மலேசியர்களின் பூரிப்பு – நீடிக்குமா? பரவுமா?

கி. சீலதாஸ் – மலேசியர்கள் நெடுங்காலமாகவே பூரிப்போடு இருக்க முடியவில்லை. சமயச் சச்சரவு, இனச் சச்சரவு, மொழி சச்சரவு என எதையாவது ஏற்படுத்தி மலேசியர்களின் மன அமைதியைக் கெடுத்தது மட்டுமல்ல அவர்கள் மகிழ்வுடன் இருக்க முடியாமல் செய்தனர் சிலர்.

அந்த நிலை மடிந்து, பூரிப்புடன் வாழ நினைத்த மலேசியர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் தான். இன்று கூட புதிய ஒற்றுமை அரசின் இன, சமய வேற்றுமையைப் பெரிதுபடுத்தாமல் ஒற்றுமையைக் காண முற்படுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டாலும் எதைத் தொட்டாலும் அரசியலாக்கும் காலம் இது.

மிகுந்த எச்சரிக்கை தேவை. எல்லா மலேசியர்களும் ஒன்றுகூடி மகிழும் காட்சியைக் காண்பது அரிதாகவே தோன்றுகிறது. அது மாற வேண்டும்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்தாட்டப் போட்டி கோலாலம்பூரில் சமீபத்தில் அரங்கேற்றப்பட்டது. பன்னாட்டு பூப்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்ட அற்புதமான நிகழ்ச்சி.

மலேசியாவைப் பிரதிநிதித்தவர்களில் பெர்லி டான் – தீனா; மான்-தீ இரட்டையர்கள் காட்டிய உற்சாகம், வீரம், விடாமுயற்சி, உறுதி அற்புதமானது எனின் மிகையாகாது. விளையாட்டு மண்டபத்தில் கூடியிருந்த பல்லாயிர இரசிகர்கள் வெற்றியைக் குறியாகக் கொண்டு மலேசிய விளையாட்டாளர்களை உற்சாகப்படுத்தினர். ஊக்குவித்தனர்.

காலிறுதி, அரையிறுதி போட்டியின் போது இளம் அற்புத பெண்மணிகள் பெர்லி – தீனா, மான்-தீ இரட்டையர்கள் மலேசியாவுக்காக விளையாடினர். மலேசியர்களின் பெருமையை உயர்த்திட விளையாடியது, போராடியது. அற்புதமாக இருந்தது. மண்டபத்தில் கூடியிருந்து முழக்கமிட்ட மலேசியர்கள் விளையாட்டு வீரர்களை, மலேசியாவுக்காகப் போராடிய வீரர்களை மலேசியர்களாக மட்டும்தான் பார்த்தார்கள். அற்புதம்! அற்புதம்!

மலேசிய வீரர்களின் முயற்சியை, துணிவை மலேசியர்கள் மட்டுமல்ல உலக மக்களும் கண்டு மகிழ்ந்தனர். ஆச்சரியப்பட்டனர். சந்தேகத்திற்கு இடம் உண்டா?

இறுதி போட்டிக்கு முன்னேறிய பெர்லி-தீனா, மான்-தீ இரட்டையர்களிடம் இருந்து வீர வெற்றி பறிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் எல்லா மலேசியர்களின் அன்பை, பாராட்டுதலை வென்றார்கள். அவர்கள் மலேசியர்களின் மனத்தில் ஆழமாகப் பதித்துவிட்டார்கள்.

இப்படிப்பட்ட உணர்வும், ஆதரவும், உற்சாகமும் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் காணப்படுவது இயல்பானதுதான். இன, சமயப் பேதங்கள் இருந்தபோதிலும் நாடு எனும்போது ஒன்றுபடுவதைக் காணலாம். நாட்டை முன்வைத்து ஒன்றுபட வேண்டும்.

மலேசிய வீரர்களின் துணிவு, போராடும் மனத்துணிவை, மனப்பாங்கைக் காணும்போது 1967ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த தாமஸ் கிண்ணப் போட்டி நினைவுக்கு வந்தது. அந்த மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்று சென்றவர் முன்னாள் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற டான் ஶ்ரீ கிர் ஜொஹாரி.

அந்தப் போட்டியை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருதேன். இந்தோனேஷிய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். மலேசிய முன்னிலையில் இருந்தது. என் நண்பர், “முருகா! முருகா! மலேசியா வெற்றி பெற வேண்டும்! குணாளன் வெற்றி பெற வேண்டும். குணாளனுக்கு வெற்றி தா!” எனப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு மலேசியா வெற்றி பெற்றால் போதும் என்ற எண்ணம். கடவுளிடம் பேரம் பேசினார்.

மலேசியா வெற்றி கண்டது. தோமஸ் கோப்பையைத் தலைநகருக்குக் கொண்டு வந்தனர் மலேசிய தோமஸ் கோப் வீரர்கள். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கிர் ஜொஹாரி சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “சங்கடமான சூழ்நிலையில் இருந்தபோது மலேசியாவின் வெற்றிக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன்” என்றார்.

அன்று குணாளனும் மற்றும் மலேசிய வீரர்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு மலேசியாவுக்குப் பெருமை தேடும் முயற்சி இன்றும் வாழ்கிறது என்பதை பெர்லி – தீனா, மான்-தீ இரட்டையர் உறுதிப்படுத்தினர்.

பெர்லி டான் – எம்.தீனா, மான்–தீ மற்றும் ஏனைய பூப்பந்து வீரர்கள் மலேசியாவுக்குப் பெருமை திரட்டும் பணியில் இறங்கியது மெச்சத்தக்கச் செயலாகும். விளையாட்டு அரங்கில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மலேசிய வீரர்களைத்தான் கண்டார்கள்.

அங்கே இனம், சமயம், வேறுபட்ட கலாச்சாரம், மொழி எதுவும் கிடையாது. “மலேசியா பொலே” தான் ஒலித்தது. இந்த இளம் சமூகத்தின் உயர்வான எண்ணம் மலேசியாவில் எல்லோரும் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் வீரச் செயல்களால் தெளிவுபடுத்தியிருப்பது இந்த நாட்டில் நல்ல மலேசிய உணர்வுக்கு இடமுண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த நம்பிக்கை தானே தேவை! அதை குறிக்கோளாகக் கொண்டு மலேசியா நகர வேண்டும். மலேசிய அரசு அதற்குத் துணை நிற்க வேண்டும்.

கவலையுடன் இருக்கும் மலேசியர்களுக்குக் கவலை ஒரு நிரந்தர பகைவனாக இருக்குமோ என்று அஞ்சிய மலேசியர்களுக்குப் பூரிப்பு நல்கினர் இளம் சமூகத்தினர். அந்த உணர்வு நீடிக்க வேண்டுமே; பரவே வேண்டுமே! நடக்குமா?