உலகத்தரமான மலேசியாவின் ஊழல் வழக்குகள் – கி.சீலதாஸ்

கையூட்டு என்பதன் பொருள் செய்யும் குற்றச்செயல்களைச் சட்டத்திலிருந்து மறைக்க, தப்பிக்க கொடுக்கப்படும் கைக்கூலி ஆகும். வேண்டுமென்றே மனச்சாட்சிக்கு எதிராக, முறைக்கேடான செயல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, மக்களின் பணத்தை மோசடி செய்வதற்காகக் கையாளப்படும் சட்டவிரோதச் செயல்.

அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் இறங்குவோரின் பிரதான குறிக்கோள் பணம். ஆனால், அது வஞ்சக எண்ணத்தை, குணத்தைப் பகிரங்கப்படுத்துகிறது. இலஞ்சம் கொடுப்போரும், பெறுவோரும் நாணயத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

ஆனால், அவர்களின் செயல்கள் யாவும் நாணயமற்ற தரத்தை, குணத்தை, அணுகுமுறையைப் பகிரங்கப்படுத்தும். பணம் கிடைத்தால் போதும். அதைப் பெறுவதே இலட்சியம். மார்க்கம் முக்கியமல்ல.

பணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அமெரிக்காவின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளரான மார்க் டுவெய்ன் (1835-1910) சொன்னது நினைவுக்கு வருகிறது. “சில மனிதர்கள் அந்தஸ்த்தை வழிபடுவார்கள், சிலர் வீரர்களை வழிபடுவார்கள், சிலர் அதிகாரத்தை வழிபடுவார்கள், சிலர் கடவுளை வழிபடுவார்கள். ஆனால், இவர்கள் எல்லாம் பணத்தையே வழிபடுவார்கள்” என்றார். எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை ஊன்றிக் கவனித்தால் புலப்படும்.

பணம் எல்லா குற்றங்களையும் மறைக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது எனின் மறுப்பதற்கில்லை. பொது மக்களின் பணத்தைப் புனிதத் தீர்த்தத்துடன் ஒப்பிட்டு எவர் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம் என்ற வாய்மொழியையும் நாம் கவனத்தில் கொண்டிருப்பது நல்லது.

பணத்தைப் பாதுகாப்பதில் காட்டப்படும் உற்சாகம் நாணயமான வாழ்க்கைக்குக் காட்டப்படுவதில்லை என்பதும் வாய்மொழியே. ஆகமொத்தத்தில், மலேசியாவில் பணத்துக்கு அதிலும் குறிப்பாக, ஊழலுக்குக் காட்டப்படும் மரியாதை பண்பான அரசியலுக்குக் காட்டப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இலஞ்ச ஊழல் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவியத் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பும் ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்தன. ஆனால், அவை இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் அளவுக்கு இல்லை.

தவறான முறையில் கோடிக்கணக்கில் பணம் சேர்த்த குற்றத்திற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் பலர் மீது குறிப்பாக அரசியல்வாதிகள் மீது இலஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எதைக் குறிக்கிறது? இந்த நாடு நல்ல வளமிக்க நாடு. பணத்துக்குப் பஞ்சமில்லை. அதைப் பெறும் குறுக்கு வழியைத் தெரிந்து கொண்டால் செல்வம் பெருகும். ஆடம்பர வாழ்க்கைக்குக் குறை இருக்காது.

இன்றையப் பிரதமர் அன்வர் இபுராஹீம் உலக கள்ளப் பணப் பட்டியலில் மலேசியா முதன்மை வகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பதை இதமாகப் பார்ப்பது முற்றிலும் தவறாகும். மலேசியர்கள் தங்களின் அரசியல் கட்சி விசுவாசத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நாட்டின் நலத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணர வேண்டும். உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் இது.

பிரதமரின் விளக்கத்தின்படி உலகிலேயே மலேசியாவில்தான் பணக் கையாடல், கருப்புப் பணசலவைத் தொடர்பான வழக்குகள் அதிகம்.

இது கவலைக்குரிய நிலையாகும். இதற்குக் காரணம் போதுமான சட்டம் இல்லை என்று சொல்லலாமா? அது பொருத்தமற்ற விளக்கம் எனலாம்.

