ஊழலில் சிக்கிய முன்னாள் பிரதமர்கள்

இராகவன் கருப்பையா – அண்மையில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் வரலாற்றில் ஊழல் குற்றங்களுக்காக நீதிமன்றம் ஏறும் 2ஆவது பிரதமராக அவர் திகழ்கிறார்.

மற்றொரு முன்னாள் பிரதமரான நஜிப் ரஸாக் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது உலகறியும். இந்நிலையில் தற்பொழுது முஹிடினும் நீதிமன்ற வாசலை மிதித்துள்ளதானது, அகில உலகத்தின் பார்வையில் மலேசியாவுக்கு கலங்கத்தை ஏற்படுத்துமா அல்லது நற்பெயரைக் கொண்டுவருமா என்பது ஐயப்பாடாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த நஜிப்பின் ஊழல் வழக்குகளில் ஒன்று கடந்த வருஷம் பிற்பகுதியில் நிறைவடைந்து அவரை 12 ஆண்டுகளுக்கு சிறையிலடைக்க வழிக்கொணர்ந்தது. எவ்வளவுதான் சாக்கு போக்குச் சொல்லி நழுவ முயன்ற போதிலும் சட்டத்தின் கடுமையான பிடியில் இருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.

இதற்கிடையே கோறனி நச்சிலினால் நாடு அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சமார் 17 மாதங்களுக்கு மட்டுமே பிரதமர் பதவியை வகித்த முஹிடின் ஏறத்தாழ் 232 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஊழல் வழக்கில் மாட்டிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஹிடின் மீதான குற்றச்சாட்டு  இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்ற போதிலும் இவ்விரு சம்பவங்களையும் உலகம் எவ்வாறு கணிக்கின்றது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாத அளவுக்கு மலேசிய நீதித் துறை வலுவாக உள்ளது என அனைத்துலக நிலையில் நம் நாட்டுக்கு நற்பெயர் கிடைத்திருக்கக் கூடும்.

அதே சமயம் மலேசியாவில் பிரதமர்களாக இருப்பவர்கள் குறுகிய காலமாக இருந்தாலும் மேகா ஊழல்கள் புரிந்து மில்லியன் கணக்கில் பணத்தை சுருட்டுகின்றனர் எனும் அவப் பெயரைக் கூட முஹிடினின வழக்கு கொண்டு வந்திருக்கக் கூடும்.

பெரும்பாலான நாடுகளில் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் மட்டுமின்றி நடப்புத் தலைவர்களும் கூட சட்டத்தின் இரும்புப் பிடியில் சிக்கி தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மலேசியாவைப் பொருத்த வரையில் அதன் 60 ஆண்டு கால வரலாற்றில் அப்படி ஒரு முன்னுதாரணம் இருந்ததே இல்லை. ஊழல் அறவே இல்லை என்று இதனால் பொருள்படாது. மாறாக சட்டத்தை அமல் செய்ய யாருக்குமே துணிச்சல் இல்லாத நிலையில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரும் கண்டும் காணாததைப் போல் இருந்துவிட்டனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய சட்டத்துறை தலைவர் கனி பட்டாயல் மிகத் துணிச்சலாக நடப்பு பிரதமர் நஜிபுக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை தயார் செய்ததாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கான எதிர்மறையான விளைவை அவர் அனுபவித்தது ஒரு சோகமான வரலாறு.

கடந்த 2018ஆம் ஆண்டில் முதல் முறையாக அரசாங்கம் மாறியதைத் தொடர்ந்து நிலைமை மாற்றம் கண்டது. பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லையென்றால் இப்படியொரு அபார மாற்றத்தை நாம் கண்டிருக்கவே முடியாது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

புதிய சட்டத்துறை தலைவராக அப்போது நியமிக்கப்பட்ட தோமி தோமஸ், நஜிப் உள்பட பல ஊழல்வாதிகளுக்கு எதிராக மளமளவென மேற்கொணட துணிச்சலான நடவடிக்கைகள் நாட்டின் சட்டத்துறைக்கு வெளிச்சத்தைக் காட்டியது. அதுதான் தற்போது மற்ற ஊழல்வாதிகள் மீது வலை வீசுவதற்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

தற்போதைய சூழலை பார்க்கப் போனால் நடப்பு அமைச்சர்கள் கூட  நடுங்கும் அளவுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலைமை தொடர்ந்தால்தான், மலேசியாவை ஊழல் எனும் அரக்கனிடமிருந்து விடுவிக்கவேண்டும் எனும் பிரதமர் அன்வாரின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதோடு ஊழல் மிகுந்த நாடு என அனைத்துலக ரீதியில் கேவலமான ஒரு அவப்பெயரை சுமந்து நிற்கும் நம் நாட்டுக்கு (உலக அளவில் ஊழல் குறீட்டில் 180 நாடுகளில் மலேசிய 61-வது இடத்தில் உள்ளது, சிங்கப்பூருக்கு 5-வது இடம்,) விமோசனம் கிடைப்பதோடு நமது சட்டத்துறை மீதும் சர்வதேச நிலையில் தகுந்த மரியாதை ஏற்படும்.