ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை – இராகவன் கருப்பையா
தேசிய பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை மேற்கொண்டு சுயமாகவே தமிழைக் கற்று தற்போது தமிழ் பள்ளி ஒன்றுக்கு துணைத் தலைமையாசிரியையாக கோலோச்சுகிறார் சிவகாமி வையாபுரி.
தமது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் தமிழ் பள்ளியில் சேர்த்த பெற்றோர், ஏதோ காரணத்தினால் தம்மை மட்டும் தேசிய பள்ளியில் பதிவு செய்ததாகக் கூறிய சிவகாமி, ஜொகூர், குளுவாங்கில் உள்ள மெங்கிபோல் தமிழ் பள்ளியில் தற்போது துணை தலைமையாசிரியையாக பணிபுரிகிறார்.
ஜொகூர் சுங்கை லாபிஸ் தோட்டத்தில் பிறந்த அவர் தேசிய பள்ளியில் சிறந்து விளங்கிய போதிலும் தமது சகோதரர்களும் சகோதரிகளும் எப்போதுமே தமிழ் புத்தகங்களில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்த போது தமக்கும் அம்மொழி மீது தானாகவே ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறினார்.
ஆர்வம் மட்டுமின்றி எப்படியாவது தாமும் தமிழைக் கற்று அவர்களைப் போலவே சிறந்து விளங்க வேண்டும் எனும் வேட்கை அப்போதே துளிர்விடத் தொடங்கியது என்றார் சிவகாமி.
அவருடைய இரு சகோதரர்களும் பொறியியலாளர்களாக பணியாற்றும் வேளையில் இரு சகோதரிகளும் ஆசிரியைகளாக உள்ளனர்.
எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அவர் 1998ஆம் ஆண்டில் ஜொகூர் பாருவில் உள்ள தெமங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார்.
தமிழ் பள்ளி ஆசிரியராக வேண்டும் எனும் ஒரே குறிக்கோளில் தமிழை முதன்மை பாடமாகத் தேர்வு செய்த சிவகாமி அக்கல்லூரி தேர்வுகளிலும் சிறப்பு தேர்ச்சி பெற்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
அதன் பிறகு குளுவாங்கில் உள்ள ஜாலான் ஹாஜி மானான் தமிழ் பள்ளியில் ஆசிரியை பணியைத் தொடக்கிய அவர் எண்ணற்ற மாணவர்கள் அங்கு சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார். அங்கு பணியாற்றிய காலத்தில் கல்வியமைச்சின் சிறந்த சேவைக்கான விருதை மும்முறை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 900 மாணவர்களைக் கொண்ட அப்பள்ளியில் ஏறத்தாழ 17 ஆண்டுகள் பணியாற்றிய சிவகாமி, 2017ஆம் ஆண்டில் புறப்பாடு துணை தலைமையாசிரியையாக பதவி உயர்வு பெற்று உலு ரெமிஸ் தோட்டத் தமிழ் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டில் மற்றொரு பதவி உயர்வு பெற்ற அவர் மெங்கிபோல் தமிழ் பள்ளியில் துணை தலைமையாசிரியை பொறுப்பை ஏற்றார்.
கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபட்ட சிக்கலான காலக்கட்டமான கடந்த இரண்டு ஆண்டுகளாக தமது பள்ளியின் அடைவு நிலை துரித வளர்ச்சி காண்பதற்கு சிவகாமியின் பங்கு அளப்பரியதாக உள்ளது என அதன் தலைமையாசிரியர் புவனேஸ்வரி வெகுவாக பாராட்டினார்.
தமிழ் மொழி மீது அதீத பற்றுடைய சிவகாமி, 1995ஆம் ஆண்டில் இடைநிலை பள்ளியாசிரியர் செல்வராஜாவை கரம் பிடித்தார். அவர்களுக்கு 2 புதல்விகளும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் மருத்துவராக பணியாற்றும் வேளையில் இளைய புதல்வி ஆசிரியை பயிற்சியிலும் மகன் பொறியியல் மாணவராகவும் உள்ளனர்.
தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் சிறந்தோங்க வேண்டும் எனும் வேட்கையில் கடுமையான பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டால் யாராலும் அம்மொழியில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு சிவகாமியை விட வேறொருவர் உதாரணமாக இருக்க முடியாது.
தமிழ் பள்ளி சென்றிராத போதிலும் சுய முயற்சியால் அம்மொழியில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி இளம் மாணவர்களின் வழி அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு பாடுபடும் சிவகாமி பாராட்டுக்குரியவர்.