பாஸ் கட்சியின் ஊடுருவலையும் திரை மறைவில் தந்திர வலைகளை வீசும் பெர்சத்துவையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த பலர், குறிப்பாக சில புதிய அமைச்சர்கள் திடீர் பதவி சுகபோகம் வழங்கிய மயக்கத்தில் உள்ளாசமாக வலம் வந்துக் கொண்டிருப்பதையும் மக்கள் கவனிக்காமல் இல்லை. அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை அவர்கள் உணர மறுப்பதையே இது காட்டுகிறது. இதுவும் கூட அரசாங்கத்திற்கு எதிர்மறையாக அமையக் கூடும்.

எனவே அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியை போல் தன்மூப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸாஹிட்,  கட்சியில் தனது பலம் பெருகியுள்ளது என்று நினைத்தால் அது வெறும் மாயையாகக் கூட அமையக் கூடும்.

நீதிமன்றத்தில் அவர் எதிர்நோக்கியுள்ள ஊழல் வழக்குகள் ஒரு புறமிருக்க, களத்தில் இறங்கி கீழ்மட்ட உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு அவர் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் அவருடைய அரசியல் வாழ்க்கை ஒரு கேள்விக் குறியாக அமையும்.