இராகவன் கருப்பையா – கடந்த மாதத் தொடக்கத்தில் தமது புதல்வி நூருல் இஸாவை உயர் பொருளாதார ஆலோசகராக நியமித்த பிரதமர் அன்வார் இன்று வரையிலும் கூட பல்வேறுத் தரப்பினரின் கண்டனங்களுக்கு இலக்காகி வருகிறார்.
நூருல் பொருளாதாரத் துறையில் பட்டப்படிபை முடித்தவர் என்றும் அவருக்கு அதீதத் திறமை இருக்கிறது எனவும் அவர் சம்பளம் வாங்கமாட்டார் என்றும் அன்வார் சமாதானம் கூற முற்பட்ட போதிலும் “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” எனும் அடிப்படையில் பொது மக்களும் கூட அன்வாரைக் கடிந்து கொள்கின்றனர்.
ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவதற்கு எதிராக பல்லாண்டு காலமாக குரல் எழுப்பி வந்த அன்வாரின் இந்நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தேர்தலுக்கு முன் ஒரு மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்வதா என எதிர் கட்சியினர் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும் கூட அவரை சாடி வருகின்றனர்.
நெருக்குதல்களுக்கு அடிபணிந்து, தமது தந்தைக்கான உயர் பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக இவ்வாரத் தொடக்கத்தில் அறிவித்த நூருல், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இணைந்து கொண்டார்.
எனினும் அன்வார் குடும்ப அரசியல் நடத்துவது புதிதான ஒன்றல்ல. அண்மையில் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலிலும் கூட அவர்களுடைய பாரம்பரியத் தொகுதியான பினேங், பெர்மத்தாங் பாவில் நூருல் போட்டியிட்ட வேளையில், அவருடைய மனைவி வான் அஸிஸா தலைநகர், பண்டார் துன் ரஸாக் தொகுயில் களமிறங்கினார்.
அன்வார் தற்போது முழுமையாக அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் வான் அஸிஸா ஒதுங்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்குத் தொகுதி வழங்கப்பட்டதானது.
கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய போதும் இதே போன்ற ஒரு நிலைதான். அத்தேர்தல் நடைபெற்ற போது அன்வார் சிறையில் இருந்தது நாம் அறிந்த ஒன்றே.
தேர்தலுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையான அன்வார், சிறிது நாள் கழித்து பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராகும் பொருட்டு இடைத் தேர்தல் ஒன்றைத் தூண்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரி செம்பிலான், போட்டிக்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டன்யால் பாலகோபால் ராஜினாமா செய்தார்.
அந்த சமயத்தில் வான் அஸிஸா சிலாங்கூர், பாண்டான் தொகுதியிலும் நூருல், பெர்மத்தாங் பாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வான் அஸிஸாவையோ நூருலையோ வழி விடச் சொல்லாமல் ஏன் பாலகோபாலை ராஜினாமா செய்ய நிர்பந்திக்க வேண்டும்?
நூருலை தமது அரசியல் வாரிசாக அன்வார் வளர்த்து வருவது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். அதற்கு ஏற்றவாறு நூருலுக்கும் திறமை இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.
ஆனால் அன்வார் சிறையில் இருந்த காலத்தில் அவருடைய பி.கே.ஆர். கட்சிக்கு இடைக்காலத்திற்கு தலைமையேற்று அதனை வழிநடத்தவே வான் அஸிஸா அரசியலில் நுழைந்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே அடிப்படையில் அவர் அரசியல்வாதியே கிடையாது.
மலேசிய அரசியலில் கடந்த காலங்களில் எந்த ஒரு பிரதமரின் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாக சரித்திரம் கிடையாது.எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில் இருப்பதால், அன்வார் தனது பதவியை எப்படி கையாள்கிறார் என்பது மிகவும் முக்கியமாகிறது.
வெளிப்படைதன்மையுடனும், நேர்மையாகவும் குடும்பத்தின் ஒட்டு மொத்த சொத்தின் மதிப்பையும் அறிவித்த அன்வார், ஒரு முன்னுதாரண பிரதமராக வாழ்ந்தார் என்பதை நிலைநாட்ட முயல வேண்டும்.
இலஞ்சம் ஊழல் இவற்றில் இது வரை சிக்கி தவித்த நாடும் மக்களும், அன்வாரின் சேவையாலும் தியாகத்தாலும் முன்னிலைக்கு வரும் பாதையில் நகரும் என்ற நம்பிக்கயை அவர் தர வேண்டும்.
அன்வாருக்கு பல நண்பர்கள் உண்டு, அவரின் பதவியின் வழி இந்த நண்பர்கள் அறுவடையின் பயனை தேடுவது இயற்கை. இதிலிருந்து அன்வார் எப்படி வேறுபடுவார் என்ற வினாவும் எழுகிறது.
அன்வார் ஒரு சீர்திருத்தவாதி, திறமை மிக்கவர், பழிவாக்கப்பட்டவர், சிறை சென்றவர், மிதமான மதவாதி, இந்தியர்கள் மீது ஓரளவு அக்கரையும் கொண்டவர். இவரின் அரசாங்கம் ஒரு புதிய விடியலை நமக்கு வழங்குமா? ஒற்றுமை அரசின் மத்தியில் உள்ள, நம்பிக்கை அரசாங்கம், வழங்கும் என்பதை அன்வார்தான் தனது நடத்தை வழி காட்ட வேண்டும்.