தமிழ் ஊடகங்களை அங்கீகரிக்கும் ஒருமைப்பாட்டு அரசு

கடந்த திங்களன்று (6.3.2023) ஒருமைப்பாட்டு அரசின் துணையமைச்சர்கள் தமிழ் ஊடகங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். இதில் கலந்து கொண்ட தரப்பிணர்கள்,   சிக்கல் மிகுந்த அரசியல் வழி நாட்டை வழி நடத்தும் போது, அதில் மக்களின் ஈடுபட்டை இணைப்பதில் ஊடகம் ஒரு முக்கிய பங்கை ஆற்ற இயலும் என்றனர். அதற்கு வெளிப்படை தன்மையும் நம்பிக்கையும் அவசியம் என்றனர்.

குறிப்பாக ஒரு சிறுபான்மை இனமாக இருக்கும் இந்தியர்கள், நடைமுறை அரசியல் கலவையால், அவர்கள் அரசியல் நீரோட்டதில் இருந்து விடுபடாமல் இருக்கவும், அதோடு அவர்களை அரசுடன் இணைக்கவும் ஊடகங்கள் செயலாற்ற இயலும் என்பதை ஏற்றுக்கொண்டனர்.

அவ்வகையில் இணைப்பை உருவாக்கவும், அதன் வழி சமூகத்தின் நிலைபாட்டை தேசிய நீரோட்டத்தில் பங்கு கொள்ள வைப்பதிலும் இரண்டு தரப்பிணரும்  இணைந்து செயலாற்ற இயலும் என்று கருத்துரைத்தனர்.

அதோடு செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்தியப் பின் அவற்றை வெளியிடுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பு, இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கல்வித் துணையமைச்சர் லிம் ஹுய் இங், சட்ட, நிறுவன உருமாற்ற விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங், வேளாண், உணவு உத்தரவாத துணையமைச்சர் சான் ஃபூங் ஹின், மக்களவைத் துணைத் தலைவர் ஆலிஸ் லாவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான வீ. கணபதிராவ், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், போக்குவரத்து அமைச்சரின் அரசியல் செயலாளரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் ஜம்புநாதன், பகாங் டிஏபி துணைத்தலைவர் காமாட்சி துரைராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் பிரதிநிதிகள் – தமிழ் ஊடகவியலாளர்களுடனான நல்லுறவினையும் தொடர்பினையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது என்கிறார் இதன் ஒருங்கிணைபாளர்களில் ஒருவரான பூங்குழலி வீரன்.

இவ்வாறான சந்திப்பு தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்படும் நிலையில், இந்திய சமூகத்தினருக்கு உரிய தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது உறுதி செய்யப்படும் எனவும் துணையமைச்சர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.