இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மலாய் பிரகடனம்’ எனும் ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதானது நாட்டின் வெகுசன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.
அந்த நிகழ்வு நடைபெறவிருந்த இரு மண்டபங்களின் நிர்வாகங்களும் காரணங்கள் எதனையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சிக்கான பதிவுகளை ரத்து செய்த போதிலும் நாட்டின் பாதுகாப்பு கருதித்தான் அவ்வாறு செய்யப்பட்டது என்று எல்லாருக்கும் தெரியும்.
செக்ரட்டேரியட் தானா ஆயர்(தாயகத்தின் செயலகம்) எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பு அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக கூறப்பட்ட போதிலும் அதன் பின்னணியில் மகாதீர்தான் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஏனெனில் அண்மைய வாரங்களாக இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான விஷக் கருத்துகளை அவர்தான் தங்கு தடையின்றி உமிழ்ந்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ‘மலாய்க்காரர்களின் தன்மான மாநாடு’ எனும் தலைப்பில் இதே போன்ற ஒரு மாநாடு அவருடைய ஆதரவில் தலைநகரில் நடைபெற்றதை நாம் இன்னும் மறக்கவில்லை.
அப்போது பக்காத்தான் ஆட்சியின் பிரதமராக அவர் இருந்த போதிலும் பல அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த இனவாதிகளுடன் கைகோத்து ‘கூட்டத்ததோடு கோவிந்தா’ போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானார் மகாதீர். எல்லா இனங்களையும் அனுசரிக்க வேண்டிய பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்டு, அப்போது அப்பதவியில் அவரை அமர்த்த உதவிய மலாய்க்காரர் அல்லாதாரை அன்னியர்கள் என்று வர்ணித்தார்.
ஆனால் இம்முறை அவருடைய ஜம்பம் பலிக்காத நிலையில் அன்வாரின் கருத்துகளுக்கு இனச்சாயம் பூசி அவரை மானாவாரியாக குறை கூறி வருகிறார்.
இந்நாட்டில் பல்லினங்களின் நலன் பாதுகாக்கப்படுவது அவசியம் என்று அன்வார் கூறுவதை திரித்து, ‘பல்லினம்’ என்பது உண்மையிலேயே மலாய்க்காரர்களை ஒடுக்குவதற்கான ‘இனவாதம்’ என்று கூறி அப்பாவி மக்களை மகாதீர் திசை திருப்பி வருகிறார்.
மலாய்க்காரர்களை பேசவிடாமல் அன்வார் வாய்ப்பூட்டு போடுகிறார் என வசைபாடும் மகாதீர் இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் அறிவிலித்தனமான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அன்வாரின் ஆட்சியின் கீழ் மலாய்க்காரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய நிலையில் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதார பலத்தையும் மலாய்க்காரர்கள் இழந்துவிட்டனர் எனவும் அவர் உளறி கொண்டு திரிகிறார்.
கடந்த 80 ஆண்டுகளாக மலாய்க்காரர்களின் உரிமைகள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆன் தொடர்பாகவும் குரல் எழுப்பி வருவதாகக் கூறி ஆள் சேர்க்க முனைந்த போதிலும் தற்போதைய சூழலை பார்க்கப் போனால் ஒரு சிறிய இனவாத, மதவாத கும்பல்தான் அவருக்கு துதிபாடி பின்தொடர்வதைப் போல் தெரிகிறது.
மகாதீர் நாட்டில் குழப்பத்தைத் தூண்டப் பார்க்கிறார் எனும் உண்மையை அறிந்து பல்வேறு தரப்பினர் இம்முறை ஒதுங்கி நிற்பதை நம்மால் உணர முடிகிறது. தனது கீழ்த்தரமான போக்கினால் சன்னம் சன்னமாக ஒரு செல்லா காசாக மாறிவருவதை அவர் உணராதது வேடிக்கையாகத்தான் உள்ளது.
இதற்கிடையே மக்களை அநாவசியமாகத் தூண்டுவதால் அவர் மீது நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அமெரிக்காவுக்கான மலேசியத் தூதருமான நஸ்ரி அஸிஸ் பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டில் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகி சீரழிவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அப்படிப்பட்ட ஒரு சட்டம் அவர் மீது பாயுமா இல்லையா என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஒட்டு மொத்த வாக்காளர்களாலும் நிராகரிக்கப்பட்டு வைப்புத் தொகையை கூட இழக்கும் அளவுக்கு படுதோல்விக்கு ஆளான அவர் திடீரென கிளம்பி வந்து ‘மலாய்க்காரர்களை காப்பாற்றப் போகிறேன்’ என்று செய்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் அவரை வேடிக்கையாகத்தான் பார்க்கிறார்கள்.
மலாய்க்காரர்களை காப்பாற்றப் பார்க்கிறாரா அல்லது தனது மகன் முக்ரிஸின் அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற எண்ணுகிறாரா எனும் கேள்வியின் பதில் உள்ளங்கை நெல்லிக்ணியாகும்.