கி.சீலதாஸ் – இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் இது. சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி சுமத்தப்படுகிறது.
ஒரு காலத்தில் இன, சமயப் பிரச்சினைகள் அவ்வளவாகத் தலையெடுத்திராத போது (அது பொற்காலம் என்று கூட சொல்லலாம்). அரசியல் எப்படி இருந்தது என்றால் சமுதாயத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு அநீதிக்கும், குற்றச்செயல்களுக்கும் கம்யூனிஸ்டுகள் தான் காரணம் எனப் பழி சுமத்தப்பட்டது. இன்று கம்யூனிஸம் பொலிவிழந்து ஒரு சக்தியற்ற, மறைந்துபோன இயக்கமாகக் கருதப்படுகிறது.
இப்பொழுது அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு உருப்படியான கொள்கை இல்லை என்ற நிலை ஏற்படும்போது விஷமத்தனமான இன, சமய அரசியலை நடத்த துணிந்தவர்கள் சிறுபான்மையினர் மீது ஆதாரமற்ற, நேர்மையற்ற முறையில் தாக்குவது அரசியல் அநாகரீகமாகும்.
எங்கெல்லாம் சமுதாய அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் யார் மீதாவது பழியைச் சுமத்துவது அரசியல் நாகரீகமாகக் கருதி செயல்படுவது சர்வசாதாரணமான நடவடிக்கையே.
சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அரசியல் மோசடியாகும்.
இதை முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல் என்றாலும் தகும். எனவே, முதலில் இந்தச் சிறுபான்மை அதற்கு எதிர்மாறான பொருள் கொண்டிருக்கும் பெரும்பான்மை எனப்படும் சொற்களின் முறையான அர்த்தங்களைச் சற்று கவனிப்போம்.
அரசியல் மொழியில் பெரும்பான்மை என்றால் பல்லினங்கள் கொண்ட நாட்டில் ஓர் இனம் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்று பொருள்படும். சிறுபான்மையினர் என்றால் மொத்த மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள் என்று பொருள்படும். எனவே, பெரும்பான்மையினரின் எண்ணிக்கைக்குக் குறைவானவர்களைச் சிறுபான்மையினர் என்று பிரித்துப் பார்ப்பதும் இயல்பே!
இந்த வித்தியாசத்தை மனத்தில் கொண்டு பொதுத் தேர்தலை அணுகினால் ஒரு கட்சி அதிக பெரும்பான்மை பெற்றிருந்தால் அதுவே ஆட்சி அமைக்கும் பொறுப்பை ஏற்கிறது. இது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் கிடைக்கும் பெரும்பான்மை இடங்களைக் குறிக்கிறது.
சில சமயங்களில் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அரசமைக்கும் பெரும்பான்மை இருக்காத போது மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து சிறிய பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சி அமைப்பதும் அரசியலில் நடக்காத அதிசயமல்ல.
இதை சிறுபான்மை (மைனாரிட்டி) அரசு என்று கேலி செய்யப்படுவதும் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே அரசியலில் காணப்படும் பெரும்பான்மை, சிறுபான்மை வித்தியாசம்.
அடுத்து, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற சொற்கள் வெறும் இன எண்ணிக்கையை மட்டும் குறிக்கிறது என்பது தவறான புரிதலாகும்.
பெரும்பான்மை மக்களில் ஒரு சிலர் மட்டும் தனவந்தர்களாக யாதொரு பொருளாதார சங்கடமுமின்றி வாழ்வார்கள். பெரும்பான்மை இனத்தில் இப்படிப்பட்டவர்களைச் சிறுபான்மையினர் என்று சொல்வதும் உண்டு.
பொதுவாகவே, பெரும்பான்மையினரின் கருத்து சிறுபான்மையினரின் கருத்து என்று வேறுபடுத்தி கூறும்போது அது இனவாரியாகப் பிரித்து அணுகப்படுவதில்லை. இன, சமயத் தொடர்பற்ற ஒரு தரத்தைக் குறிக்கிறது எனலாம்.