இந்த நாட்டில் எல்லாவிதமான சட்டவிரோதச் செயல்களைத் தண்டிக்கும்  சட்டங்கள் இருக்கின்றன. அவை இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாது சுயநலத்துகாக, பணத்துக்காகப் பேய் போல் அலைவது ஏன்?

இன்று தகவல் ஊடகங்களின் கவனம் எல்லாம் ஊழல் குற்றச்சாட்டு அல்லது மோசடி வழக்குகளாகும். அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்வாதிகள். ஆளும் கட்சிகளோடு தொடர்புள்ள தொழிலளதிபர்கள், உயர் அரசு பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதை வெளிச்சப்படுத்துகின்றன ஊடகத் தகவல்கள்.

நீதிமன்ற வழக்குகள் பரபரப்பூட்டும் தரத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட செய்திகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பெருமை ஈட்டித் தருவதற்குப் பதிலாக அவமானத்தைக் கொடுக்கும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் என்பது புரியாதப் புதிராக உள்ளது.

இத்தகைய கேவலமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா என்று கேட்பதை விட இப்படிப்பட்ட ஈனச் செயல்களுக்கு இடம் கொடுத்தால் நாடு நலிவுறும் என்பதை உணர்த்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? அதை செய்தால் பலன் தருமே!

இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது குற்றச்செயல்கள் யாவும் அதிலும் குறிப்பாக ஊழல் வழக்குகளில் அரசியல் தலைவர்களின் பங்கு இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு அரசியல் முலாம் பூசப்பட்டு திசை திருப்பும் நடவடிக்கைகள் மும்முரமாக இருப்பதைக் கவனிக்காமல் வெறுமனே இருப்பது ஆபத்தைத் தருவிக்கும் செயலாகும்.

ஒருவர் ஊழல் செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டால் அவர் நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பெற்று தண்டிக்கப்பட்டால் அன்றி அவர் நிரபராதியாகவே சமுதாயத்தில் சுற்றித் திரியலாம்.

இங்கே ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். ஊழல்வாதிகள் தங்களின் இழிவான முறையில் ஈட்டிய பணத்தை வைத்துக்கொண்டு தங்களின் செல்வாக்கைப் பெருக்க தயங்கமாட்டார்கள். தங்களின் குற்றச்செயல்களை மறைக்க பல நடவடிக்கைகளில் இறங்குவதையும் தடுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு வழி உண்டு. மற்ற குற்றங்களைச் செய்தவர்கள், அரசியல்வாதிகள் அல்லது ஊழல்வாதிகள் போல் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு, விளம்பரம் கிடைக்காது.

இப்பொழுது அமலில் இருக்கும் நீதிமன்றச் சட்டங்கள் ஊழலைத் தடுக்கும் தரத்தைக் கொண்டிருக்கின்றனவா என்பதை மறுபரீசிலனைச் செய்து ஒரு நல்ல முடிவைக் காண வேண்டும்.

அதற்காகப் பிற நாடுகளில் இருப்பது போல் துரிதமான தீர்ப்பு உடனடியாகத் தண்டனை நிறைவேற்றும் என்ற தத்துவத்தை நான் ஆதரிக்கவில்லை. மாறாக, எல்லோரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும், வாழ வேண்டும். எவர்க்கும் தீங்கு நேராத வகையில் சட்டமும் நீதியும் அணுக வேண்டும்.

அதே வேளையில், மக்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், கோடிகளை நாடுவோர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்கம் நல்லது தான். தங்கக் கட்டிலில் படுத்தாலும், மெத்தையும் தலையணையும் தங்கம் அல்ல. தங்கத்தால் செய்த தலையணையில் தலை வைத்து உறங்க முடியாது. தங்கத் தட்டிலில் உணவு வந்தாலும் உணவு தங்கமல்ல. தாகத்தைத் தீர்க்கும் கோப்பையில் தரப்படும் தண்ணீர் தங்கம் அல்ல. தங்கம் பசியைத் தீர்க்காது, தாகத்தை நீக்காது.

பல பாவங்களைச் செய்துவிட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோருவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதைத்தானே தண்டனை சட்டம் உணர்த்துகிறது. ஊழல் தடுப்பு செயல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர நல்ல கல்வி முறை தேவை. தவறான முறையில் பணம் சேர்ப்பது தர்மம் அல்ல என்பதை உணர்த்த வேண்டும். அதைச் செய்யும் பொறுப்பு அரசிடம் மட்டும்தான் உண்டு.