காத்திருந்த நீதிபதியும், காக்கப்பட்ட நீதியும்

கி.சீலதாஸ் – தனிமனிதனின் உரிமை எக்காலத்திலும் மதிக்கப்பட, பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு மிகுந்த அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் உரிமையாகும். ஒரு காலத்தில், இருபதாம் நுற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உரிமைக்கு மரியாதையோ, பாதுகாப்போ கொடுக்கப்படவில்லை என்பதும் வரலாறு.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல மனிதர்கள் அவமதிக்கப்பட்டார்கள். எவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்தக் கேவலமான, கொடுமையான நிலை முடியாட்சிகளில் கேட்பார் இன்றி அமலில் இருந்ததையும் வரலாறு விளக்க தவறவில்லை.

தனிமனிதனின் உரிமை என்றால் ஒருவர் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதை வேண்டுமானாலும் செய்யும் உரிமை என்று பொருள்படாது. மாறாக, அது பல சட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும். அந்தக் கட்டுப்பாடுகளைப் புரிந்து கொண்டு உரிமைகளைப் பயன்படுத்த வேண்டும். தவறினால் சட்டம் தன் கைவரிசையைக் காட்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒருவரைத் தடுத்து வைக்க வேண்டுமானால் சட்டப்படிதான் அதை நிறைவேற்ற வேண்டும். இதையும் அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. உறுதிபடுத்துகிறது. சட்டம் இருக்கின்றது; பாதுகாப்புகள் இருக்கின்றன. அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு உதவியாக இருப்பவைதான் நடைமுறை சட்டம்.

எனவே, சட்டத்தை இரு வகையாகப் பிரித்துச் செயல்படுகின்றன என்பதே உண்மை.

ஒன்று, நிலைமுறை சட்டம் மற்றது நடைமுறை சட்டம். உதாரணத்துக்கு நிலைமுறை சட்டம் என்றால் திருடுவது குற்றம் என்கிறது குற்றவியல் சட்டம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்படும் என்பதும் விளக்கப்படுகிறது. இதை தண்டனைக்குச் சட்டத் தொகுப்பு விளக்குகிறது.

இப்படிப்பட்ட சட்டம் இருக்கும்போது பாண்டிய மன்னன் கோவலனைத் தண்டித்தது போல் தண்டிக்க முடியுமா? சிலப்பதிகாரத்தை அறியாதார் யார்? கண்ணகி கொடுத்த சிலம்பைக் கோவலன் பொற்கொல்லனிடம் கொடுக்கின்றான். பொற்கொல்லன் சங்கடமான நிலையில் அப்பொழுது தவித்துக் கொண்டிருந்தான். அரசியின் சிலம்பை இழந்தவனுக்குக் கண்ணகியின் சிலம்பு அவனைக் காப்பாற்றிவிட்டது என்று நினைத்து, அதுவே காணாமற்போன கோப்பெருந்தேவி அரசியின் சிலம்பு என்கிறான்.

பொற்கொல்லனின் பொய்யுரையை நம்பி பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரண தண்டனை வழங்குகிறான். தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அநீதி நிகழ்ந்துவிட்டது. கோவலன் தந்த சிலம்பு அரசியினுடையது அல்ல. திருட்டு குற்றத்திற்கு மரண தண்டனை அக்காலத்தில் ஏற்புடையதாக இருந்தது. இன்று அப்படிப்பட்ட குற்றம் வேறுவிதமாகத் தண்டிக்கப்படுகிறது.

பாண்டிய மன்னன் நிலைமுறை சட்டத்தைப் பயன்படுத்தினானே அன்றி நடைமுறை விதிகளைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு. எனவே, சட்டம் இருந்தால் மட்டும் போதாது. அதை அமலாக்கும் போது அது தொடர்பான நடைமுறை விதிகளைக் கையாள வேண்டும் என்பதும் நீதியின் ஓர் அடிப்படை தத்துவமாகும். இதுவே இரண்டாம் வகை சட்டம்.

அந்தப் பாதுகாப்பும் மனித உரிமை சட்டத்துக்கு உட்பட்டதாகும். அதாவது, ஒருவரின் குற்றத்தைச் சட்டத்திற்கிணங்க நிரூபிக்க வேண்டும். அதே சமயத்தில், சட்டம் தரும் பாதுகாப்புகளையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அப்படியே அலட்சியப்படுத்தினால் ஒருவரின் அரசமைப்புச் சட்ட உரிமை பாதிப்புறலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தவிர்க்க வேண்டியது சட்ட அமலாக்கத்துறை கடைப்பிடிக்க வேண்டிய முக்கியக் கடமையாகும்.

இந்த முன்னுரையை மனத்தில் கொண்டு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவனிப்போம். அறுவர் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்; குற்றத்தை மறுத்தனர். அவர்களைப் பிணையத்தில் விடுவிக்க நீதிமன்றம் உத்திரவிட்டது.

வார இறுதி. அதுமட்டுமல்ல பெருநாள் விடுமுறையும் சேர்ந்துவிட்டது. இந்த அறுவரும் அவர்களின் வழக்குரைஞர் பிணையேற்போர்களோடு நீதிமன்ற அலுவலகத்திற்குப் போனபோது பிணைக்கான பணிகளைக் கவனிக்கும் மேசை (கவுண்ட்டர்) மூடப்பட்டிருந்தது. அது வியாழக்கிழமை, இருபதாம் திகதி. நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள். அதை முன்னிட்டு பிணை மேசை முன்கூட்டியே மூடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

அந்த அறுவரும் நோன்புப் பெருநாளைச் சிறையில் கொண்டாட வேண்டிய அவலநிலைக்கு ஆளானார்கள். இதைக் குறித்து பிரதமர் துறையிலுள்ள சட்ட அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசலீனா உதுமான் சாய்ட் வருத்தம் தெரிவித்ததோடு விசாரணை கோரியுள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவு துறையின் அறிக்கையின்படி பிணை மேசை மூடப்படவில்லை. பிணையேற்பவர்கள் வராததால் பிணை மறுக்கப்பட்டதாம். இதில் யார் சொல்வதை நம்புவது என்ற சங்கடம் எழலாம். அமைச்சர் கேட்டு கொண்டது போல நியாயமான, சுதந்திர விசாரணை தேவை என்று கோருவதில் அர்த்தம் இருக்கிறது.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தேன். ஏழெட்டு முதியவர்கள். ஆண், பெண் உட்பட செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்திரவை மதித்து பின்பற்றாததால் நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது சீனப் புத்தாண்டுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவமாகும்.

இதற்குப் பிறகுதான் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்னை வந்து கண்டனர். அவர்கள் என்னை வந்து பார்த்த நாளுக்கும் சீனப் புத்தாண்டு விடுமுறை நாளுக்கும் இடையில் ஒரு நாள் தான் இருந்தது. அந்த முதியோர்களை விடுவிக்க வேண்டுமானால் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குப் போகலாம். ஆனால், அங்கே செஷன்ஸ் நீதிபதி விடுப்பில் போய்விட்டார். பெருநாளுக்குப் பிறகுதான் வருவார். அடுத்து, உள்ளூர் உயர் நீதிமன்றத்தை அணுகுவது. அங்கே உயர் நீதிமன்ற நீதிபதி இல்லை.

அடுத்து என்ன செய்வது? பக்கத்து மாநிலமான மலாக்காவில் மனுவைத் தாக்கல் செய்து தீர்வைக் காணலாம். வழக்கின் பொருண்மைகளை ஆய்ந்துப் பார்த்தபோது தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தேன்.

வழக்கு மேல்முறையீட்டுக்குப் போனால் நிச்சயமாக ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆனால், இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். அதுவே முக்கியமாகப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

மலாக்கா நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டு ஓர் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் முக்கியத்துவத்தை, பொருண்மையை விளக்கி நீதிமன்றத்தில் வந்து சேர நேரமாகும். நீதிபதியிடம் இதை விளக்கி நான் சமர்ப்பிக்கும் மனுவைச் செவிமடுப்பாரா என்பதை அறிய விரும்புவதாக அதிகாரியிடம் சொன்னேன். அதுமட்டுமல்ல அன்று அவர்கள் சிறையில் இருக்கும் முதியோர்களை விடுவிக்காவிட்டால் அவர்கள் யாவரும் பல நாட்கள் சிறையில் கிடக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினேன்.

பத்து நிமிடங்களில் அழைப்பதாகக் கூறினார். சொன்னது போல் அழைத்தார். நீதிபதி என் மனுவை விசாரிக்க சம்மதித்துவிட்டார் என்ற நற்செய்தி வந்தது. எல்லா ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு மலாக்காவின் பழைய நீதிமன்றத்தை அடையும்போது, மணி ஒன்றுக்கு மேலாகிவிட்டது. நீதிபதி காத்திருப்பாரா? கோபப்படமாட்டாரா? என்ற சஞ்சலமான கேள்விகள் என்னை உறுத்தின.

நீதிபதி என் மனுவை விசாரிக்க காத்திருந்தது அவருள் நீதி குடியிருப்பதை உணர்ந்தேன். என் விளக்கங்களைச் செவிமடுத்தார், செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்ததோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க உத்திரவையும் பிறப்பித்தார். நீதிமன்ற அலுவலரிடம் தமது உத்திரவு உடனடியாகச் சிறைசாலைக்குப் போய் சேர ஏற்பாடு செய்யும்படி பணித்தார். அதுதான் நீதி!

சட்டம் இருக்கலாம். சட்ட அமலாக்க விதிகள் இருக்கலாம். ஆனால், நீதிதான் முக்கியம். நீதிமன்றங்கள் நெஞ்சில் அதைதான் கொண்டிருக்க வேண்டும். சொந்த நலன்களுக்கும் நீதிக்கும் போட்டி ஏற்படும்போது நீதிதான் வெற்றி பெற வேண்டும். அதுவே நீதிபரிபாலனம் செய்வோரின் கடமை. விடுமுறை வந்துவிட்டதால் நீதிக்கு விடுமுறையாகாது!