இராகவன் கருப்பையா –துரிதமாக மாற்றம் கண்டுவரும் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சிகளான ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக சுருங்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று தீபகற்ப மலேசியாவின் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என அவ்விரு கட்சிகளும் ஒருசேர அறிவித்துள்ளது யாருக்கும் ஏமாற்றத்தையோ அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையொ ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் நாட்டை கைப்பற்றுவதற்கு தீவிர மதவாத, சமயவாத கும்பல்களுக்கும் மிதவாத போக்குடைய அரசியல் கட்சிகளுக்கும் இடையே நிகழும் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் அவ்விரு கட்சிகளும் தவிடுபொடியாகும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
முன்னாள் பிரதமர் மகாதீரும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடியும் பிரதமர் அன்வாருக்கு எதிராக அவதூறு பரப்பி நாட்டை கைப்பற்றுவதற்கு கையிலெடுத்துள்ள ஒரே ஆயுதம் இனவாதம்தான்.
மலாய்க்காரர் அல்லாதாரை குறைச் சொல்லி குற்றஞ்சாட்டி ஒதுக்குவது மட்டுமின்றி இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி நடுவில் குளிர் காய முற்படும் அவர்களுக்கு எதிராக போராடுவதற்கு ம.இ.கா.விடமும் ம.சீ.ச.விடமும் உள்ள பலம் அன்வாருக்கு உதவ இயலாது.
தங்களுடைய சொந்த சமூகங்களின் ஆதரவையே கிட்டதட்ட முற்றாக இழந்துவிட்ட அவ்விரு கட்சிகளுக்கும் கூட இந்த யதார்த்தம் நன்றாகவே புரியும். அதனால்தான் இம்முறை தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள சுயமாகவே முடிவெடுத்துள்ளன என்றால் அது மிகையில்லை. வெற்றி வாய்ப்பு இருந்தால் யார்தான் பின்வாங்குவார்?
காலங்காலமாக தேசிய முன்னணி, நாட்டை ஆட்சி புரிந்த காலக்கட்டத்தில் அவ்விரு கட்சிகளும் அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றியது நமக்குத் தெரியும். ஆனால் அக்கூட்டணியின் முதுகெலும்பான அம்னோவே தற்போது வலுவிழந்து கரைந்து கொண்டிருக்கும் சூழலில் அதன் நிழலில் வளர்ந்த ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் இப்போது சுவடுகளை இழந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ம.சீ.ச. 2 தொகுதிகளிலும் ம.இ.கா. ஒரே ஒரு தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைப்பதற்கு அம்னோவுடன் கூட்டு சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அன்வாரால் அம்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்க இயலவில்லை.
ஆட்சியில் இருந்தும் அரசாங்கத்தில் இடம் கிடைக்காதது அவ்விரு கட்சிகளுக்கும் ஒரு புது அனுபவம். மலேசிய அரசியலில் தங்களது அடையாளத்தை அக்கட்சிகள் துரிதமாக இழந்து கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
தேசிய முன்னணியில் ஒரு காலத்தில் பலம் பொருந்திய உறுப்புக் கட்சியாகத் திகழ்ந்த கெராக்கான் கட்சியும் இப்போது சுவடு தெரியாமல் கிட்டதட்ட மறைந்து கொண்டிருப்பதையும் நாம் இங்கு நினைவுக் கூறுவதில் தவறில்லை.
அக்கூட்டணியில் இருந்து விலகி தற்போது தேசியக் கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ள போதிலும் மிக விரைவில் அது அஸ்தமனமாகக் கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து எதிர்பாராத அளவுக்கு கூடுதலான மலாய் ஆதிக்கத்தை நோக்கிதான் இந்நாட்டு அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நன்றாகவே உணரமுடிகிறது.
குறிப்பாக மகாதீர், ஹாடி மற்றும் பிரிதொரு முன்னாள் பிரதமரான முஹிடின் ஆகிய மூவரும் தங்களுடைய இனவாத அரசியலுக்கு நகர் புறங்களுக்கு அப்பால் வாழும் மலாய்க்காரர்களையும் நகரங்களில் உள்ள கணிசமானவர்களையும் மிகத் தீவிரமாக கவர்ந்திழுத்து வருகின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலில் வைப்புத் தொகையைக் கூட இழந்து படுமோசமானத் தோல்வியைத் தழுவி ஒரு செல்லா காசாகிவிட்ட மகாதீர் பாஸ் கட்சியிலோ பெர்சத்துவிலோ உறுப்பியம் பெறாத போதிலும் ‘மலாய் பிரகடனம்’ எனும் பெயரில் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை சீரழித்து வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
அத்தகைய அரசியல் புயலில் ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் அடித்துச் செல்லப்பட்டுருக்கின்றன என்பதுதான் உண்மை. அவ்விரு கட்சிகளும் தங்களுடைய சமூகங்களின் ஆதரவை பழையபடி மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று.