இன, சமய அரசியல் பித்தலாட்டதில் மலேசியா

கி.சீலதாஸ் – ஒரு காலத்தில் (சுமார் எழுபது ஆண்டுகள் வரை) அகண்ட பிரிட்டிஷ் வல்லரசின்மீது ஆதவன் மறைவு நிகழாது என்ற பெருமை ஊன்றி இருந்தது. இன்று அது அடிபட்டுவிட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் மனிதர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. மனித நேயம் மறுக்கப்பட்ட மக்கள் பல இழிவுகளுக்கு, இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு, தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ், மலையாள தொழிலாளர்கள், நாய்கள் உட்பட வெள்ளைக்காரர்கள் உணவு உட்கொள்ள செல்லும் உணவகங்களினுள் அனுமதிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றி பகிரங்கப்படுத்தினர்.

மலாயாத் தீபக்கற்பத்தில் இந்த மனிதனை அவமானப்படுத்தும் சட்டம் அமலில் இருந்தது. அறுபதுகளில் காலஞ்சென்ற  மாணிக்கவாசகம் அமைச்சராக இருந்தபோது சிகாமட் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டார். ஒரு பார்வையாளனாக நானும் சென்றிருந்தேன்.

அவரின் உரைக்குப் பிறகு, கேள்வி நேரம். அப்போது உணவகங்களில்  தமிழ், மலையாளச் சமூகத்தினர் இழிவுபடுத்தும் அறிவிப்புகளைப் பற்றி சொன்னேன். அதைப்பற்றி தெரியாது என்றவர் அதை நீக்குவதற்கான முயற்சியைத் தாம் மேற்கொள்ள உறுதியளித்தார். அந்த அருவருப்பான அறிவிப்பு இறுதியாக நீக்கப்பட்டது. அத்தகையதொரு மனித அவமதிப்பு அணுகுமுறை சட்டம், இன ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்தது. அந்த அருவருப்பான காலகட்டத்தை நினைத்துப் பார்க்கும்போது நம் மூதாதையர் எத்தகைய இழிவு நிலைக்கு ஆளாக்கப்பட்டனர், தாழ்மையான நிலைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்குமே.

பிரிட்டனின் பிற நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கையாளப்பட்ட முறையைப் பயங்கரவாதம் என்று சொல்வதில் தவறில்லை. அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளின்வழி தனதாக்கிக் கொள்ளப்பட்ட நாடுகளை வளப்படுத்த மக்கள் தேவைப்பட்டனர். ஐரோப்பாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கிறிஸ்துவச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் இருந்ததாக நீலகண்ட சாஸ்த்திரி விளக்குகிறார். [காண்க: மலாயாவில் தென்னிந்திய தொழிலாளர்கள் பிரச்சினை].

அமெரிக்காவில் என்ன நடந்தது? அமெரிக்காவில் ரோமன் கத்தோலிக்கர் ஒருவர் அந்த நாட்டு அதிபராக வரக்கூடாது, முடியாது என்ற நிலையில் மாற்றத்தைக் கொணர்ந்தார் ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர் ஜான் கென்னடி. அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரபட்ட ஆப்பிரிக்க கருப்பர் சமுதாயத்தில் உதித்த பாரக் ஓபாமா அதிபரானார். இன்று அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் ஆப்பிரிக்கா-இந்திய பெற்றோர்களைக் கொண்ட கமலா.

கனடாவில் இந்திய வம்சாவளியினர் முக்கிய அரசு பதவிகளில் காணப்படுகின்றனர். ஆஸ்த்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சீன, இந்தியப் பரம்பரையினர் உயர் பதவியில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர் அந்நாடுகளின் பெரும்பான்மை மக்கள்.

ஒரு காலத்தில் உலகமே எங்களுக்குச் சொந்தம் என மார்தட்டிய பிரிட்டனின் நிலை எப்படி இருக்கிறது? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக் பிரதமராக இருக்கிறார். இந்து சமயத்தைக் கேவலமாக, இழிவாக நினைத்துக் கர்வமாக இருந்தார்கள், இன்று இந்து சமயத்தை மதிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டனர்.

உலகம் இவ்வாறு நல்ல, பரந்த நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மலேசியாவில் மட்டும் இன்று கூட இன, சமய வேறுபாட்டைப் பெரிதுப்படுத்தி அரசியல் லாபம் காண முற்படுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. இன, சமய வேறுபாட்டை அரசியலாக்கி, அதை வாழ்க்கை இலட்சியமாக்கி கொள்வோர் பல இனங்களை, சமயங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் நல்லெண்ணத்தை வளர்க்க உதவாது என்பதைவிட பாழான வெறுப்புணர்வுக்கு வழிவிடும் என்பது திண்ணம், என்பதை உணர வேண்டிய காலம் இது.

