அரசாங்கத்தை கவிழ்க்க வெறித்தனமான வேட்கை

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்வுபெற்ற ஒரு அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் வெறித்தனமான வேட்கையில் ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது.

அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து கொல்லைப் புறமாக உள்ளே நுழைவதே அந்த அடாவடிக் கூட்டதின் பிரதான நோக்கமாகும். அந்தக் கும்பலுக்கு கதாநாயகன் முன்னாள் பிரதமர் மகாதீர்தான் எனும் உண்மையை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் தலைநகரில் மலாய்க்காரர்களை ஒன்று திரட்டி ‘மலாய் பிரகடணம்’ எனும் தலைப்பில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த அவர் போட்டிருந்தத் திட்டம் ஈடேறவில்லை. அனுமதி கிடைக்காததால் அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இருந்தும் அவர் விட்டபாடில்லை. எதிர்கட்சிகளில் உள்ள எல்லாரையும் ஒன்று திரட்டி ‘மலாய் பிரகடணம்’ என மீண்டும் ஒரு பிரச்சாரத்தை வீணே கிளப்பிவிட்டு கையெழுத்து வேட்டையொன்றைத் தொடக்கியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொல்லைப் புறமாக வந்து நல்லாட்சியைக் கவிழ்த்து அரசாங்கத்தைக் கைப்பற்றிய கும்பல் இதனை சாதகமாகக் கருதுவதைப் போல் தெரிகிறது.

காலங்காலமாக ஜென்ம விரோதிகளைப் போல எதிரும் புதிருமாக நின்ற மகாதீரும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடியும் இப்போது அந்த பிரகடணத்தின் வழி ஒட்டி உறவாடுவதைப் பார்க்க வெகுசன மக்களுக்கு சகிக்கவில்லை என்றால் அது மிகையில்லை.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் 100 வயதை அடையவிருக்கும் மகாதீரும் 75 வயதைத் தாண்டியுள்ள ஹாடியும் மக்களின் ஜனநாயக உரிமைக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல், மக்களின் நலனை துச்சமெனக் கருதி தங்களின் சுயலாபத்திற்காக அரசாங்கத்தைக் கவிழ்க்க எண்ணும் செயலை என்னவென்று சொல்வது!

பிரதமர் அன்வார் மலாய்க்காரர்களை உதாசினப்படுத்துகிறார் என மகாதீர் பொய்ப் பிரச்சாரம் செய்து இன உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என ஹாடி ஒற்றைக் காலில் நிற்கிறார்.

அதற்கு ஏற்றாற் போல, அரசாங்கத்தைக் கவிழ்ப்பது சட்டவிரோதமான ஒன்றல்ல. அவ்வாறானச் செயல் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒன்றுதான் என நியாயப்படுத்தி முன்னாள் மூத்த அமைச்சர் அஸ்மின் அலி துளியளவும் வெட்கமில்லால் ஒரு அறிவிப்பைச் செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்கு இவர்தான் முதுகெலும்பாக செயல்பட்டார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

கொல்லைப்புற அரசாங்கத்தின் நாயகன் என்று கருதப்படும் முன்னாள் பிரதமர் முஹிடின், ‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ கிடைக்கும்’ எனும் நிலைப்பாட்டில் ஒரு புறம் ஏங்கி நிற்கிறார்.

இவர்கள் எல்லாருமே ருசிகண்ட பூனைகளைப்  போல, ஆட்சியில் கிடைக்கும் சகல சுக போகங்களையும் மீண்டும் அனுபவிக்க புழு போலத் துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்தக் கூட்டமா நாட்டை நிமிர்த்தப் போகிறது எனும் ஐயப்பாடு அனைவருக்கும் உண்டு.

இரண்டு தடவை பிரதமராக இருந்த மகாதீர் எல்லா சுகங்களையும் நிறைவாக அனுபவித்துவிட்டார். இப்போது அவர் பாடுபடுவதெல்லாம் அன்வாரைக் கவிழ்ப்பதற்கும் தனது மகன் முக்ரிஸின் அரசியல் பிழைப்புக்கும்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

அதே போல 2020ஆம் ஆண்டில் அதிர்ஷ்டவசமாக பிரதமர் பதவியில் அமர்ந்த முஹிடின் மீண்டும் அதனை சுவைக்கத் துடிக்கிறார். ஏற்கெனவே கடந்த காலங்களில் சக்திவாய்ந்த உள்துறை அமைச்சர் பதவி, துணைப் பிரதமர் பதவி மற்றும் ஜொகூர் மந்திரி பெசார் போன்ற பதவிகளை அலங்கரித்த அவர் தனது தலையில் தற்போது சுமந்து நிற்கும் மிகப் பெரிய ஊழல் வழக்கிலிருந்து விடுபடுவதற்கும் வழி தேடுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

அவருடைய ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமனம் பெற்ற ஹாடியின் நிலையும் அப்படிதான். ஹாடி ஒரு தீவிரவாதி என முத்திரை குத்தி சில அரபு நாடுகள் அவரை நாட்டுக்குள்ளேயே விடவில்லை. இதனால் உள்நாட்டிலேயே முடங்கி அமைச்சர் அந்தஸ்துக்கான சகல சுகங்களையும் அவர் உள்ளாசமாக அனுபவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக கொஞ்சமும் தகுதியில்லாதவர்களின் கைகளில் மாட்டிக்கொண்ட மலேசியா நிலையில்லாத ஆட்சியினால் அவதிப்பட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வழியில்லாமல் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதே கூட்டம்தான் தற்போது மீண்டும் நாட்டை கைப்பற்றக் கங்கணம் கட்டி திட்டம் தீட்டி வருவதாகத் தெரிகிறது. மக்களின் நலன் குறித்து அக்கும்பலுக்கு கவலையே இல்லை.

எது எப்படியாயினும் கடந்த 6 மாதங்களாக கூட்டணி ஆட்சியின் கீழ் மீண்டும் நல்லாட்சியைப் பெற்றுள்ள மக்கள் எம்மாதிரியான அரசாங்கத்தை விரும்புகின்றனர் என்பது வெள்ளிடை மலை.