இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல் படை போன்றத் துறைகளில் நம் சமூகத்தினரின் பங்களிப்பு கம்மியாக இருப்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு குறைபாடு. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ அதற்கான பலதரப்பட்டக் காரணங்களை நாம் அறியாமலும் இல்லை.
ஆனால் ‘முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல’ தற்போது சிலர் பேசித்திரிவதுதான் நமக்கு வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது.
இவ்வாண்டு முற்பகுதி வரையிலான எண்ணிக்கை படி ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களின் விகிதாச்சாரம் 1.4% என்றும் சீனர்களின் பங்களிப்பு 0.5% எனவும் தற்காப்பு அமைச்சர் முஹமட் ஹசான் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். தனியார் துறையில் அதிக ஊதியம் கிடைப்பதுதான் இதற்கான மூலக் காரணம் என்று அவர் விளக்கமளிக்க முற்பட்டதுதான் நமக்கு வேடிக்கையாகப் படுகிறது.
தரைப்படை தளபதி முஹமட் அப்துல் ரஹ்மானும் கிளிப்பிள்ளையைப் போல அவ்வாறே ஒப்புவிக்கிறார். அதாவது தனியார் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தைப் போல அரசாங்க தற்காப்புத் துறையில் இல்லாததால்தான் பூமிபுத்ரா அல்லாதார் ராணுவத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை என இரு தினங்களுக்கு முன் அவர் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே ராணுவத்தில் என்ன நடக்கிறது, நம்மவர்கள் ஏன் அவ்வளவாக தீவிரம் காட்டுவதில்லை என்பதெல்லாம் இவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்த போதிலும் அது பற்றி யாரும் பொருள்படுத்துவதில்லை.
ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காக முன்வரிசையில் நின்று போராட வேண்டும் என்றெல்லாம் சிறு வயது முதல் இலட்சியங்களை மனதில் வளர்த்துக் கொண்டு நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள் கடந்த காலங்களில் ஆகாயப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட தற்காப்புத் துறையில் இணைந்துள்ளனர்.
ஆனால் நடந்தது என்ன? எவ்வளவுதான் தகுதியும் திறமையும் இருந்தும் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அங்கீகாரமோ பதவி உயர்வோ கிடைக்காமல் அடுத்தக் கட்டத்திற்கு நகர இயலாமல் அடைந்த ஏமாற்றங்கள்தான் அதிகம். இதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
‘ராணுவம் குறைவான ஊத்தியத்தை வழங்குகிறது, அதனால்தான் நாங்கள் அதில் சேர விருப்பமில்லாமல் இருக்கிறோம்’ என்று யாரும் கூறியதாக இதுவரையில் நாம் கேள்விபட்டதே இல்லை.
தற்காப்புத் துறையில் நம் இனத்தவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வும் வெறும் ‘குதிரைக் கொம்பு’தான் என்பதற்கு அத்தாட்சியாக ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரி பல கசப்பான விஷயங்களை அண்மையில் ஊடகம் ஒன்றில் பட்டவர்த்தனமாக பகிர்ந்திருந்தார்.
பூமிபுத்ரா அல்லாதார் பதவி உயர்வு பெறுவது மிகவும் சிரமம் என்றும் ஒரு பதவி உயர்வுக்கு தாம் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது எனவும் அவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமின்றி முஸ்லிம் அல்லாதாரின் சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுவது இல்லை என்றும் இந்துக்களுக்கு மாட்டு இறைச்சி பறிமாறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு எதிராக குரல் எழுப்பினால் அதன் பிறகு பொறித்த முட்டை வழங்கப்படும் என்றார் அவர்.
பிரார்த்தனைகளின் போது குறிப்பிட்ட ஒரு சமயத்தினரின் பாதுகாப்புக்காக மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் இன, சமய பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்காகவும் அது இருக்க வேண்டும் என்றார்.
இது போன்ற காரணங்களினால்தான் தமது பிள்ளைகளோ உறவினர்களின் பிள்ளைகளோ ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டவில்லை என அந்த இணையத்தள ஊடக பேட்டியில் அவர் மேலும் கூறியிருந்தார்.
கடந்த 1967ஆம் ஆண்டில் நாட்டின் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட 31 வயது தனபாலசிங்கம் சில கசப்பான அனுபவங்களினால் தமது 40ஆவது வயதிலேயே அப்பதவியைத் துறக்க நேர்ந்ததும் நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.
காவல் துறையிலும் கூட 1977ஆம் ஆண்டில் அழகேந்திரா, 2018ஆம் ஆண்டில் தெய்வீகன் மற்றும் 2019ஆம் ஆண்டில் நரேணசேகரன் போன்றோர் அதிக பட்சம் மாநிலத் தலைவர் வரைதான் பதவி உயர்வு பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.