இராகவன் கருப்பையா – நாட்டில் ஆகக் கடைசியாகச் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று மரணத் தண்டனை நிறுத்தப்பட்டதுதான். இதனால் அனைத்துலகப் பார்வையில் நம் நாடு ஒரு படி உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
ஜூலை 4ஆம் தேதியிலிருந்து அமலாக்கம் காணும் இச்சட்டத்தினால் இவ்வாரம் வரையில் மரண வாசலில் நின்றிருந்த நூற்றுக் கணக்கான மரணத் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு பிறந்துள்ளது.
ஆனால் முன்னால் பிரதமர் நஜிபுக்கு இது சாதகமா அல்லது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று மங்கோலிய நாட்டின் 28 வயது மாடல் அழகியான அல்தான்துயா ஷரிபு சிலாங்கூர் ஷா அலாம் அருகில் உள்ள ஒரு புதரில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நஜிபின் அப்போதைய மெய்க்காவலர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது எல்லாரும் அறிந்ததே.
அஸிலா ஹட்ரியும் சிருல் அஸ்ஹாரும் குற்றவாளிகள்தான் எனத் தீர்ப்பு வழங்கிய ஷா அலாம் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மரணத் தண்டனை விதித்தது. எனினும் மேல் முறையீட்டு நீதிமன்றம் அவர்களை விடுதலைச் செய்தது. பிறகு கூட்டரசு நீதிமன்றம் அவர்களுடைய மரணத் தண்டனையை உறுதிபடுத்துவதற்கு முன் சிருல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டார். அஸிலா காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் குடிநுழைவு தடுப்புக் காவலில் உள்ள சிருலை நாடு கடத்துமாறு மலேசியா கேட்டுக் கொண்ட போதிலும் அந்நாடு அதற்கு மறுத்துவிட்டது. ஏனெனில் மரணத் தண்டனை இல்லாத நாடான ஆஸ்திரேலியா தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவருக்கு அத்தண்டனை விதிக்கப்படுவதற்கு அனுமதிக்காது.
எனினும் மலேசிய அரசாங்கம் மரணத் தண்டனையிலிருந்து தன்னை விடுவித்தால் நாடு திரும்பி நடந்த உண்மை சொல்லத் தயாராய் இருப்பதாகச் சிருல் அதிரடியாக ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டில் ஆட்சி மாறியதைத் தொடர்ந்து காஜாங் சிறையில் உள்ள அஸிலாவும் துணிச்சலாக ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டார். அதாவது நஜிபின் உத்தரவின் பேரில்தான் அல்தான்துயாவை கொலை செய்ததாகவும் தனக்கு நீதி வேண்டும் எனவும் அவர் மன்றாடினார்.
ஆனால் 22 மாதங்களிலேயே பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்து அம்னோ மீண்டும் அரசாங்கத்தில் அமர்ந்ததால் அஸிலாவை யாரும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் மரணத் தண்டனை நீக்கப்பட்டுள்ள சூழலில் சிருலை ஆஸ்திரேலியா நாடு கடத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அப்படி ஒன்று நடந்தால் நஜிபுக்கு அது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
அஸிலாவும் சிருலும் ஒரு சேர நஜிப் மீது தைரியமாகப் பலியைத் தூக்கிப் போட்டால் அரசாங்கம் அவ்விவகாரத்தை எப்படிக் கையாளும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ அங்கம் வகிப்பதால் இவ்வழக்கு மீண்டும் கட்டவிழ்க்கப்படுமா அல்லது அவ்விருவரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறையில் வாடுவார்களா என்று தெரியவில்லை. தற்போது அஸிலாவும் நஜிபும் ஒரு சிறையில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிவிடலாம் எனும் ஒரு குருட்டுத் தைரியத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் காலங்காலமாகப் பிழைப்பு நடத்தி வருவதை நாம் அறியாமல் இல்லை.
ஊழல் குற்றங்களுக்காகத் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் நஜிப் மீது புதிதாகக் கொலை குற்றமும் பாயுமா அல்லது அரசியல் செல்வாக்கில் அவ்வாறு நடக்காதா என்று தெளிவாகத் தெரியாது.
அப்படியே அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டால் அம்னோ அதனை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? நடப்பு அரசாங்கம் கவிழ்வதற்கு அது வித்திடுமா? இப்படியாகப் பல்வேறான கேள்விகள் மிக விரைவில் எழக்கூடும்.