உதாரணத்திற்கு, கோவிட் பரவலால் பெரும்பான்மையினர் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர் என்பதானது இனவாரியாகப் பிரித்துக் காணாமல் எல்லா மக்களையும் குறிக்கிறது.
நீதித்துறையை எடுத்துக்கொண்டால் ஐந்து நீதிபதிகள் ஒரு வழக்கில் சட்டத்தை விளக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். மூவர் ஒரு விதமாகவும்; இருவர் மாறாகவும் தீர்ப்பளிப்பர். மூவரின் தீர்ப்பைப் பெரும்பான்மை தீர்ப்பு என்றும் இருவரின் தீர்ப்பு சிறுபான்மையினரின் தீர்ப்பு என்பதும் சட்டத்துறைக்குப் பழக்கமான மரபாகும்.
எனவே, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொற்களின் பொருள் சூழலுக்கேற்ப மாறுவதைக் காணலாம்.
இந்த நாட்டு அரசியல் கட்சிகள் இன விஷயங்களில் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, பொதுத் தேர்தலில் மூக்குடையப்பட்டவர்கள் யாவரும் ஆக்ககரமான அரசியலை நடத்துவதற்கு வக்கின்றி தடுமாறும்போது இனப் பிரச்சினை எழுப்புவது எவ்வளவு ஆபத்தான காரியம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது ஆச்சரியம்.
அல்லது அப்படிப்பட்ட துவேஷ நடவடிக்கை விபரீதமானது என்பதை அறிந்திருந்தும் விளைவுகளைப் பொருட்படுத்தாதவர்களின் நடவடிக்கை தேசத்துக்குக் கேடு இழைக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று முடிவெடுப்பதில் என்ன தவறு?
சில அரசியல் கட்சிகள் சிறுபான்மை சமூகத்தினரைக் குறிவைத்து பாழான ஊழலுக்கும் மற்றும் பல கொடிய குற்றச்செயல்களுக்குச் சிறுபான்மையினரே பொறுப்பு என்று சொல்லித் திரிவது நாட்டில் இனப் பகை வளர்வதற்கு விதைக்கப்படும் நடவடிக்கையாகும்.
நாட்டில் பல்லாயிரம் கோடி பணம் ஒரு சிலரின் கையில் தான் இருந்தது எனின் அந்த “சிலர்” யார்? அவர்கள் பெரும்பான்மை இனத்தின் ஆதரவோடு அதிகாரத்தில் அமர்ந்து வாய்ப்புகளை உருவாக்கி மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களாகும்.
இந்தச் சிலர் தான் பெரும்பான்மை சமுதாயத்தின் இனப் பலத்தை வைத்து நாட்டின் வளத்தைச் சூறையாடினார்கள். இந்த உண்மையைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் வெளிப்படுத்தியிருப்பதை ஒதுக்கிட முடியுமா?
சிறுபான்மையினர் மீது வீணாகப் பழி சுமத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆதாரமற்ற முறையில் முறைகேடான, ஆபத்தான இனப் பகைமைக்கும் வித்திடும் பேச்சு, செயல்கள் யாவும் நாட்டின் அமைதியைப் பாதிக்கும் என்பது மட்டுமல்ல நாட்டு மக்கள் நிம்மதியாகவே வாழ முடியாது.
இதைக் குறித்து அரசு என்ன செய்கிறது? எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம்? பெரும்பான்மை இனத்தின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொள்வதில் தவறில்லை என்றாலும் பொய்யான பிரச்சாரத்துக்கு இடமளிப்பது பொய்மைக்கு ஆரத்தி எடுப்பது போல் அல்லவா இருக்கிறது.
பொய்களையே தங்களின் அரசியல் கொள்கையாகக் கொண்டு செயல்படுவோரை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களின் உண்மை சொரூபத்தை அம்பளப்படுத்த வேண்டும்; மக்கள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் வெறுப்புணர்வுக்கு இடமிருக்காது. அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் வெறுமனே இருந்துவிட வேண்டுமா?
ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் குடிமக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தோன்றுகிறது.