இராகவன் கருப்பையா – இனவாதமும் மதவாதமும் ஒருங்கிணைந்து நாட்டின் ஆட்சியை கைபற்ற முனைந்த நிலையில், நட்டின் நல்ல காலம் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டணி ஒரு தகுதியான பிரமரின் கீழ் ஆட்சி அமைக்க முடிந்தது.
நம் நாட்டில் இனத்துவேசம் தொடர்பான சம்பவங்கள், அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அதனை ஒரு குற்றமாகப் பிரகடனப்படுத்தி, அக்கொடுமைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கான காலம் கணிந்துவிட்டது.
இதைத்தான் சமீப காலமாக பல்வேறுத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை செயல் வடிவமாக்கும் சக்தியைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் இவ்விவகாரம் மீது அக்கறைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அதற்கு காரணமும் உண்டு.
12.2018 -இல் அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை (The International Convention on the Elimination of All Forms of Racial Discrimination (ICERD)- யை மலேசியா அங்கீகரிக்கும் என்ற சூழல் மகாதீர் பாக்காத்தான் அரசாங்கம் வழி பிரதமராக இருக்கும் போது உருவானது.
இதனை முழுமையாக எதிர்த்து அம்னோவும் பாஸ் கட்சியும் கூட்டாக திரண்டனர். ஆயிரக்கணக்கான இனவாதிகளும் மதவாதிகளும் 8.12.2018-இல் தலைநகரை முற்றுகையிட்டனர்.
நான்காண்டுகள்க்கு பிறகு இன்று கட்சிகள் மாறியுள்ளன. மிதவாத கூட்டணியில், அம்னோவுள்ளது. இந்த சூழ்ல் உகந்ததா?
இன்னொரு கோணத்தில், நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களை கொண்டு இனவாத நடைமுறயை சீராக்க இயலுமா என்பதாகும்.
ஆகக் கடைசியாக, ஜி25 எனப்படும் முன்னாள் அரசாங்க உயர் அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பு இதன் தொடர்பாக ஆணித்தரமான அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
அப்படி ஒரு சட்டம் இருந்தால்தான் பாதிக்கப்படுபவர்கள் காவல்துறையில் புகார் செய்ய இயலும் எனறு கூறிய அந்த அமைப்பின் பேச்சாளர் நூர் ஃபரிடா, அண்மைய காலமாக நிகழ்ந்து வரும் இளையோர் சம்பந்தப்பட்ட இனத்துவேச சம்பவங்களானது, இனங்களுக்கிடையிலான சகிப்துத் தன்மை குறைந்து வருவதையே குறிக்கிறது என்றார்.
தேசிய பள்ளிகளில் அளவுக்கு அதிகமான நேரம் சமய பாடங்களுக்கு ஒதுக்கப்படுவதால் மத ரீதியாக பிள்ளைகள் பிரிக்கப்படுவது இதற்கான மூலக் காரணம் என அவர் மேலும் விவரித்தார்.
ஆக, இப்பிரச்சினை பள்ளிகளிலேயே துளிர்விடுகிறது என அடையாளம் காணப்பட்டுள்ளதால் மிக விரைவில் இதற்கெதிராக சட்டம் இயற்றப்பட்டு பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு செய்தால்தான் இப்பிரச்சினைக்கு உரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் சில அடாவடி ஆசிரியர்களும் அடங்குவார்கள். தயவு தாட்சண்யமின்றி அத்தகைய ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் ‘வேலியே பயிரை மேய்கிற’ நிலைமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இப்பிரச்சினை சன்னம் சன்னமாக மோசமாகி வருவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கியக் காரணம் எனும் நிதர்சனத்தை மறுப்பதற்கில்லை.
ஏனெனில் நம் நாட்டை பொருத்த வரையில் ஏராளமான அரசியல்வாதிகள் காலங்காலமாக இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்திதான் வயிறு கழுவி வருகின்றனர். அப்படியில்லை என்றால் பிழைப்பு நடத்த முடியாமல் போய்விடும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த தேர்தலின் முடிவுகள் நம்மை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. பாஸ் மற்றும் பெர்சத்து கூட்டணி ஒரு முழுமையான் ஒரு இனவாதமும் மதவாதமும் கொண்ட கூட்டணி. ஆட்சி அவர்களிடம் சென்று இருந்தால் நமது நிலைமை மிகவும் இக்கட்டான சூழலுக்கு போயிருக்கும். தலை தப்பியது எனலாம்.
அன்பாரின் கூட்டணி ஒரு புதிய அரசியலை கையாளும் இக்கட்டான சூழலில் உள்ளது. இருப்பினும் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் மேம்பாடு என்ற வகையில் ஒரு தரமான ஆட்சியை வழங்குவதின் வழி அன்வார் ஒரு புதிய மலேசியர்களுக்கான அத்தியாயத்தை வழங்க இயலும்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அஸிஸ் கடந்த ஆண்டு இது குறித்து கருத்துரைத்தார். இனத்துவேசத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்ட முடியும் என்றார் அவர்.
அவர் தற்போது அரசாங்கத்திலோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாததால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனினும் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் அஸ்லினா அல்லது அதன் துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங் முதலியோர் இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்களும் கூட மவுனமாகவே உள்ளனர்.
அண்மையில் அமலாக்கம் கண்ட ‘உண்டி 18’, மற்றும் கட்சி தாவலுக்கு எதிரான சட்டம், போன்றவற்றை இயற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய சிரத்தை இவ்விவகாரத்திலும் இருக்குமேயானால் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.
கடந்த 1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தென்னாப்ரிக்க அதிபர் எஃப் டபல்யு டி கிளர்க் செய்த ஒரு அதிரடி முடிவினால் அந்நாட்டின் தலையெழுத்தே மாறியது.
இனவாதத்திற்கு எதிராகக் குரல் எழுப்பி சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பின போராட்டவாதியான நெல்சன் மண்டேலா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நூற்றாண்டு காலமாக அந்நாட்டை சூழ்ந்திருந்த இருள் நீங்கியது.
நமது நாட்டில், முழுமையாக இனவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால், நமது அரச்மைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். அது ஒரு எட்டாத கனியாகும். இருப்பினும் சின்ன சின்ன நடைமுறை இனப்பாகுபாட்டையும் இனதுவேசத்தையும் இருக்கும் சட்டங்களை கொண்டு கட்டுபடுத்த இயலும். அதற்கும் ஒரு மாற்று அரசியல் சிந்தனை பெரும்பான்மை இனத்திடம் உருவாக வேண்டும்.