நஜிபை காப்பாற்றும் எண்ணத்தில் சுயமரியாதையை இழக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா-  ‘நஜிபுக்கு நீதி வேண்டும்’, ‘நஜிப் விடுதலை செய்யப்பட வேண்டும்’, என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அம்னோவின் ஒரு சாரார் அக்கட்சியை மேலும் மோசமான நிலைக்குதான் இட்டுச் செல்கின்றனர்.

இந்தியர்களுக்கு அதிகமான வகையில் நிதி ஒதிக்கீடும், இந்தியர்களின் சமூக அரசியல் நிலைதன்மைக்கான நீண்ட கால வரைவு  திட்டத்தை உருவாக்கிய பெருமையும் அவரைச்சாரும். இதன் பின்னணியில் அவர் கையாண்ட ஊழல் வழிமுறைகள்  அரசாங்க கையூட்டு கலாச்சாரத்தை அதிக படுத்தியதோடு, பணவிரயத்தையும் ஊழலையும் அதிகப்படுதியது. அவர் திருடிய நாட்டின் பணத்தில் பயன் அடைந்தவர்கள் இன்றும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையின் போது அரங்கேறிய இந்தக் கூத்து பலரது கவனத்தையும் ஈர்த்து அக்கட்சி மீதான வெறுப்பை மேலும் அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.

அடிமட்ட உறுப்பினர்கள் மட்டுமின்றி மேல் நிலையில் உள்ள குறிப்பிட்ட சில தலைவர்களும் கூட இதற்கு பின்னால் இருந்து தூண்டுகோலாக செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

இதே நோக்கத்தில்தான் நஜிபின் 3 பிள்ளைகள் தற்போது அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. அவருடைய மூத்த மகன் நிஸார் அம்னோ பெக்கான் தொகுதியின் உதவித் தலைவராக இருக்கும் வேளையில் இளைய மகன் நஸிஃபுடின் கெடா, லங்காவி பிரிவின் தலைவராக உள்ளார். நஜிபின் மகள் நூர்யானா அக்கட்சியின் புத்ரி பிரிவின் நிர்வாகக் குழுவுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

ஆனால் அவர்கள் எல்லாருடைய கோரிக்கையும் சிந்தனைக்கு எட்டாத, முற்றிலும் அறிவிலித்தனமான ஒன்றாகும்.

நஜிப் விடுதலை செய்யப்பட்டால்தான் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமோம் என தலைமைத்துவத்தை அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் அக்கட்சி பிளவு பட்டுள்ளதையும் மக்கள் அறியாமல் இல்லை.

அரசியல் பலத்தை பயன்படுத்தி சட்டத்தை வளைத்து நஜிபை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணுவது கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை. அக்கட்சிக்கு தற்போது அரசியல் பலம் இல்லை என்பதை அவர்கள் உணர மறுப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தனது அதீத பலத்தைக் கொண்டு ஆட்சி பீடத்தில் இருந்து வந்த அக்கட்சி தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சுருங்கிக் கிடக்கிறது. மொத்தம் 222  தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு 26 தொகுதிகள் மட்டுமே உள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தயவில்தான் அக்கட்சி தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. இச்சூழலில், கிடைத்திருக்கும் வாய்பை பயன்படுத்தி தனது பலத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை அக்கட்சி ஆராய வேண்டும்.

அதனை விடுத்து நஜிபை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் எந்த ஒரு  பிரயோஜனமும் இல்லை. அவரை வெளியே கொண்டு வந்துதான் கட்சியை மீட்சியுறச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் வீண் விதண்டாவாதம்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப எல்லா நிலைகளிலும் உள்ள நீதிமன்றங்கள் அவர் குற்றவாளிதான் என தீர்மானித்த பிறகுதான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியிருக்க அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. சட்டம், நீதி போன்ற அம்சங்கள் பற்றியெல்லாம் இவர்களுக்கு ஒன்றும் தெரியாதா என்ன?

நஜிபின் அத்தியாயம் கடந்துவிட்ட ஒரு சரித்திரம் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவரைப் பற்றிய விவாதங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு தொய்வடைந்து கிடக்கும் கட்சியை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மீது அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 1960-களிலும் 70களிலும் நாட்டின் சக்திவாய்ந்த ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் ஹருன் இட்ரில் ஊழல் குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டார். அவருடைய தீவிர அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட அதோடு ஒரு முடிவுக்கு வந்தது.

அதே போல கடந்த 1980-களில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மொக்தார் ஹஷிம் கொலை குற்றத்திற்காக சிறை சென்றார். அவருடைய அரசியல் வாழ்வும் அதன் பின் அஸ்தமனமானது.

அப்போது இருந்த அம்னோ தலைவர்களும் அடிமட்ட உறுப்பினர்களும் சட்டத்திற்கு மதிப்பளித்து இவர்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியதால் அம்னோ தொடர்ந்து வலுவோடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இன வாதத்தையும் மதவாதத்தையும் மட்டுமே முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி அலைபோல் திரண்டுவரும் கட்சிகளுக்கு எதிராக நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஒட்டு மொத்த அம்னோ உறுப்பினர்களும் ஒருசேர பாடுபட வேண்டியது அவசியமாகும்.

அதனை விடுத்து நஜிபின் வரலாற்றின் மீது அமர்ந்து கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தால் அக்கட்சிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயமரியாதையும் கரைந்துவிடும்.