இராகவன் கருப்பையா- உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மீண்டும் நம் நாட்டில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். கடந்த 1966ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டை நடத்திய நாம் இப்போது 4ஆவது முறையாக இதனை இங்கு அரங்கேற்றுகிறோம்.
இந்த பதினோராவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம் பேராளர்கள் தலைநகரில் குழுமியுள்ள இவ்வேளையில் நாமெல்லாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது வேதனையாக உள்ளது.
ஏற்பாட்டுக் குழுத் தலைவராக மனிதவள அமைச்சர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் பரிந்துரையின் பேரில் ம.இ.கா.வின் துணைத் தலைவர் சரவணனை இணை தலைவராக பிரதமர் அன்வார் பிறகு நியமனம் செய்தார்.
இரண்டொரு தினங்களுக்கு முன் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், மாநாட்டு தொடக்க விழாவின் போது யார் தலைமையுரை நிகழ்த்துவது எனும் விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இம்மாநாட்டை அன்வார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றவிருக்கிறார். ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எனும் வகையில் சிவக்குமார் தலைமையுரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சரவணனுக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என ஒரு சாரார் குரல் எழுப்ப, கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் விவரித்தார்.
“நான் உலகறிந்த ஒரு தமிழ் பேச்சாளர். எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் என் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பக்கூடும்”, என சரவணன் ஆக்ரோஷப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எனும் ஒரு உன்னதமான நிகழ்வுக்கு ஏற்பாட்டுக் குழுவினரும் தரமான கல்விமான்களாகத்தான் இருக்க வேண்டும்.சிவகுமார் தனது ஏற்பாட்டுக் குழுவில் எப்படிபட்டவர்களை நியமித்துள்ளார் என பலதரப்பட்ட கேள்விகள் தமிழ் ஆர்வளர்களிடையே எழுந்துள்ளன.
தமிழ் சார்ந்த அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், படித்தவர்கள், சான்றோர்கள் ஒன்று கூடி சுய அதிகாரத்தோடு மாநாடு நடக்கவேண்டும். அதில் கட்சி அரசியல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.