மித்ராவின் வெளிச்சம் இந்தியர்களின் இருட்டை அகற்றுமா?

இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது.

முன்பு ‘செடிக்’ எனும் பெயரில் பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்ட அப்பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது. அதன் பிறகு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் அது கொண்டு வரப்பட்டதும் நாம் அறிந்த ஒன்றே.

எனினும் அப்பிரிவில் அளவு கடந்த பலவீனங்கள் இருந்ததால் உதவிக்காக ஏங்கிக் கிடந்த மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பணம் அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரால் வழிமறிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, நம் சமூகத்திற்கென அரசு ஒதுக்கிய தொகையை முழுமையாக பயன் படுத்த இயலாத நிலையில் மீதத் தொகையை அரசாங்கத்திடமே திருப்பி ஒப்படைத்தது வருந்தத்தக்கது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் செய்த ஒரு நல்ல காரியம் என்னவென்றால் மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர அப்போதைய பிரதமர் சப்ரியிடம் பரிந்துரை செய்ததுதான்.

இவ்வளவு அவலங்களையும் கடந்து தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மித்ராவின் செயல்பாடுகள் நம் சமூகத்தைச் சேரும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

மித்ராவை நிர்வாகம் செய்வதற்கு பி.கே.ஆர்., ஜ.செ.க., ம.இ.கா. ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த துடிப்பு மிக்க இந்திய அரசியல்வாதிகளை இணைத்துச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்ததன் வழி பிரதமர் அன்வார் நம் சமூகத்திற்குச் சிறப்பான வழித்தடம் ஒன்றை அமைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இனிமேல் மித்ராவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என அக்குழுவின் தலைவரான சுங்ஙை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமணன் அறிவித்துள்ளார். எனினும் அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பலருடைய கழுகுப் பார்வையின் கீழ் அந்தக் குழு இயங்குவதால் கடந்த கால களவுகளைப் போல இனிமேலும் நடக்க வாய்ப்பிருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

‘சூட்டோடு சூடாக’ காரியத்தில் இறங்கிய அக்குழு பொது பல்கலைக் கழகங்களில் பயிலும் பி40 தரப்பைச் சேர்ந்த 10,000 இந்திய மாணவர்களுக்கு தலா 2000 ரிங்கிட்டும், 900 சிறு நீரக நோயாளிகளின் ரத்த சுத்திகரிப்புக்கும் தமிழ் பாலர் பள்ளிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.

தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசு கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காத காரணத்தாலும் நினைத்த துறைகளில் கல்வியைத் தொடர இயலாததாலும்தான் கடனை உடனை வாங்கி சொந்தமாகப் படிக்கின்றனர். அவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தவறாக எடைபோட்டு உதாசினப்படுத்தக் கூடாது என சுட்டிக் காட்டியபோது, அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என ரமணன் உறுதியளித்தார்.

அதே போல ‘அக்கா நாசி லெமாக்’ எனப்படும் பிரபல அங்காடி வியாபாரியான சங்கீதாவுக்குச் சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளுக்கும் ரமணன் விளக்கமளித்தார்.

சங்கீதா கடந்த ஆண்டில் செய்திருந்த விண்ணப்பத்திற்குத்தான் அந்த உதவி என்றும் இம்மாதம் 28ஆம் தேதி வரையில் அவரைப் போல இதர அங்காடி வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் உறுதி கூறினார்.

மித்ரா வழங்கும் உதவித் தொகைகள் தொடர்பான அனைத்து விபரங்களும் www.mitra.gov.my எனும் அதன் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் எந்நேரத்திலும் பொது மக்கள் அது குறித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

எனினும் உதவித் தொகைகளை பெரும் தரப்பினர், குறிப்பாக அரசு சாரா இயக்கங்களின் நம்பகத்தன்மையை மித்ரா உறுதி செய்ய வேண்டும். சரியான தரப்பினரிடம் பணம் சென்று சேர்வதையும் முறையான நோக்கங்களுக்காக அவை செலவிடப்படுவதையும் அக்குழு உறுதி செய்வது அவசியமாகும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் இப்படிப்பட்ட அமைப்புகளின் வழிதான் எண்ணற்ற அரசியல்வாதிகளும் தனிப்பட்டவர்களும் மில்லியன் கணக்கில் மித்ரா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்று நம்பப்படுகிறது.

எனவே இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இதற்கு பொறுப்பேற்பது மித்ராவின் தார்மீகக் கடமையாகும். இல்லையேல் ‘பழைய குருடி கதவை திறடி’ என்ற நிலைதான் மீண்டும் ஏற்படும்.

இன்னொரு கோணம்

இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது, மித்ரா வழி சமூக மேம்பாட்டுக்காகப் பண ஒதுக்கீடு செய்யப்படுவது, இயல்பாக செயல்பட்டு வந்த தொண்டூழிய அமைப்புகளின் சேவைகளை பலத்த பின்னடைவை அடைந்தன. அதோடு மித்ரா அமைப்பின் வழி இந்தியர்களின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார பின்னடைவைச் சீராக்க இயலுமா?

தொன்றுதொட்டு சேவை மனப்பான்மையுடன் பலவகையான சமூக அமைப்புகள் காலம் காலமாக சமூக உணர்வுடன் செயல்பட்டு வந்தன. ஆரம்பக் காலங்களில் மணிமன்றம், இந்து இளைஞர் இயக்கம், இந்து சங்கம், கல்வி சமூக நல ஆய்வு வாரியம், சைல்டு அமைப்பு, தமிழ் அறவாரியம், மலேசியத் திராவிடர் கலகம் போன்றவை செவை அடிப்படையில் பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

இவர்களிடையே சமூக உணர்வு வித்திடப்பட்டது. சமூக  பிரச்சனைகள் இவர்களுக்குச் சவாலாகக் காணப்பட்டது. மாற்றம் தேடி இவர்கள் சமூக ஈடுபாட்டுடன் இயன்ற திட்டங்களை மேற்கொண்டனர். சமூக பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்க ஈடுபாடு ஆணி வேரிலிருந்து உருவாக வேண்டும் என்ற வேட்கையும் இருந்தது.

2007-இல் நடந்த ஹிண்ராப் பேரணி, மலேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் ஏழை இந்தியகர்கள் ஓரங்கட்டப்பட்டதைப் பிரதிபலித்தது.

எனவே மித்ரா – வின் உதவிகள் தொடரட்டும், ஆனால் இந்தியச் சமூக பொருளாதார மாற்றம் இன்னும் ஆழமானது. அதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் விவாதிப்போம்.