கி.சீலதாஸ் – சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் ஒருவர் இறந்தார் அல்லது பலத்த காயமடைந்தார் என்ற செய்தி வெளிவந்தால் அது அதிர்ச்சியைத் தந்தது. பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் அனுதாபம் பரவலாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாதாரண சாலை விபத்து கூட கடுமையானதாகக் கருதப்பட்டது என்றால் மிகையாகாது. அதற்கான காரணத்தை ஆய்ந்துப் பார்க்கும்போது சில உண்மைகள் புலப்படும். அன்று இயந்திர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் சாலைகளில் வாகன போக்குவரத்தும் மிக குறைவு. எனவே, விபத்துகளும் குறைவாகவே இருந்தன. வாகனங்களை ஓட்டுபவர்களின் சாலையைப் பயன்படுத்துதல் மெச்சத்தக்கதாக இருந்தது.
இன்று சாலை விபத்து நிகழாத நாளோ, நேரமோ கிடையாது. சாலை விபத்து சர்வசாதாரணமான ஒரு நிகழ்வு போல் கருதப்படுகிறது எனின் தவறாகாது. ஒரு காலத்தில் சாலை விபத்து, அதில் ஒருவர் காயமடைந்தார் என்றால் அது மக்களின் அனுதாபத்தை ஈர்த்தது. இன்று சாலை விபத்துகள் அதிகமாகிவிட்ட நிலையில் மக்களின் அனுதாப ஊற்று வற்றிவிட்டதைத்தான் காண்கிறோம்.
அடுத்து வாகனங்களின் எண்ணிக்கை அளவற்ற நிலையை அடைந்துவிட்டது. வாகனங்களின் எண்ணிக்கை கூடும்போது அவை சாலைகளில் நெரிசல் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாது. இதைப் புரிந்து கொண்டவர்கள் மிக குறைவு. புரிந்து கொண்டவர்கள் சட்டங்களை இயற்றுவதோடு சரி, அதன் அமலாக்கத்தில் ஏனோ மெத்தனமாக இருந்துவிட்டார்கள். அந்த நிலை இன்றும் நீடிக்கிறது என்றால் தவறாகாது.
வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கம், அவற்றை பயன்படுத்துவோரின் பலவிதமான மனப்பாங்கும் கவனிக்க வேண்டியதாகிவிடுகிறது. இதனால்தான் மேலை நாடுகளில் வாகனப் போக்குவரத்து சட்டங்களில் அடிக்கடி புது விதிகளைத் திணிக்கின்றனர். இவ்வழியாக வாகன விபத்துகளைக் குறைக்கலாம். உயிர் இழப்புகளைக் குறைக்கலாம். கடுமையான காயங்களால் மக்கள் அவதியுறுவதையும் தவிர்க்கலாம். இப்படிப்பட்ட சட்டங்கள் காலத்துக்கேற்ற தேவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பொது சாலைகளை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தடைகள் ஏதும் கிடையாது. ஆனால், சாலை சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை ஆங்காங்கே காணலாம். இப்பொழுது புதிய தகவல் ஊடகங்களில் விபத்துகளைப் பற்றி செய்திகள் வருவது விபத்துகளைத் தவிர்ப்பதற்கான ஓர் எச்சரிக்கை என்று சொல்வதில் தவறே இல்லை.
சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனும்போது அமலாக்கத்தின் பலவீனத்தால் வாகனம் பயன்படுத்துவதில் நிகழும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை எல்லோரும் பார்க்கின்றனர். ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் வேதனை கொண்டோரின் எண்ணிக்கை பெருகுவதானது அமலாக்கத்துறையைக் குறைத்து மதிப்பிடத் தோன்றும். அது நியாயமான கருத்தாகவோ அல்லது அவ்வாறு குறிப்பிடுவதில் உண்மை உண்டு என்று நினைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?
தெரிந்தே எந்தக் குற்றமும் செய்யக்கூடாது. அதனால் தெரியாமல் குற்றம் செய்யலாம் என்று கேட்கத் தோன்றும். விபத்துகள் – குறிப்பாக வாகன விபத்துகள் வேண்டுமென்றே இழைக்கப்படும் குற்றமல்ல. கவனக்குறைவு. சாலை பாதுகாப்பு விதிகளை மீறல் போன்ற குற்றங்கள் சாதாரண குற்றங்களாகக் கருதப்படுவதைப் போக்குவரத்து சட்டம் விளக்குகிறது. மரணம் விளைவித்தால் குற்றவியலாகக் கருதப்படும். எனவே, சாலையை யார் வேண்டுமானால் பாவிக்கலாம் என்றால் மற்றவர்களுக்கு யாதொரு இடைஞ்சல், சங்கடம், துன்பம் ஏற்படாமல் சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மை. அறிந்திருக்க வேண்டிய உண்மை. ஆனால், அதைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கைதான் பரிதாபமானதாக இருக்கிறது.
