சட்டமன்ற தேர்தலில் மஇகா என்னவாகும்?

இராகவன் கருப்பையா – எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என ம.இ.கா. அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அரசல் புரசலாக செய்தி வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எனினும் இதன் தொடர்பாக அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

அப்படியொரு தீர்மானத்தை ம.இ.கா. எடுத்திருந்தால் அம்முடிவு தற்போதைய சூழலுக்கேற்ற விவேகமான கருத்தாக இருக்குமா?

கெடா, பினேங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய 6 மாநிலங்கிளில் எந்நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படக் கூடும்.

கிளந்தான், திரங்கானுவைத் தவிர இதர 4 மாநிலங்களில் போட்டியிடுவதற்கு ம.இ.கா.வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய முன்னணித் தலைவரான துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார். எனினும் எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்று அவர் சொல்லவில்லை.

இருப்பினும் இத்தேர்தலை ம.இ.கா. முற்றாக புறக்கணிக்கக் கூடும் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளது வியக்கத்தக்க ஒன்றல்ல.

கடந்த நவம்பர் மாதத்தில் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும் கடைசி நேரத்தில் இதே போல் ம.இ.கா நீலிக் கண்ணீர் வடித்தது நமக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த சமயத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையின் காரணமாக ம.இ.கா. பொதுத் தேர்தலை புறக்கணிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போதைய சூழல் வேறு. அம்னோ தலைவர்கள் அண்மைய காலமாக ம.இ.கா.வை சிறுமைப்படுத்தி பேசி வருவதாகவும் அதனால் சினம் கொண்டுள்ள அக்கட்சி மாநில தேர்தல்களிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவெடுத்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இப்படியொரு முடிவை ம.இ.கா. எடுக்குமேயானால் அம்னோவோ பக்காத்தானோ வருத்தப்படப் போவதில்லை. ஏனெனில் பாரிசானும் பக்காத்தானும் தற்போது ஒரே தரப்பில் இருப்பதால் தங்களுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதே அவர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. எனவே இம்முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.

அது ஒரு புறமிருக்க, எந்தத் தொகுதி வழங்கப்பட்டாலும் அதில் வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகளையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்நாட்டில் இந்தியர்களை பெரும்பான்மையாகக் கொண்டு எந்தத் தொகுதியும் இல்லை.

நகர் புறங்களுக்கு வெளியே மலாய்க்காரர்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டு கிட்டதட்ட எல்லா தொகுதிகளும் உள்ளன. பாஸ் கட்சியினர் தற்போது திரண்டு வரும் வேகத்தைப் பார்த்தால் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் மலாய்க்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டால் கூட வெற்றி கிடைப்பது உறுதியில்லாத சூழல் நிலவுகிறது. இப்படிபட்ட நிலையில் ‘ம.இ.கா. வேட்பாளர்கள் எம்மாத்திரம்,’ எனும் கேள்வியில் வியப்பில்லை.

சில குறிப்பிட்ட  தொகுதிகளில் இந்தியர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய நிலையில் உள்ளனர் என நாம்தான் சுயமாகவே தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். ஆனால் அதுபற்றி வேறு யாருமே பொருட்படுத்துவதில்லை.

இவற்றுக்கெல்லாம்  அப்பாற்பட்டு, கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தில் ம.இ.கா.விற்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அதன் தலைவர் விக்னேஸ்வரன், “இனிமேல் கட்சியின் நலன் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துவோம்” என ஏட்டுக்கு போட்டியாக அறிவிப்பு செய்ததை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

அரசியல் முதிர்ச்சியற்ற அந்த அறிக்கைக்கு அப்போதே வெகுசன மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இப்படிபட்ட சூழலில் ம.இ.கா. வேட்பாளர் ஒருவருக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எப்படிதான் வாக்குகள் கிடைக்கும்? நம் சமூகத்தின் ஆதரவையே இழந்து மிக மோசமாக நலிவடைந்து கிடக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இருந்தால்,  அதனை  அகற்றிவிட்டு கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு வலுப்பெறச் செய்வதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய வேண்டும். அதோடு நியமனம் செய்யப்படுவதின் வழி மாநில மற்றும் தேசிய அளவில் அரசாங்க பொறுப்புகளை இந்தியர்களின் கோட்டா என்ற வகையில் கோரலாம்.

எவ்வகையிலும் இந்த மூத்த இந்தியர் கட்சி அதன் சுவாசத்தை தொடர வேண்டும்.