மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு கசியும் பட்ஜெட்டில் 3% மட்டுமே – (பகுதி 2)

இராகவன் கருப்பையா – நம் இனத்தின் மேன்மைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பிரத்தியேகமாக ஒதுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை உதவித் தேவைப்படுவோருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உருப்படியாகச் சென்று சேர்வதைக்கான மகிழ்ச்சியாக உள்ளது என இத்தொடரின் முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டோம்.

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதற்கு ஏற்ப, தொகை சிறியதாக இருந்தாலும் இடையில் அது வழிமறிக்கப்பட்டுத் திசை திருப்பிவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்குப் பிரதமரே ஒரு சிறப்புக் குழுவை அமைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

எனினும் காலங்காலமாக ஒதுக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டுக் கிடக்கும் நம் சமூகத்தின் கடலளவிலான பிரச்சினைகளை இந்தத் தொகையோ அதனை நிர்வகிக்கும் மித்ராவோ தீர்க்க முடியுமா என்றால், ‘நிச்சயம் முடியாது’ என்பதுதான் உண்மை.

அரசாங்கம் ஒதுக்கியுள்ள 100 மில்லியன் ரிங்கிட்டோடு நம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்தத் தொகை ஒரு துரும்புதான் என்பதை யாராலும் மறுக்க மூடியாது. நமது அன்மைய வருடாந்தர பட்ஜெட் ரிம 388 பில்லியனாகும். சுமார் 6.7% இந்தியர்களுக்கு 100 மில்லியன் என்பது 0.025% ஆகும். இது கசிந்து காணாமல் போகும் சுமார் 3 பில்லியன் வருடாந்தர நிதியோடு ஒப்பிடுகையில் இந்த 100 மில்லியன் 3% ஆகும்.

உதாரணத்திற்கு 10,000 இந்திய மாணவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டவுடன் 20 மில்லியன் ரிங்கிட் தீர்ந்துவிடும். அதுவும் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொகை மட்டும்தான். தனியார் உயர் கல்விக் கூடங்களில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என மித்ரா இன்னும் அறிவிக்கவில்லை. இது மட்டும்தான் நம் சமூகத்தின் பிரச்சினையா? மீதமுள்ள தொகையைக் கொண்டு எல்லாப் பிரச்சினைகளையும் கலைய முடியுமா?

நம் இனம் சம்பந்தப்படாத மற்ற பல இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசு சார்ந்த நிறுவனநாளுக்கும் இதைவிடப் பன்மடங்கு அதிக அளவிலான தொகை ஒதுக்கப்படுவதும் நாம் அறிந்ததே.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஆக்ககரமான நிதி நிர்வகிப்பினைப் பிரதமரிடம் நிரூபிப்பதன் வழியும் அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முன்னெடுப்பை மித்ரா மேற்கொள்ள வேண்டும். பிரதமரே நிதியமைச்சராக இருப்பது இதற்கு ஒரு சாதகமான அம்சமாகும்.

இன்னும் சில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் என்பதால் ஒதுக்கீடு அதிகரிப்பு  தொடர்பான நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் மித்ரா உடனே முடுக்கிவிட வேண்டும்.

இருப்பினும் எத்தனை மடங்கு அத்தொகை அதிகரிக்கப்பட்டாலும் பணம் மட்டுமே நம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது எனும் நிதர்சனத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கொள்கை அளவிலான மாற்றங்களை அரசாங்கம் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றால் நீண்டகால மேம்பாடுகளை ஒரு போதும் நாம் பார்க்க முடியாது.

கோழிக்குத் தீனி போடுிவதைப் போல மித்ராவின் வழி கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தியச் சமூகத்திற்கான தனது கடப்பாடு முடிந்துவிட்டது என அரசாங்கம் எண்ணிவிடக் கூடாது.

அதே சமயம் கூடுதலான ஒதுக்கீட்டுக்குப் பொறுப்பேற்று அரசியல்வாதிகள் சுயமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கடந்த கால வழக்கங்களும் இனி இருக்கக் கூடாது. நம் பிரச்சினைகள் அதோடு நின்றுவிடுவதில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளில் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்றும் பொதுப் பல்கலைக் கழகங்களில் காலடி வைக்க முடியாத சோகம் நம் பிள்ளைகளுக்குப் புதிய பிரச்சினையில்லை. அப்படியே இடம் கிடைத்தாலும் காலங்காலமாகக் கனவில் வளர்த்த துறையில் பயில வாய்ப்புக் கிடைக்காத நிலை.

‘மெட்ரிக்குலேஷன்’ வகுப்புகளிலும் கூட நம் இனத்திற்குப் பிச்சை போடப்படும் சூழல்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.பி.எம். தேர்வுகளின் முடிவுகள் அடுத்த வாரம் வெளி வந்தவுடன் நம் மாணவர்களுக்கு மற்றொரு சுற்று போராட்டம் தொடங்கிவிடும். கல்வி உபகாரச் சம்பளம் கிடைப்பதிலும் எல்லை மீறிய கெடுபிடிகள், ஏமாற்றங்கள்.

அரசாங்க வேலை கிடைப்பதும் ‘குதிரைக் கொம்பு’ போலத்தான். அப்படியே கிடைத்தாலும் பதவி உயர்வு என்பது வெறும் பகல் கனவாகக் காற்றில் கரைவதுதான் மிச்சம்.

இதுவெல்லாமே ஆண்டாண்டுகாலமாக நாம் எதிர்நோக்கும் இனப்பாகுபாட்டு கொள்கைகளின் விளைவுகள்தான் என்பதும் மறுப்பதற்கில்லை.

“நான் மட்டும் இந்தியர்களின் பிரச்சினைகளைக் கவனிக்க முடியாது, ஒட்டு மொத்த அமைச்சரவையும் அதற்கு இறங்கி வேலை செய்யும்” என மனிதவள அமைச்சர் சிவகுமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவித்தார்.

பிறகு ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஊடகவியலாளர்களை ஒன்று திரட்டிய அவரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் சரஸ்வதியும், நம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கவனிக்க  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சக்திமிக்க குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றைச் செய்தனர். ஆனால் தற்போது ஏறத்தாழ 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒரு அணுவும் நகர்ந்ததாகத் தெரியவில்லை.

இதுபோன்ற ஏமாற்றங்கள் எல்லாம் நம் சமூகத்திற்குப் புளித்துப் போன ஒன்றுதானே! இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

எனவே நம் சமூகத்தை முடக்கிப் போட்டிருக்கும் குறைகளைக் கொஞ்சமாவது நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கொள்கையளவில் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றால் எத்தனை மித்ரா வந்தாலும் நமக்கான வெளிச்சம் மங்கலாகத்தான் இருக்கும்.