தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவை

இராகவன் கருப்பையா – தலைநகரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 11ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

இவர்களில் 650-கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பேராளர்களும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் அடங்குவர் என்று அறியப்படுகிறது. நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இம்மாநாட்டுத் தொடர் 4ஆவது முறையாக இங்கு நடைபெறுவதுதான்.

தமிழ் மொழி மீது பதினோராவது முறையாக மிகவும் துல்லியமாக ஆய்வுகள் செய்யப்படும் இவ்வேளையில் சர்வதேச நிலையில் அதன் வளர்ச்சி எவ்வகையில் உள்ளது என்பது மீதும் பேராளர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

வந்தோம், கூடினோம், பேசினோம், மேடைப் பேச்சுத் திறனைக் காட்டினோம், நாட்டை சுற்றிப் பார்த்தோம் என்றில்லாமல் உலகின் பல நாடுகளில் நம் தமிழ் மொழி ஏன் நலிவடைந்து வருகிறது என்பதனை ஆய்வு செய்யத் தவறக்கூடாது.

தமிழ் நாட்டுக்கு வெளியே, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்தான் தமிழ் மொழி தூய்மையாக பேசப்படுகிறது, வளர்ச்சி கண்டு வருகிறது எனத் தாராளமாகக் கூறலாம்.

எனினும் உலகின் மிகவும் பழமையான மொழி எனும் பெருமைக்குரிய தமிழ் மொழியின் வளர்ச்சி இதர நாடுகளுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்.

இந்தியப் பேராளர்கள் நாடு திரும்பியதும் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால் தமிழ் மொழி பிறந்த தமிழகத்தில் அம்மொழி ஏன் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதுதான்.

தமிழ்நாட்டில் அதிக அளவிலான ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் கல்விமான்கள் வரையில் கூட ஆங்கிலம் கலந்த தமிழில்தான் உரையாடுகிறார்கள். இந்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சவாரிக்கு எவ்வளவு வரும் என்று கேட்டால் “டுண்டி ரூப்பீஸ்”(20 ரூபாய்) என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். நாம் தூயத் தமிழில் பேசினாலும் அவர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் பதிலுரைக்கிறார்கள். கிராமத்தில் கூட, அண்ணன் அமர “சேர்”(நாற்காலி) கொண்டு வா என்று சொல்கிறார்கள். “நைட்”ல(இரவு) சாப்பாட்டுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள்.

இதெல்லாம் பார்க்கும் போது வியப்பு ஒரு புறமிருக்க, தமிழகத்திலேயே தமிழுக்கு நேர்ந்திருக்கும் கொடுமையை ஜீரணிக்க முடியாமல் மனம் வேதனையடைகிறது. தங்கும் விடுதிகளில் கூட, “காலை உணவு எத்தனை மணி வரைக்கும்” என்று கேட்டால், “பிரெக்ஃபஸ்ட் வில் ஃபினிஷ் எட் னைன் ஃபோர்ட்டி ஃபைஃப் சார்” (காலை உணவு 9.45 மணியோடு முடிவுறும் சார்) என்கிறார்கள்.

தமிழ் நாட்டில் எண்ணற்ற தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். அவற்றில் பெரும்பாலான நிலையங்கள் செய்திகளைத் தவிர இதர எல்லா நிகழ்ச்சிகளிலும் ஏறத்தாழ 20 முதல் 30 விழுக்காடு வரையில் ஆங்கிலம் கலந்த தமிழில்தான் நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன.

அதிலும் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், விருதளிப்பு நிகழ்ச்சிகள், சிறப்புச் சந்திப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் தமிழ் படும் பாட்டை சகிக்க முடியாது. பேசாமல் இவர்கள் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடத்திவிடலாமே என்று கூடத் தோன்றும் சில சமயங்களில். தலைப்புகள் கூட ‘மேகா சீரியல்’, ‘மேகா’ இசை நிகழ்ச்சி என்றுதான் இருக்கின்றன.

“அந்நிலையங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது” போன்ற சாக்குப் பொக்குக்கெல்லாம் இடமளிக்கக் கூடாது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழகத்திலேயே தமிழ் பேச ஆளில்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இந்தோனேசியா, மோரிஷஸ் மற்றும் ரீயூனியன் தீவுகள் போன்ற நாடுகளில் தமிழ் கலை, கலாச்சாரம், மதம், போன்ற அம்சங்கள் இன்னமும் இருக்கின்ற போதிலும் தமிழ் மொழி ஏறக்குறைய முற்றாக அழிந்துவிட்டது வருந்தத்தக்க ஒன்று.

தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு தற்போது வருகை தந்திருக்கும் மாநாட்டுப் பேராளர்கள் அனைவரும் நிச்சயம் தமிழ் அறிஞர்களாகவும் கல்விமான்களாகவும் உயர் கல்வி கற்றவர்களாகவும்தான் இருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் தாயகம் திரும்பியவுடன் உடனடியாக தமிழ் மொழியைத் தமிழகத்தில் காப்பாற்ற வேண்டிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது அவசியமாகும்.