இராகவன் கருப்பையா – “மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை புரிந்து கொண்டான், இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஹோ…..”, என 60 ஆண்டுகளுக்கு முன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஆயிரம் உண்மைகள் புதைந்துள்ளன!
அகில உலகமே கணினி யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் தற்போதைய சூழலில் நாய்களின் மோப்ப சக்திக்கு ஈடான ஒரு கருவி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுவே நிதர்சனம்.
கடந்த வாரம் துருக்கியிலும் சிரியாவிலும் நிகழ்ந்த நில நடுக்கப் பேரிடரில் சிக்கிக் கொண்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான நாய்களின் அரிய சேவைகள் பற்றி தற்போது சர்வதேச நிலையில் பேசப்படுகிறது.
ஜெர்மனி, மெக்சிக்கோ, இந்தியா, போலந்து, ஸ்பெய்ன் மற்றும் மலேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மீட்புப் படையினருக்கு இந்த மோப்ப நாய்கள்தான் இரவும் பகலுமாக உறுதுணையாக இருந்து சேவையாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரையில் 35,000திற்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ள அப்பேரிடரில் உயிரோடு புதையுண்டுக் கிடப்போரை காப்பாற்றுவதற்கும் இறந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கும் அதீத சக்தியுடைய அந்த நாய்களின் மோப்பத்தன்மையைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
துருக்கியிலும் சிரியாவிலும் களமிறக்கப்பட்டுள்ள அந்த மோப்ப நாய்களின் அளப்பறிய சேவைகள் சர்வதேச நிலையில் ஊடகங்களின் அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
அகில உலகையே இயக்கிக் கொண்டிருக்கும் கணினி பயன்பாட்டிற்கு சவாலாக விளங்கும் இந்த மோப்ப சக்தி பல வேளைகளில் மனிதனுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான ஒரு சேவை என்பதையே இது புலப்படுத்துகிறது.
உலகளாவிய நிலையில் கோறனி நச்சிலின் தாக்கத்தினால் மனுக்குலம் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும் கூட இந்த ஜீவன்களின் சேவைகளை பல நாடுகள் பயன்படுத்தின என்பதையும் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.
அமெரிக்கா, ஃபின்லாந்து மன்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளின் விமான நிலையங்களில் நோய் தொற்றியுள்ள பயணிகளை மோப்பம் பிடித்து அடையாளம் காண்பதற்கு நாய்கள் உதவியதை உலகறியும்.
நவீனக் கருவிகளின் கண்டுபிடிப்பு உலகளாவிய நிலையில் தற்போது பிரமிக்கத்தக்க வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது. இருந்த போதிலும் சற்றும் ஈடில்லாத இந்த மகத்தான மோப்ப சக்தி, நாய்களுக்கு இயற்கையாகவே வழங்கப்பட்டுள்ள ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த டிசம்பர் மாத மத்தியில் கோலாலம்பூருக்கு வெளியே 31 பேரின் உயிர்களை பலி கொண்ட ‘பத்தாங் காலி’ நிலச்சரிவு சம்பவத்தின் போதும் நமது மோப்ப நாய்கள் ஆற்றியப் பங்கு அளப்பறியது.
எனினும் பல நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் இந்த ஜீவன்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றன. வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவை மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு உணவாக்கப்படுவது வேதனையான ஒரு விடயம்.
நம் நாட்டிலும் கூட பல வேளைகளில் பொறுப்பற்ற சிலர், குறிப்பாக நகராண்மைக்கழக ஊழியர்கள் மிகவும் கொடிய வகையில் அவற்றை கையாளுகின்றனர்.
சாலைகளில் உரிமமின்றி சுற்றித் திரியும் தெரு நாய்களை வளைத்துப் பிடிக்கும் போது கொஞ்சமும் உணர்ச்சியின்றி முரட்டுத்தனமான யுக்திகளைக் கையாண்டு அவற்கைப் பிடித்து தரதரவென இழுத்து தங்களுடைய வாகனங்களில் ஏற்றுகின்றனர். பல்வேறுத் தரப்பினர் கண்டனக் குரல் எழுப்பினாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
கடந்த மாத முற்பகுதியில் சிலாங்கூர் கோல லங்ஙாட் நகராண்மைக் கழக மையம் ஒன்றில் ஏராளமான நாய்கள் முறையாக உணவு வழங்கப்படாத நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தக் கொடூரக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.
எனவே உலக மகா கணினியையும் மிஞ்சும் ஒரு சக்தியை பிறப்பிலேயே உடலில் உள்வாங்கியிருக்கும் இந்த ஜீவன்கள் “உயிர் காப்பான் தோழன்” எனும் அடிப்படையில் நடத்தப்படுவது அவசியமாகும்.