அன்வார், ஜாஹித் அல்லது நஜிப்? யார்தான் பொறுப்பு

 மரியம் மொக்தார் – திடீரென்று ஒரு திருப்பம். அது  தண்டனை பெற்ற குற்றவாளியான நஜிப் அப்துல் ரசாக்  வழக்கில். அவருக்கு எப்படியாவது அரசு மன்னிப்பு கொடுக்கலாம் என்பதாகும்..

இதற்கு காரணம், ஐந்து தலைமை நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் அவரின் 12 ஆண்டிகள் சிறைத் தண்டனையை உறுதி படுத்திய போது, அதில் ஒரு நீதிபதி மட்டும் முரணான வகையில் நஜிப் விடுதலை செய்யப்படலாம் என்ற வகையில் தனது தீர்ப்பை வழங்கினார்.

நான்கு நீதிபதிகள் நஜிப் குற்றவாளிதான் என்றனர், ஒருவர் மட்டும் இல்லை என்றார். பெரும்பான்மை தீர்ப்பின் வழி அவரின் தண்டனை உறுதியானது.

இப்போது அந்த ஒரு கூட்டாட்சி நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவேதான்,  இந்த அரச மன்னிப்புக்கான நஜிப்பின் விண்ணப்பம்.

சபா – சரவாக்கின் தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லியின் மாறுபட்ட தீர்ப்பை அம்னோ ஒரு அரச மன்னிப்பைப் பெறப் பயன்படுத்துகிறது. இதற்குச் சங்கு ஊதும் வகையில் ஊழல் தடுப்பு இலாக்காவின் (எம்ஏசிசி) நடவடிக்கையும் உள்ளது.

அது உயர் நீதி மன்றத்தில் முதன் முதலாக நஜிப்புக்கு தண்டனை வழங்கிய நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி  மீது விசாரணை தேவை என்ற வகையிலான கருத்தை எம்ஏசிசி வழங்கியது.

அம்னோ மலாய்க்காரர்களுக்கு கண்ணியம் இல்லையா? நஜிப்புக்கு (மேலே, வலதுபுறம்) முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அம்னோ உச்ச மன்றம் விரும்புகிறது என்பதை நேற்று அறிந்தோம்.

வழுக்கும் பாதையில் மலேசியா

நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டால், அது மலேசிய வரலாற்றின் இருண்ட நாட்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்.

உலகின் மிக மோசமான அரசாங்க திருடனுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டால், மக்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவது சட்டத்தை மதிக்கும் மலேசியர்களை அவமதிக்கும் செயலாகும். இது கோபத்திற்கும் கிண்டலுக்கும் கதவுகளைத் திறக்கும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணத்தைத் திருடியதைத் தண்டிக்கவில்லை என்றால்,  அது என்ன நாடு?

அதன் நிர்வாகம், அதன் சட்டங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை அது எவ்வாறு பிரதிபலிக்கும்? 1988 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடியிலிருந்து, நீதித்துறையின்  சுதந்திரத்தை டாக்டர் மகாதீர் முகமட் அழித்ததிலிருந்து, நீதி மற்றும் நியாயமான தீர்ப்பின் தூய்மையான படத்தை முன்வைக்க முடிந்தவரை முயன்ற நமது நீதித்துறையை இந்த அரச மன்னிப்பு கேலி செய்யும்.

அரச மன்னிப்பு வழங்கப்படுமானால், நஜிப்புக்கு இந்த மன்னிப்பை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அமைப்பின் செயல்திறன் மற்றும் பங்கு குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்குவார்கள். தேசத்தின் இயக்கவியல் வேறு பாதையில் செல்லலாம்.

அரச மன்னிப்பு ஒரு குற்றவாளியின் சுதந்திரத்தைப் பற்றியதாக இருக்கக்கூடாது. மாறாக, அது  ஒரு தேசத்தின் மரியாதை மற்றும் நற்பெயருக்கு உண்டாகும் ஆபத்தைப் பற்றி இருக்க வேண்டும்.

தாமதங்களும் தந்திரங்களும்

எட்டு மாதங்கள் மட்டுமே சிறையிலிருந்த நஜிப்பை ஏன் விடுவிக்க வேண்டும்? ஜூலை 2020 இல் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது, ஆகஸ்ட் 2022 இல் அவரது இறுதி மேல்முறையீடு முடிவடைந்த பிறகு மட்டுமே அவர் சிறைக்குச் சென்றார். அவர் அடுத்த 12 வருடங்களைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் செலவழிக்க வேண்டும் மற்றும் RM210 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்.   மலேசியாவிற்கு அவர் செய்த கேடுகளுக்கு .இது மிகவும் மென்மையான தண்டனை என்றும் பலர் விவரித்துள்ளனர்.

