அரசாங்க வேலைகளும், இலவு காத்த கிளிகளாகும் இந்தியர்களும்

இராகவன் கருப்பையா – அண்மைய வாரங்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், “கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்” எனும் எதிர்பார்ப்பைத் தாண்டி நம் சமூகம் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுச் சேவைத் துறையை பிரதமர் அன்வார் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமி செய்த பரிந்துரைக்கு இனச் சாயம் பூசி சர்ச்சையாக்கியக் கும்பலின் அடாவடிச் செயல் அறிவிலித்தனமான ஒன்று.

அரசாங்கத் துறை இவர்களுக்கு மட்டுமே சொந்தம் போலவும் இவர்கள் மட்டும்தான் அதில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் தோரணையிலும் சிலர் செய்யும் வாதங்கள் நமக்கு வியப்பாக உள்ளது மட்டுமின்றி ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இவ்விவகாரம் நீண்ட நாள்களாக கவனிக்கப்படாமல் கிடப்பது அன்வாருக்கும் நன்றாகவேத் தெரியும். இருந்த போதிலும் இராமசாமியின் கருத்தை நிராகரிப்பதைப் போன்ற ஒரு நிலைப்பாட்டில் மிகவும் லாவகமாக அதிலிருந்து அவர் நழுவிக் கொண்டார்.

பிரதமரின் போக்கை சாதகமாக எடுத்துக் கொண்ட இனவாதக் கும்பல், அவர்களுடைய பிழைப்பில் இராமசாமி மண்ணை அள்ளிப் போடுவதைப் போன்ற ஒரு ஐயப்பாட்டையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இவ்விவகாரத்தை பூதாகரமாக்கிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் அரசாங்க வேலைகளைப் பொருத்த வரையில் நமக்கு விமோசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய வரையில் இல்லை எனும் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நாம் நகர வேண்டும். நகர வேண்டும் என்று சொல்லவதை உயர வேண்டும் என்பதே பொருத்தமாகும்.

அரசாங்க வேலைதான் வேண்டும் என இவர்களிடம் மீண்டும் மீண்டும் நாம் முட்டி மோதி கெஞ்சிக் கூத்தாடிக் கிடப்பதில் இனிமேலும் அர்த்தமில்லை. அது நடக்கப் போவதுமில்லை என்பதையும் அவர்கள் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இவ்விவகாரத்தில் அன்வாரின் பாராமுகம் அவரைப் பொருத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எதிரணியில் உள்ள இனவாதக் கும்பலும் மதவாதக் கும்பலும் எப்போது அன்வார் சறுக்குவார், பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கலாம் என்று காத்துக் கிடக்கின்றனர்.

தனியார் துறையிலும் நம் சமூகத்திற்கு இதே போன்ற பரிதாப நிலைதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இந்த அவல நிலையை ஒரு படிப்பினையாகவும் தன்முனைப்பாகவும் எடுத்துக் கொண்டு “நம் கையே நமக்குத் துணை” எனும் அடிப்படையில் சுயகாலில் நிற்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியக் காலம் கணிந்துவிட்டது. நமக்கு வேறு வழியே இல்லை. எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளதைப் போலவே தெரிகிறது.

சுயமாக ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்கி, “சிறு துளி பெரு வெள்ளம்” போல சன்னம் சன்மாக அதனை மேம்படுத்த முயல வேண்டும். அரசாங்க வேலை கிடைக்கவில்லையே என்று  வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

“அரசாங்க வேலைகளும் பதவி உயர்வுகளும் இன ரீதியில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது” என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல சில தரப்பினர் உளறுகிற போதிலும் உண்மை நிலவரம் என்ன என்பதை அறியாதவர் யாரும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் ஓய்வூதியத்தையும் மருத்துவ சலுகைகளையும் தவிர வேறு எந்த விதமான அனுகூலங்களும் அரசாங்க வேலைகளில் நமக்கு இல்லை எனும் நிதர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சுய தொழில் ஒன்றைத் தொடங்கி அதில் சிறப்பாக வளர்ச்சி கண்டால் ஓய்வூதியமும் மருத்துவ சலுகைகளும் ஒரு பொருட்டல்ல.

சீன சமூகத்தினர் அரசாங்க வேலை கிடைக்கவில்லையே என்று எந்தக் காலக் கட்டத்திலும் வருத்தப்பட்டதாக தெரியவில்லை. “சுய தொழில்” என்பது அவர்களுடைய “தாரக மந்திரம்.” தங்களுடைய எண்ணங்களில் அதற்கு மட்டுமே அவர்கள் முதலிடம் கொடுக்கின்றனர்.

எனவே இராமசாமியின் கோரிக்கையையும் அதனைத் தொடர்ந்து வெளியான அறிவிலித்தனமான எதிர்மறைக் கருத்துக்களையும் ஒரு சாதகமானத் தொடக்கமாக எடுத்துக் கொண்டு சுய காலில் நிற்பதற்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தினர், குறிப்பாக இளையோர் உடனே முடுக்கிவிட வேண்டும். அரசாங்க வேலையை எதிர்ப்பார்க்கும் நாம்   இனி வரும் காலங்களில் இலவு காத்த கிளிகளாவோம்.