மலேசியாவை எடுத்துக்கொண்டால் காலங்காலமாக மூவின மக்கள் சிறப்பாக அந்நியோனியத்துடனும், நல்லெண்ணத்துடனும் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்பது கண்கூடு. இது அரசின் முயற்சியால் அடைந்த பலன் என்பதைக் காட்டிலும் எல்லா இனங்களும், சமயங்களும் சுமூகமாக வாழ முடியும் என்ற உயர்வான எண்ணத்தைக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக வருவதற்கு முன்னர் பிரதமர்களாக இருந்தவர்கள் இன, சமய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இன, சமய நல்லிணக்கத்தைக் காண விழைந்தனர். அந்நிலைக்குப் பாடுபட்டனர் எனலாம். ஆனால், மகாதீர் தமது இந்திய வம்சாவளி தொடர்பை நினைவுப்படுத்துவதை ஓர் இழிவாகக் கருதி செயல்பட்டதை நாம் அறியாதது மட்டுமல்ல தாம் ஒரு மலாய்க்காரர் என்பதை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிடுவதில், உறுதிப்படுத்துவதில் அயராது செயல்பட்டார் என்பது உலகமறிந்த உண்மை. இதனால், நாட்டில் பல பிரச்சினைகள் எழுந்தன, உலகமறிந்த உண்மை. ஆனால், மலேசியர்களுக்கு மட்டும் புரியாத புதிராக இருந்தது. இன்றும் அந்தப் புதிர் நீடிக்கிறது எனின் கவலைக்குரிய விஷயம்தான்.

எல்லா இனங்களையும் சமயங்களையும் அணைத்துப்போகும் வழியைக் காண முற்படும் ஆர்வத்தை, உற்சாகத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இபுராஹீடம் காண்கிறோம். ஆனால், மகாதீரோ பழைய இன, சமயம் வேறுபாடு பல்லவியை விடாமல் பாடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நடவடிக்கை இன, சமயத் துவேஷம் என்றால் அதில் தவறு காண முடியாது.

மலேசியர்கள் ஒரு குடும்பம். எல்லோரும் வாழ வேண்டுமென உறுதியாக இருக்கும்போது மகாதீர் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்துவிட்டனர். மலாய்க்காரர்களின் அவலம் நீடிக்கிறது என்று ஓலமிடுவதை அரசியல் பார்வையாளர்கள், ஏன் சில சாதாரண மலேசியர்களும் என்ன சொல்கிறார்கள்? இது மகாதீரின் பித்தலாட்ட அரசியல் என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். அவர் சொல்லும் மலாய்க்காரர் நலன், மகாதீரின் குடும்ப நலனாகும், அவர் பேசும் சமயப் பாதுகாப்பு அவரின் சொந்த பொருளாதாரப் பாதுகாப்பு என்றும் சொல்கிறார்கள். ஆகமொத்தத்தில், அவரின் மலாய்க்காரர்கள் பின் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்று ஓலமிடுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்.

இந்தக் காலகட்டத்தில் மகாதீர் போன்றோர் அடிக்கடி எழுப்பும் குழப்பத்தை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும். இன, சமய அரசியல் நாட்டின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை உணராதது ஆச்சரியமாகும். எல்லா இனங்களும், சமயங்களும் இந்த நாட்டில் வாழ, இயங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. அந்த எண்ணத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வோரை அடையாளம் கண்டு சட்டப்படி ஒடுக்கப்பட வேண்டும். அவர்களை அடக்கும் சட்டம் இருக்கிறது. அதை அமலாக்கும் திராணிதான் இதுகாறும் காண முடியவில்லை. இனியாவது அந்தத் திராணி வருமா?

மகாதீர் போன்றோர் மலேசியாவில் நல்லதொரு நட்பு மிகுந்த குடும்ப உணர்வை வளர்க்கத் துணை நிற்க மாட்டார்கள். இவர்கள் மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் காண தயங்காதவர்கள். இவர்களை நாட்டின் விரோதிகள் என்று மக்கள் இதுவரை முடிவு செய்யவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது. மகாதீர் போன்ற இன, சமய அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் அப்படிப்பட்ட அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டதை உணராததும் ஆச்சரியமே!