இராகவன் கருப்பையா – தொழிலாளர் தின சிறப்பு கட்டுரை.
சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை.
நவீன மயத்தில் கணினி உள்பட தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் தொழிலாளர் வர்கம் இல்லையென்றால் ஒரு அணுவும் நகராது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
அதற்கு உதாரணமாக விளங்குபவர்தான் தலைநகரைச் சேர்ந்த ஆதிமூலம் பெருமாள். கடந்த 1970ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையிலும் ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அவர் வறுமையின் எல்லா நிலைகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1955ஆம் ஆண்டில் காஜாங் பிராங் பெசார் தோட்டத்தில் பெருமாள் – அகிலாண்டம் தம்பதிகளின் 9 பிள்ளைகளில் 8ஆவதாகப் பிறந்த ஆதிமூலம் தமது 15ஆவது வயதிலேயே உழைக்கும் வர்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டார்.
அந்தத் தோட்டத்தில் இருந்த தமிழ் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் பிறகு செமிஞ்ஞே நகரின் பாலோ தோட்டத் தமிழ் பள்ளியிலும் அதற்கடுத்து பத்துமலை தமிழ் பள்ளியிலும் 6ஆம் வகுப்பு வரையில் கல்வி கற்றார்.
தலைநகர் பத்து லீமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் தமது கல்வியைத் தொடர்ந்த ஆதிமூலம் குடும்ப சூழல் காரணமாக 16 வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஒரு கட்டுமானத் தொழிலாளராக அன்றாடம் 5 ரிங்கிட் சம்பளத்திற்கு பணிபுரிந்த அவர் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஒரு துணை குத்தகையாளராக தம்மை உயர்த்திக் கொண்டார்.
அதன் வழி பலருக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த ஆதிமூலம் சுமார் 9 ஆண்டுகள் கழித்து பணப் பற்றாக்குறை காரணமாக அத்தொழிலை கைவிட நேர்ந்தது.
இதற்கிடையே கடந்த 1991ஆம் ஆண்டில் உலு பெர்னாமைச் சேர்ந்த நலினியை மணம்புரிந்த அவர் தமிழ் ஒசை நாளிதழில் ஒரு வாகனமோட்டுனராக பணியாற்றத் தொடங்கினார்.
அந்த நாளிதழ் மூடப்பட்டதைத் தொடர்ந்து செலாயாங் பாசார் போரோங்கில் உள்ள கோழி வினியோக நிறுவனம் ஒன்றில் சுமையுந்து ஒட்டுனராக தமது பணியைத் தொடர்ந்தார் ஆதிமூலம்.
தமது 52ஆவது வயதிலிருந்து ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தில் அல்லும் பகலும் அயராமல் உழைத்த அவர் உடல் நலக் குறைவு காரணமாக 58ஆவது வயதில் அந்த வேலையில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அச்சமயத்தில் 4 பிள்ளைகளுக்குப் பெற்றோராகியிருந்த ஆதிமூலம் – நலினி தம்பதியர் இயல்பாகவே கொஞ்சம் தடுமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிகரெட், மது போன்ற எவ்வித பழக்கமும் இல்லாத போதிலும் சற்று அதிகமாகவே அவர் நோய்வாய் பட்டார்.
இருப்பினும் உடல் நலம் ஓரளவு தேறிய பின் வேறு வழியின்றி ஒரு ‘மினி மார்க்கெட்’டில் மீண்டும் வாகனமோட்டுனராகப் பணியைத் தொடர்ந்த அவர் 3 ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தில் வேலை செய்தார்.
பிறகு வன்பொருள்(hardware) நிறுவனம் ஒன்றில் வேலைக்கு அமர்ந்த ஆதிமூலம் கடந்த 5 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் பிரதான ஊழியர்களில் ஒருவராக தடம் பதித்து வருகிறார்.
அவருடைய 4 பிள்ளைகளும் சிறப்பான கல்வி பெற்று மணமேடை கண்டுள்ள போதிலும் தமது உழைப்புக்கு எல்லை இல்லை என்று கூறும் 68 வயது ஆதிமூலம் தொழிலாளர் வர்கத்தின் அடையாளம் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை!