யுக்ரேன் அகதிகளை காப்பாற்றிய சாதனையாளர் டாக்டர் முருக ராஜ்

இராகவன் கருப்பையா – அனைத்துலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு நேர்காணல்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய-யுக்ரேன் போர் வெடித்ததைத் தொடர்ந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட போது உடனே களமிறங்கிய டாக்டர் முருகராஜ் ராஜதுரையின் சேவைகள் அளப்பறியது.

அவருடைய மூன்று  பிள்ளைகளும் சகோதரரின் இரு பிள்ளைகளும் போலந்தில் மருத்துவம் பயின்று வருகின்றனர். அந்த வட்டாரத்தில் போர் உக்கிரமடைந்ததால் பாதுகாப்புக் கருதி அவர்களை மலேசியாவுக்கு அழைத்து வர அங்கு சென்ற டாக்டர் முருகராஜின் திட்டம் நொடிப் பொழுதில் தடம் மாறியது.

போலந்து எல்லைக்குள் சாரை சாரையாக நுழைந்த யுக்ரேன் அகதிகளுக்கு தகுந்த மருத்துவ சேவைகள் வழங்க போதுமான மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் தன்னலம் கருதாமல்  களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறும் முருகராஜ் கடந்த ஆண்டு பிற்பகுதியில் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் கொமன்வெல்த் நாடுகளின் மருத்துவ சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பிள்ளைளை அழைத்து வருவதற்கான திட்டத்தை கைவிட்டு, காயங்களோடும் நோயினாலும் அவதிப்பட்ட அகதிகளுக்கு தமது மகனோடு சேர்ந்து சுமார் 2 வாரங்களுக்கு தன்னார்வ அடிப்படையில் மருத்துவ சேவைகளை வழக்கிய முருகராஜ் இதே போன்ற சேவைகளை 19 ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியாவிலும் மேற்கொண்டிருந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் சுனாமி பேரலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருருந்த ‘பன்டா ஆச்சே’ பகுதிக்கு மலேசியாவிலிருந்து சென்ற ஒரு சிறிய மருத்துவக் குழுவில் பங்கேற்ற அவர் சுமார் ஒரு வாரத்திற்கு அங்கு சேவையாற்றினார்.

சிரம்பானில் ராஜதுரை-தவமணி தம்பதிகளின் 4 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த முருகராஜ், இந்தியாவின் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முடித்ததோடு லண்டனில் சட்டத்துறையிலும் மலேசியாவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்குப் பிறகு கொமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவராக தேர்வு பெற்றுள்ள முதல் மலேசியரான அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் இருப்பார்.

மொத்தம் 54 நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த அனைத்துலக சங்கத்தின் உறுப்பினர்களுக்கிடையே அதிக அளவிலான மருத்துவ தகவல் பரிமாற்றங்களுக்கு வித்திடப் போவதாகக் கூறிய அவர் சர்வதேச நிலையில் கோறனி நச்சில் போன்ற பேரிடர்களை சமாளிப்பதற்கு இது ஏதுவாக இருக்கும் என்றார்.

கடந்த 13ஆம் தேதியன்று இங்கிலாந்தில் நடைபெற்ற ‘கொமன்வெல்த் தின’க் கொண்டாட்டங்களில் பங்கேற்க மன்னர் சார்ல்ஸின் சிறப்பு விருந்தினராக முருகராஜ் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹம் அரண்மனையில் நடைபெற்ற அந்நிகழ்வில் சற்றும் வேறுபாடின்றி பழகிய மன்னர் சார்ல்ஸ் தம்முடன் நீண்ட நேரம் அளவளாவியதாகவும் கோறனி நச்சிலின் போது இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்ட உலகின் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்ததாவும் முருகராஜ் குறிப்பிட்டார்.

சுமார் 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எனும் வகையில் நம் நாட்டின் சுகாதார சேவைகளின் மேம்பாடு தொடர்பாக சுகாகார அமைச்சிடம் பல்வேறு பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும் அதற்கான அமைச்சின் மறுமொழி பெருத்த ஏமாற்றத்தை அளித்ததாக முருகராஜ் விவரித்தார். அதாவது எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகுதான் சில முடிவுகளை எடுக்க முடியும் என்று அரசுத் தரப்பிலிருந்து கிடைத்த பதிலுரை மருத்துவர் சங்கத்திற்கு வருத்தமளிப்பாக உள்ளது என்றார் அவர்.

அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு நடைமுறை மற்றும் தற்காலிக மருத்துவர்களை நிரந்தரமாக்குவதற்கான தேர்வு முறை போன்றவை குறித்தும் அந்த பரிந்துரைகளில் அடங்கும்.

அரசாங்க மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் பகடி வதைகளுக்கு ஆளாவதை சங்கம் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட முருகராஜ் இந்த அவலம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார்.

இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள மருத்துவர்களில் பலர் மன உளைச்சல் மட்டுமின்றி அவர்களுக்கே மருத்துவம் தேவைப்படும் அளவுக்கு மன நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

இன்னல்கள் தாங்காமல் பல இளம் மருத்துவர்கள் வேலையில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் மேலும் பலர் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு  வேண்டா வெறுப்பாக பணிக்குச் சென்று திரும்புவதாகவும் முருகராஜ் கூறினார்.

இந்தக் கொடுமையை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்ற அவர், அரசாங்க மருத்துவமனைகளில் பகடிவதைகளை ‘0’ அளவுக்குக் கொண்டு வருவதே சங்கத்தின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார முறையை மேம்படுத்துவதற்கு தேவையான யோசனைகளையும் சுகாதாரம் தொடர்பான இதர விவகாரங்கள் குறித்தும் நேரடியாக எழுப்புவதற்கு ஏதுவாக சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட வேண்டும் என இவ்வாண்டுத் தொடக்கத்தில் அரசாங்கத்திடம் பரிந்துரை ஒன்றை முருகராஜ் முன்வைத்தார்.

எனினும் அதற்கான அறிகுறி எதனையும் இதுவரையில் காணவில்லை என்பதும் வருத்தமான ஒரு விஷயம்.