இராகவன் கருப்பையா – இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக விஷக் கருத்துகளை உமிழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் மகாதீருக்கு ஏற்றவாறு அவருடைய மகன் முக்ரீஸும் பேசத் தொடங்கிவிட்டார்.
அவர்கள் இருவருமே தற்போது நீரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல அரசியலில் தத்தளித்துக் கொண்டிருப்பதால் ஏதாவது பேசித் தொலைய வேண்டும் என்பதற்காக வெறுமனே உளறிக் கொண்டிருப்பதை மக்கள் உணராமல் இல்லை.
அவர்களுக்கு மக்கள் நலனைப் பற்றியோ இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் எனும் அக்றையோ துளியளவும் இல்லை என்பதையே இது புலப்படுத்துகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் வைப்புத் தொகையைக் கூட இழக்கும் அளவுக்கு அவ்விருவருமே படு தோல்வியடைந்தது நமக்குத் தெரியும்.
ஒரு காலக்கட்டத்தில் லங்காவி தீவை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்திய மகாதீரை அத்தீவு மக்களே தற்போது நிராகரித்துள்ளனர். அதே போல முக்ரீஸுக்குப் பாரம்பரியத் தொகுதியாக விளங்கிய கெடாவின் ஜெர்லுனிலேயே அவர் மண்ணைக் கவ்வினார்.
நிலைமை இப்படி இருக்க, தொடர்ந்தாற் போல் சரிவு கண்டுவரும் தனது மகனின் அரசியல் வாழ்க்கைக்கு புத்துயிரூட்ட தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் மகாதீர் கடைசியாக இப்போது புத்ரா எனும் ஒரு கொசுக் கட்சியுடன் இணைந்துள்ளார்.
அதே வேளை இனவாதத்தையும் மதவாதத்தையும் பறைசாற்றும் பெரிக்காதானில் தனது பெஜுவாங் கட்சியை இணைத்துக் கொள்ளுமாறு அதன் வாசற்படியில் முக்ரிஸ் நிற்கிறார்.
ஒரு முன்னாள் அமைச்சரான இப்ராஹிம் தோற்றுவித்த அக்கட்சியின் போக்கிற்கு ஏற்றவாரே துதிப்பாடும் மகாதீர் இப்படியாவது மலாய்க்காரர்களின் அபிமானத்தை மீண்டும் பெற முடியுமா என்று யோசிப்பதைப் போல் தோன்றுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 4 இந்திய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உக்கிரக் குரல் எழுப்பியவர்களில் இதே இப்ராஹிம் முதன்மை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கூட்டணி அரசாங்கம் தேர்தல் எல்லைகளை மறுநிர்ணயம் செய்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்துவிடுவார்கள் என்றும் அன்னியர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கடந்த வாரம் மகாதீர் விஷமத்தனமாகப் பேசி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார்.
இந்நாட்டின் அரசுரிமைக்கு உட்பட்டு வசிக்கும் இந்தியர்களையும் சீனர்களையும்தான் அவர் அன்னியர்கள் என்று குறிப்பிடுகிறார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது தேவையில்லாத ஒரு திமிர்த்தனம்.
நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்போதெல்லாம் அவருடைய அனாவசிய உளறல்களை அவ்வளவாக பொருள்படுத்துவதில்லை. எனினும் அவருடைய இலக்கு நகர்ப் புறங்களுக்கு அப்பால் வசிக்கும் எளிய மக்கள்தான் என்பதே உண்மை.
“அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது” என்று சும்மாவா சொன்னார்கள்! இந்நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடினால்தான் இனங்களுக்கு இடையிலான பேதங்களையும் பிளவுகளையும் களைய முடியும் என முக்ரீஸ் உளறியது ‘வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை’ப் போல்தான் உள்ளது.
காலங்காலமாக இந்நாட்டில் மக்களை பிளவுப்படுத்துவதற்கான அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி அவர்களை மேலும் மேலும் ஏழைகளாக்கி நடுவில் சுகங்களை அனுபவிப்பது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக, வசதியாக வாழ்ந்த மக்களை குழப்பி நாட்டை குட்டிச்சுவராக்கி செல்வத்தை சுருட்டிக் கொண்டது இந்தக் கூட்டம்தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இன வாதத்தையும் மத வாதத்தையும் தூண்டிக் கொண்டிருக்கும் கட்சிகள்தான் தற்போது நாட்டில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முனைந்து வருகின்றன. அக்கட்சிகளுக்கு போட்டியாக இன்னும் தீவிரமான இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிருத்த முயலும் மகாதீருக்கும் முக்ரீஸும், மிகவும் கீழ்த்தரமான கட்சி அரசியலில் புகுந்துள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றால் தோல்வியடைவது நாடும் நாட்டுமக்களுமே!