இராகவன் கருப்பையா – காவல் படையினரின் துணையுடனும் சிறப்பு அவசர சமிக்ஞை விளக்குகளுடனும் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்துள்ளதைப் போல் தோன்றுகிறது
குறிப்பாக சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இச்சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர் எனும் குறைபாடு பொது மக்களிடையே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூட கடந்த ஆண்டில் இது குறித்து கருத்துரைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் அவர் வெளியிட்ட பிரச்சார காணொளி ஒன்றில் இவ்விவகாரம் தொட்டு ரஃபிஸி பேசியிருந்தார்.
அதாவது அளவுக்கு அதிகமானோர் தற்போது காவல் துறையினரின் துணையுடன் சாலைகளில் பயணிக்கின்றனர் என்றும் இது குறைக்கப்பட வேண்டும் எனவும் அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.
முன்பெல்லாம் பேரரசர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், மாநில ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரோடு பிரதமருக்கும் துணைப் பிரதமருக்கும் மட்டுமே அச்சேவைகள் வழங்கப்பட்டன.
ஆனால் முன்னாள் பிரதமர் நஜிபின் ஆட்சி காலத்தில் எழுதப்படாத சட்டமாக, தான்தோன்றித்தனமாக இயல்பாகவே இவ்வழக்கம் மாற்றம் கண்டது.
யார் யாரெல்லாம் அச்சேவைக்கு தகுதி பெருகின்றனர் என ஒரு வரையறை இல்லாமல் நிலைமை வரம்பு மீறிப் போனதை பொது மக்கள், குறிப்பாக இதர வாகனமோட்டிகள் உணராமல் இல்லை.
கெடாவில் உள்ள பாலிங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸின் மகன் கூட காவல் படையின் துணையுடன் தனது காரில் பயணித்ததாக கடந்த ஆண்டில் செய்தியும் படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நமக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
இதே போல இன்னும் எத்தனை பேர் தங்களுடைய சுயநலத்திற்காக எங்கெல்லாமோ அத்தகைய சேவைகளை பயன்படுத்தி தங்களுடைய வாகனங்களில் பயணிக்கின்றனர் என்று தெரியாது.
‘அம்புலன்ஸ்’ வண்டிகள் மற்றும் காவல் துறையினரின் அதிகாரத்துவ வாகனங்களைத் தவிர்த்து அதிகமான தனியார் வாகனங்களும் கூட தற்போது காவல்படையின் துணையுடன் அல்லது சிறப்பு அவசர சமிக்ஞை விளக்குகளுடன் சாலைகளில் அதிவேகத்தில் ஊடுருவிச் செல்கின்றன.
யாருக்காக வழி விடுகிறோம் என்று தெரியாமலேயே அவர்களுக்காக நாம் ஒதுங்கி விலகி நிற்க வேண்டியக் காட்டாயத்திற்கு ஆளாகிறோம்.
பல வேளைகளில் ‘அமைச்சர்’ எனும் அடையாள அட்டைகளுடன் செல்லும் வாகனங்களும் கூட காவல் படையின் துணையுடன் அல்லது சிறப்பு அவசர சமக்ஞை விளக்குகளுடன் இவ்வாறு ஊடுருச் செல்கின்றன. அப்படியென்றால் நாட்டில் உள்ள எல்லா அமைச்சர்களுக்கும் நாம் இப்படி வழிவிட்டு ஒதுங்க வேண்டுமா எனும் கேள்வியும் எழுகிறது.
சில சமயங்களில் குற்றவாளிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை வாகனங்களுக்குக் கூட நாம் வழி விட வேண்டிய அவசியம் எற்படுவது வேடிக்கையாகத்தான் உள்ளது. சட்டத்தை மீறி குற்றம் புரிந்துள்ளோருக்கு சாலைகளில் இவ்வளவு முக்கியத்துவமா என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறது.
எனவே ‘எஸ்.ஓ.பி.’ எனப்படும் திட்டமிடப்பட்ட நடைமுறை ஒன்று வரையறுக்கப்படவில்லை என்றால் இத்தகைய வரம்பு மீறல்களினால் சாலைகளை பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளுக்குத்தான் தேவையில்லாத அசௌகரியம் ஏற்படும்.
அப்படியொரு ‘எஸ்.ஓ.பி.’ ஏற்கெனவே இருக்குமேயானால் சட்ட விதிகளுக்கு ஏற்ப அது முறையாக பின்பற்றப்படுவது அவசியமாகும்.
























