கி.சீலதாஸ் – இறைவன் நமக்கு இரு காதுகளையும் ஒரு வாயைக் கொடுத்திருப்பதானது நாம் பேசுவதைக் குறைத்து, காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதை உற்சாகப்படுத்தவே.
ஜனநாயக நெறிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று சொல்கிறோம். ஆனால், முழு சுதந்திரப் பேச்சுரிமை அனுமதிக்கப்படுகிறதா அல்லது பல கட்டுப்பாடுகளை உள்ளடக்கியுள்ளதா என்ற கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.
ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படுவது முழு பேச்சுரிமையா என்ற கேள்வியை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இரு காதுகள் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படாமல் வாய்க்கு மட்டும் முழு சுதந்திரம் இருப்பது போல் ஜனநாயக நாடுகளில் காணப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்படும் அவமானம். ஜனநாயக நெறிமுறைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்களின் கடமை என்ன? அரசின் கடமை என்ன? ஜனநாயக நெறிகளின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் பொறுப்பு என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மக்களின் பொறுப்பு என்னவெனில் நல்லொழுக்கம், கடமை உணர்வு கொண்டோரை, நாணயமானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள்தான் நாட்டில் ஆட்சி செய்வார்கள். ஆட்சி அமைக்கும் பொறுப்பைப் பெறும் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
நீதிக்கு மதிப்பளித்து பாதுகாக்க வேண்டும். தேர்தலில் ஆளும் வாய்ப்பை இழந்து எதிர்தரப்பில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கடமை என்ன? ஆட்சியில் இருப்போர் தவறான முறையில் ஆட்சி செய்யாமல் பார்த்துக் கொள்வதுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தவொரு தீங்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியில் நிற்பவர்கள் ஒரு வேளை மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெறுவார்களேயானால் ஜனநாயகம் எவ்வித தங்கு தடையின்றி செயல்பட உறுதியாக இருப்பதை நாட்டுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும். இதன்வழி எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எல்லா வகையிலும் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
ஜனநாயகம் எனும்போது அதே நெறியைப் பின்பற்றும் நாடுகளின் அணுகுமுறை, சட்ட அமலாக்கம் போன்றவற்றை மற்ற ஜனநாயக நாடுகளின் கவனத்தைக் கவரலாம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் நாட்டைப் போல் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றும் நாடுகளில் நடப்பதை நாம் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவது நியாயமே.
அந்த வகையில் மேலே குறிப்பிட்டது போல் இறைவன் இரண்டு காதுகளையும் ஒரு வாயையும் கொடுத்திருக்கிறான் என்றால் பேச்சைக் குறைத்துக் கொண்டு செவி சாய்க்கும் பழக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றால் அது தவறாகாது. இந்த முதுமொழியைச் சிந்தித்துப் பார்க்கும்போது இதனுள் புதைந்து கிடக்கும் ஆழமான பொருளை அரசியல்வாதிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பேச்சுரிமை என்ற வாதத்தை முன்வைத்து கண்டபடி பேசுவது நியாயமாகாது என்பதை உணர மறுக்கும் அரசியல்வாதிகளைத்தான் நாம் காண்கிறோம். இந்தப் பழக்கம் இந்த நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் குறிப்பாக ஜனநாயக ஆட்சி நாடுகளில் நடக்கிறது என்றால் விசித்திரமாக இருக்கிறது.
ஒரு குடிமகன் தம் நாட்டுக்குள் களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நடக்கும் குறைகளை வெளிப்படுத்துவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டவர்களின் தலையீடு வேண்டுமெனக் கோருவது நியாயமான அரசியல் போக்காகக் கருத இயலாது. நாட்டில் நடக்கும் குறைகளை வெளிக்கொணர்வதுதான் ஒவ்வொரு தலைவனின் தலையாய கடமை.
போர் காலங்களில் வெளிநாடுகளின் உதவிகளை நாடுவது இயல்பு. ஆனால், உள்நாட்டு அரசியலில் மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் “ஜனநாயகம் மரித்துவிட்டது என வெளிநாடுகளில் முறையிடுவது, எங்கள் நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்” எனக் கோருவது நியாயமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாட்டுப் பற்றுடைய ஒரு தலைவன் தம் நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டான். உள்நாட்டுத் தகராற்றை உள்நாட்டிலேயே மக்களின் ஆதரவைத் திரட்டி பரிகாரம் காண முற்படுவான். அதுதான் நியாயமான, நீதியான ஜனநாயக முறை. நாட்டு மக்கள்தான் அரசை நியமித்தார்கள்.
அவர்கள்தான் ஆட்சி மாற்றத்திற்கு வழி காண வேண்டுமே அல்லாது வெளிநாட்டவர்களின் தலையீட்டைக் கோருவது கோழைத்தனம் எனின் மிகையாகாது. காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் கலாச்சாரம் இக்காலத்துக்குத் தேவையற்றது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அங்கு நடக்கும் அரசியலில் நமக்கு கவனம் உண்டு. ஏனெனில் பிருமாண்டமான உலகிலேயே இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல ஜனநாயக நாடுகளுக்கு அது வழிகாட்டி. அந்நாட்டின் அரசியல் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்தியாவில் ஜனநாயகம் மரித்துவிட்டது என்று புலம்பியிருப்பது அவரின் அரசியல் தராதரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது என்று சொல்லலாம்.
சிங்கப்பூரில் எப்படிப்பட்ட ஜனநாயகம் என்று சிந்திக்கச் செய்யும். அங்கு பேச்சுரிமை எப்படி எல்லாம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது நாம் அறியாதது அல்ல. அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் தமது இந்தியாவில் ஜனநாயகம் மரித்துவிட்டது என்ற ஒப்பாரியை நிகழ்த்தியுள்ளார் ராகுல் காந்தி.
ஜெர்மனி ஒரு காலத்தில் காலனித்துவ நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்காவோ ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தம்மோடு இணையாத ஜனநாயக நாடுகளில் ஆட்சிகளை அது கவிழ்த்ததை உலகம் அறியும்.
இந்தியாவில் ஜனநாயகம் மரித்துவிட்டது. கொடுமை மிகுந்த ஆட்சி நடக்கிறது என்று கூறுவோரின் உண்மையான மனக்குறை என்ன? பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு பலமடைந்து வருகிறது. அவரது திட்டங்களால், அணுகுமுறைகளால் நாடு செழிப்படைகிறது. அதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை.
நல்ல ஆட்சி நடக்கும்போது சந்தர்ப்பவாதிகளின் அரசியல் வாழ்வு நீடிக்காது. இதுதான் அரசியல் சாணக்கியம். நல்ல ஆட்சி நடக்கிறதே என்ற பொறாமையானது அழிவுச் சக்திகள் அதிகாரம் இழந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் குமுறுவதின் அடையாளம்தான் அவர்களின் பழி சுமத்தும் நாடகம்.
வல்லரசுகளுக்குப் பணிந்து வரும் நாடுகளும் தலைவர்களும் தேவை. அவற்றை வழங்க தயாராகிவிட்ட அரசியல்வாதிகள் ஏராளம். அப்படிப்பட்ட அரசியல் கலாச்சாரம் நம் நாட்டுக்குப் பொருந்தாது. தேசிய அரசியலில் வாய் கொழுத்தவர்களுக்கு இடமில்லை, இடம் கொடுக்கக்கூடாது.