அரசியலில் நாவடக்கம் தேவை – கி.சீலதாஸ்

நன்றாகச் சிந்தித்தப் பிறகு வாயைத் திறந்தால் நல்லது என்கின்ற கட்டுப்பாட்டை அரசியல்வாதிகளிடம் காண்பது அரிதாகும். நம் நாட்டில் மட்டுமல்ல பேச்சில் கட்டுப்பாடற்றத் தரத்தைப் பல நாடுகளில் காணலாம். குறிப்பாக, ஜனநாயகக் கோட்பாட்டைப் பேணும் நாடுகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் இப்படிப்பட்ட போக்கு சர்வசாதாரணம். இதைப் பேச்சு சுதந்திரம் என்று கூறுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகத்தான் கருத வேண்டும்.

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். இந்தியா மக்களாட்சியைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சீனாவோ கம்யூனிஸத் தத்துவத்தைத் தமது அரசியல் கொள்கையாகக் கொண்டிருக்கிறது.

சீனாவில் அரசியல்வாதிகள் நினைத்தப்படி பேசி அரசியல் வாழ்க்கை நடத்த முடியாது. அங்கே அரசின் கட்டளை என்னவோ அதைப் பின்பற்றி நடந்து கொள்வது, வாழ்வதே சிறந்த வாழ்க்கை முறை. அதை மீறினால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதில் இழுத்தடிக்கும் கலாச்சாரத்துக்கு இடமில்லை.

ஜனநாயகத்தைப் பின்பற்றும் இந்தியாவில் வழக்கு தொடுக்கப்பட்டாலும் நீதி தேவதையின் பயணம் துரிதமாக இருக்காது. தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்கின்ற சட்ட முதுமொழியை ஏன் மதிக்கப்படவில்லை என்று மக்கள் வினா எழும்பினால் முறையான பதில் கிடைக்குமா என்பது சந்தேகமே! ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜனநாயகம் நீதியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது சமுதாய நீதி என்ற தத்துவத்தின்படி எல்லா துறைகளிலும் நீதி தலைதூக்கி நிற்க வேண்டும்.

பேச்சுரிமை என்பதானது குடிமகன் தனது கருத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருப்பதை உணர்த்துகிறது. ஆனால், பேச்சுரிமை என்றால் என்ன? வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்து இதுதான் பேச்சுரிமை என்றால் அது நியாயமோ? அதுதான் பேச்சுரிமை என்று ஏற்றுக்கொள்வது நீதியாகுமா? அத்தகைய நடவடிக்கை பேச்சுரிமையைத் துஷ்பிரயோகச் செயலாகக் கருத வேண்டும்.

பேச்சுரிமை என்றால் ஒரு கருத்தை வெளியிடும் நல்ல பேச்சு பண்பினைக் கொண்டிருக்க வேண்டும். பொய்யான கருத்துக்கள் அலை அலையாக மோதும் போது அவை உண்மையானவையா? அவற்றை ஏற்றுக்கொள்ளும் போதும், நிராகரிக்கும் போதும் நாவடக்கம் தேவை. ஏற்றுக்கொள்ளும் போது வானளவுக்கு உயர்த்துவதும், மறுக்கும்போது இழிவான மொழியைப் பயன்படுத்துவதும் நாகரீகமான அரசியல் அல்ல.

நம் நாட்டில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுவது சகஜமாகிவிட்டது. அரசியல் எதிரிகள் பழி சுமத்துவது, பொய்யான தகவல்களை வெளியிடும் அரசியல் சூட்சமாகக் கருதப்படுகிறது. அது முறைகேடான அரசியல் போக்காகும்.

சிங்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது பலன் தரும். முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் காலஞ்சென்ற லீ குவான் யூ தம்மை எதிர்ப்பவர்களை எளிதில் விட மாட்டார். அவதூறு வழக்கு தொடுப்பதில் வல்லவர்.

ஒரு முறை எதிர்க்கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர், ஹர்பான்ஸ் சிங் சித்து பொது கூட்டம் ஒன்றில் பேசும் போது லீ குவான் யூவை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். குறிப்பாக, குண்டர்களுக்குத் தலைவன் என லீ குவான் யூவை விமர்சித்தார். அவர் மீது குற்றவியல் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டது. ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல.

இந்தியாவில் 2019-இல் நடந்த ஒரு சம்பவத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பிரபல அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், புகழ்வாய்ந்த இந்திய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறித்ததாகும். ராகுல் காந்தி சொன்னது என்னவெனில், “திருடர்கள் யாவரும் ‘மோடி’ என்ற குடும்பப் பெயரை வைத்திருப்பது ஏன்?” என்பதாகும். இந்தியப் பிரதமரின் குடும்பப் பெயர் “மோடி”. அதை அரசியலாக்கலாமா? தரக்குறைவான கருத்துக்கு இடம் தரலாமா? கூடாது.

சரி, மோடி என்ற குடும்பப் பெயருக்குக் கேவலமான அர்த்தத்தைக் கற்பித்துப் பேசிய ராகுல் காந்தி மீது புகார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.  நீதிமன்றமும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துவிட்டது.

அமலில் இருக்கும் இந்தியச் சட்டத்தின் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்துவிடுவார். இந்தியச் சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார். அந்தச் சட்டப்படி ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து நிற்கிறார். இது சற்று கடுமையானதாகக் காணப்பட்டாலும் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா?

இந்தச் சட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இயற்றப்பட்டது, அமலாக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தால் பிரச்சினை வழியில்லை. அரசியல் மேடைகளில் அவதூறு மொழிகளைப் பயன்படுத்தப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இதை உணராத அரசியல்வாதிகள் இருப்பதுதான் ஆச்சரியம். அதோடு இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு காட்டுவது விந்தையாக இருக்கிறது.

மலேசியாவில் அப்படிப்பட்ட சட்டம் இல்லை. அதுபோன்ற சட்டம் இங்கும் அறிமுகப்படுத்தினால் நன்மை பயக்கும் என்று நம்புவோர் ஏராளம். ஏனெனில், பொய்யான கருத்துக்களைப் பரப்புவதில் நம் அரசியல்வாதிகள் இம்மியளவும் அச்சம்  கொண்டவர்களாகத் தென்படவில்லை.