ஆயா கொட்டாய்யும் ஆயாக்களும்

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நம் இனத்தவர் அதிக அளவில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த காலக் கட்டத்தில் ‘ஆயா கொட்டாய்’ எனும் ஒரு அம்சம் அவர்களுடைய வாழ்வில் ஒன்றித்த அத்தியாவசிமான ஒன்றாகும்.

நடப்பு சூழலில் ‘நர்சரி’ எனும் பெயரில் நவீனமான முறையில் செயல்படும் அந்த ஆயா கொட்டாய்கள் அக்காலத்தில் கிட்டதட்ட எல்லா தோட்டங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் பணியாற்றிய ஆயாக்களின் பங்கு அளப்பரியதாகும்.

தற்போதெல்லாம்  கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் நகர் புறங்களில் மட்டுமின்றி அதற்கு வெளியே வசிப்பவர்களுக்கும் உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய பிள்ளைகளை பகளில் பராமரிப்பதற்கு குறிப்பிட்ட சிலர் தங்களுடைய அண்டை வீட்டுக்காரர்களின் உதவியையோ வீட்டில் உள்ள வயதான பெற்றோரையோ நம்பித்தான் இருக்கின்றனர்.

இருந்த போயிலும் ‘நர்சரி’ எனும் பெயரில் செயல்படும் நவீனமான அதிகாரத்துவ பராமரிப்பு இல்லங்களின் சேவைகளையே அதிகமான இளம் பெற்றோர் நாடுகின்றனர். இந்த ‘நர்சரி’கள் பல இடங்களில் பெரும்பாலும் பாலர் பள்ளிகளின் ஒரு பகுதியாக இருப்பதை நம்மால் காண முடிகிறது.

அத்தகைய மையங்கள் அமைந்திருக்கும் இடங்களைப் பொருத்து அவற்றின் சேவைகளுக்கான கட்டணங்களும் மாறுபடுகிறது. பல நூறு ரிங்கிட்டிலிருந்து ஆயிரம் ரிங்கிட்டைத் தாண்டும் அளவுக்குக் கூட அக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இருப்பினும் அத்தகைய ‘நர்சரி’களின் அடிப்படை தொடக்கம் கடந்த காலங்களில் தோட்டப் புறங்களில் நம்மவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘ஆயா கொட்டாய்’தான் எனலாம்.

தோட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் செயல்படும் அதன் சேவைகளுக்கு பெற்றோர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கான இடத்தையும் அந்த நிர்வாகமே ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிகாலையில் பால்மரம் வெட்டச் செல்லும் கணவனும் மனைவியும் தங்களுடைய குழந்தைகளை இந்த ‘ஆயா கொட்டாய்’களில் விட்டுச் செல்வது வழக்கம். பெரும்பாலான குழந்தைகள் அச்சமயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் இந்த ‘இட மாற்றம்’ நடப்பதை அவர்கள் உணர்வதில்லை.

எனினும் பிறகு விழித்தவுடன் அவர்களுக்கு மிகவும் பரீட்சையமான ‘ஆயா’வின் முகத்தைப் பார்த்து பரவசமடைவதால் பெற்றோருக்காக அவர்கள் அழுவதில்லை. தங்களை போலவே எண்ணற்ற குழந்தைகள் அங்கு இருப்பதால் ஏறத்தாழ பகல் ஒரு மணி வாக்கில் பெற்றோர் வரும் வரையில் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

இருப்பினும் அதற்க்கும் ஒரு மறுபக்கம் உள்ளது. ஆயாமார்கள் அதிக எண்னிக்கை கொண்ட குழந்தைகளை கவனிக்கும் சூழல், சுகாதாரம், உணவு, குழந்தைகள் அடைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பில் இருத்தல் போன்றவை அவர்களின் தரமான வளர்ச்சிக்கு தடைகள்தான்.

இருப்புனும் அந்த காலக்கட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பதில் இந்த ‘ஆயா’க்கள் ஆற்றிய பங்கு உண்மையிலேயே அளப்பரியது.

அவர்களுடைய சேவைகளுக்காக தோட்ட நிர்வாகம் மிகச் சிறிய ஒரு தொகையையே ஊதியமாக வழங்கும். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அந்த ‘ஆயா’க்கள்’ பொருப்புடனும் அக்கரையுடனும் பாசத்துடனும் தங்களால் இயன்றதை கொண்டு அக்குழந்தைகளை பராமரித்தார்கள்.

அப்போதெல்லாம் பாலர் பள்ளிகள் கிடையாது. எனவே பிள்ளைகள் ஆரம்ப பள்ளிகளுக்குச் செல்லும் வரையில் இங்குதான் வளர்வார்கள்.

குழந்தை பருவத்தில் அப்படிப்பட்ட ‘ஆயா கொட்டாய்’களில் வளர்ந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் தற்போது ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் வழக்கறிஞர்களாகவும் மற்றும் பல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்ததை அவர்கள் இன்னமும் நினைவுக் கூறத் தவறுவதில்லை.

‘ஆயா கொட்டாய்’ எனும் ஒரு அம்சம் தற்போது கிட்டதட்ட மறைந்துவிட்ட நிலையில் உள்ள போதிலும் அத்தகைய ஏற்பாட்டிலும் அவற்றை அக்கரையோடு பராமரித்த ‘ஆயா’க்களையும் என்றென்றும் மறக்க முடியாது.