சாலை விபத்துகளில் மரணமுற்றோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சட்டங்கள், காலத்துக்கேற்ற கட்டுப்பாடுகள் – அதாவது பண்புகளைக் கால கட்டுப்பாடுகள் யாவும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கே! ஆயினும், வாகன விபத்துகள் குறைந்தபாடில்லை. ஒரே விபத்தில் பலர் இறப்பதும் இயல்பே.
அந்த வகையில் நடந்ததுதான் 18.2.2017 சாலை விபத்து. காலை மணி 3:20க்கு ஜொகூர் பாருவில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அதில் எட்டு சிறார்கள் மரணமடைந்தார்கள் மற்றும் எட்டு சிறார்கள் காயமடைந்தார்கள். மரணக் காயமடைந்தவர்களும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பியவர்கள் சிறார்கள். அவர்கள் யாவரும் மலாய்க்காரர்கள். இதை அரசியலாக்க துணிந்தவர்களும் இருந்தனர். விபத்தில் சம்பந்தப்பட்ட சம் கே திங் வாகனத்தை ஓட்டியவர். அவர் மீது சாலை போக்குவரத்து சட்டத்தின் (1987) 41(1)ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர் முரட்டுத்தனமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தார் என்பதாகும். வழக்கை விசாரித்த மஜிஸ்ட்ரேட் நியாயமான ஐயத்துக்கு அப்பால் அரசு தமது வழக்கை நிரூபிக்கவில்லை என்று கூறி சம் கே திங்கை விடுவித்தார்.
அரசு தரப்பு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி விபத்துக்கான காரணத்தை விளக்கவேண்டுமென உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பின்படி வழக்கை விசாரித்து அதைத் தள்ளுபடி செய்த மஜிஸ்ட்ரேட் சம் கே திங்கின் மறுப்புரையைச் செவிமடுத்தப் பின், மறுபடியும் அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார்.
மறுபடியும் அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சம் கே திங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை, ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சம் கே திங் செய்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின் சம் கேதிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறானது காரணம் குற்றவியல் சட்டத்தின் படி ஒருவர் மீது பல்வேறு குற்றங்கள் செய்தார் எனின் அவற்றை ஒன்றாக இணைக்கக்கூடாது. செய்த குற்றத்தைத் தனித்தனியாகத் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, அரசு மேற்கொண்ட முறை தவறானது. சட்டம் அனுமதிக்காது. அதன் அடிப்படையில் சம் கே திங் விடுவிக்கப்பட்டார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? குற்றத்தைச் சுமத்தும் அரசு தரப்பினர் செய்த குற்றத்தின் தகவல்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் இந்த உண்மையை உணராது செயல்பட்டது அதிசயமே. மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் செய்த தவறால் அநீதி ஏதும் நேர்ந்துவிடவில்லை. காரணம் தீர விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சம் கே திங் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். உயர் நீதிமன்றம் மேற்கொண்ட முறை ஏற்புடையது அல்ல என்பது ஒரு புறமிருக்க மஜிஸ்ட்ரேட்டின் தெளிவான விளக்கத்தை மனதில் பதிக்காமல்விட்டது கவலைக்குரியதே.
இந்த வழக்கைக் குறித்து மற்றுமொரு முக்கியமான அம்சம் என்னவெனில் விபத்து நடந்த சில நாட்களிலேயே ஜொகூர் அம்னோ இந்த விபத்தை விசாரிக்க வழக்குரைஞரை நியமித்திருப்பதாக அறிவித்தது. அடுத்து, சம் கே திங் 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டபோது அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சைது ஹமீட் கருத்து இந்த வழக்கைக் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் சாயல் இருந்ததையும் கவனிக்க வேண்டும்.
இன்று சம் கே திங் விடுதலையாகிவிட்டார். இந்த நாட்டில் நீதித்துறைக்கும் அதன் சுதந்திரத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்ல தோன்றுகிறது, அது உண்மையாக நீடிக்க வேண்டுமென விழைவதில் தவறு ஏதுமில்லை.