நஜிப்பின் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன் நீண்ட காலம்  காத்திருக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அனைத்து ஆதாரங்களையும் தொகுக்க நேரம் எடுக்கும் என்றும், தொடர்புடைய தகவல்களைத் தொகுக்கத் தேவையான நிபுணத்துவம் கொண்ட ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆதாரங்கள் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும்.

நஜிப்பின் வழக்கறிஞரின் நாயின் தலையீடு (செல்ல பிராணி நாய் தாவியதால் கையில் காயம்) மற்றும் அவரது மகனின் திருமணம் உட்பட அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் நஜிப்பும் அவரது வழக்கறிஞரும் பயன் படுத்தி வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அனுமதித்ததால் வழக்கு விசாரணை பல முறை இழுத்தடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் முஹம்மது ஷஃபீ அப்துல்லா

நஜிப் தனது அபராதத்தைச் செலுத்தவில்லை, மேலும் அவர் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வருமான வரி குறித்தும் ஒப்பந்தம் செய்துள்ளார். நம்மில் எத்தனை பேருக்கு இது போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன?

நியாயம் நடக்கும் என்று நாம் ஐந்து வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம் ஆனால் அவருடைய அப்போதைய அமைச்சரவையானர் நம்மை முட்டாளாக்கினார்கள். விமர்சகர்கள் பலர் மௌனமானார்கள்.

முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் அப்போது நஜிப்பிற்கு விசுவாசமாக, “2.6 பில்லியன் ரிங்கிட் அரேபிய இளவரசர் நன்கொடை” பற்றி நம்மை நம்பவைக்கப் பொய்களைப் பரப்பினர், ஆனால் இன்று, இந்த நஜிப் விசுவாசிகள் சிலர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தில் அமர்த்தப்பட்டிருப்பது நகைப்புக்குரியது. அவர்களுக்குக் கொள்கைகள் இல்லை, அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை..

இவை சதித்திட்டத்தின் ஒரு பகுதியா?

நஜிப் செய்த குற்றங்களின் தீவிரத்தை அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர்கள் எப்படி  உணர தவறுகிறார்கள்?

ஒருவேளை, இதுவே அம்னோ-பாருவின் திட்டமாக இருந்திருக்கலாம், அதற்கான அறிகுறிகள் நம் அனைவருக்கும் தெரியும். பின்வரும் நிகழ்வுகள் ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை.

நஜிப்பின் சட்டக் குழு, 1எம்டிபி வழக்கில் நீதிபதி நஸ்லானுக்கு முரண்பாடு இருப்பதாகக் கூறி அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்த முயன்றது. நஸ்லான் நீதித்துறை ஆணையராக ஆவதற்கு முன்பு மலாயன் வங்கியில் தொடர்பு கொண்டவராக இருந்தார் என்பதை ஒரு பகுதியாக இருந்த காலத்தை அது குறிப்பிடுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதியான, நஸ்லான் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்ததற்காக ரிம210 மில்லியன் அபராதமும் விதித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், நஸ்லானுக்கு எதிரான எம்ஏசிசி விசாரணை நெறிமுறையைப் பின்பற்றவில்லை என்று தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்கடந்த மார்ச் 31 அன்று, நீதித்துறை மறுஆய்வு முயற்சியில் தோல்வியுற்ற நஜிப்பின், அந்த  SRC இன்டர்நேஷனல் வழக்கின் நீதிபதி ரஹ்மானால் ஒரேயொரு மாறுபட்ட தீர்ப்பைப் பெற்றார்.

ஏப்ரல் 2 அன்று, நஜிப்பின் மகள் நூரியானா நஜ்வா, நீதிபதிகளின் நெறிமுறைகளை நஸ்லான் மீறியதாகக் கூறி, MACC தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதியை வெளியிட்டார்.

ஏப்ரல் 6 அன்று, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அஸலினா ஓத்மான் சைட், நஜிப்பின் வழக்கறிஞர் முஹம்மது ஷஃபீ அப்துல்லாவிடம், நஸ்லான் மீதான எம்ஏசிசி விசாரணையைப் பற்றித் தெரிவிக்கச் சென்றதாகத் தெரிகிறது.

இவை அனைத்தும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டதா?

துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் அவரது அம்னோ கூட்டாளிகளும் நஜிப்பின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது.

திடீரென்று, நஜிப்பின் கொடூரமான குற்றங்கள் அந்த ஒரு மாறுபட்ட தீர்ப்பால் முக்கியமற்றதாகிவிட்டன.

எனவே, இப்படியெல்லாம் நடப்பதற்கு யார் பொறுப்பு? அன்வரா?  ஜாகிட்டா? அல்லது காஜாங் தலைமை சிறைச்சாலையிலிருந்து கொண்டு நஜிப் இதை நகர்த்துகிறாரா?