தமிழ் மொழி வளர்ச்சிக்கு அன்வார் உரமிட்டுள்ளார்!

இராகவன் கருப்பையா – இடைநிலை பள்ளிகளில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வகுப்பு நடத்தப்படலாம் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பானது தமிழ் மொழியை நாம் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு உந்துதலாகும்.
நம் நாட்டில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அநேகமாக சிறந்ததொரு திறவுகோல் என்று கூட சொல்லலாம். தமிழ் செழுமையடைவதற்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இப்படி ஒரு அறிவிப்பை செய்து நம் முயற்சிகளுக்கு பிரதமர் உரமிட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம்.
எனினும் இந்த உரிமையை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் கேள்விக்குறி.  பிரதமர் அறிவித்துவிட்டார், சகல விஷயங்களும் இனி தானாக நகரும் என்று எண்ணிக் கொண்டு வெறுமனே நாம் இருந்துவிட்டால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
சம்பந்தப்பட்டத் தரப்பினர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் உடனே இறங்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்களும், தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களும், தமிழ் ஆர்வளர்களும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் மொழி கற்பதற்கு தடை இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அன்வார், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் எனும் விதிமுறையில் தளர்வு ஏற்படுத்தப்படும் என்றார். பத்து மாணவர்கள் இருந்தாலே வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக கல்வி அமைச்ஙர் ஃபட்லினாவை விரைவில் தாம் சந்திக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்வார் எப்போது ஃபட்லினாவிடம் இது குறித்து பேசுவார், இப்புதிய விதிமுறை எப்போது அமலுக்கு வரும் போன்ற விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரியாது. இன்னும் சுமார் இரண்டரை வாரங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பட்சத்தில் எல்லாருமே பரபரப்பாக இருப்பதால் இதன் அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும்.
இருந்த போதிலும் பள்ளிக்கூடங்களில் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இந்திய பெற்றோர்கள் எல்லாருமே இதில் முனைப்புக் காட்ட வேண்டும்.
‘மாணவர் பற்றாக்குறை’ எனும் ஒரு குறைபாடு இவ்வளவு நாள்களாக நமக்கு ஒரு தடங்களாக இருந்து வந்துள்ளது. இனிமேலும் நமக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது. இவ்விவகாரத்தில் பிரதமரே தலையிடுவதால் ‘ஆசிரியர் பற்றாக்குறை’ எனும் சாக்குப் போக்கு எல்லாம் இனி இருக்க வாய்ப்பில்லை.
பத்து மாணவர்களைக் கூட பதிவு செய்ய இயலவில்லை என்ற பேச்சுக்கே இனி இடமிருக்கக் கூடாது. அது நமக்கு அவமானம் மட்டுமின்றி பின்னடைவும் கூட. தமிழ் மொழி வகுப்புகளுக்கு இவ்வளவு நாள்களாக நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வீண்போய்விடும்.
தமிழ் சார்ந்த இயக்கங்கள் ஆங்காங்கே உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரித்து அவர்களுடைய பெற்றோர்களை சந்திக்க ஏற்பாடு செய்யலாம்.
‘தமிழ் பள்ளியே நமது தேர்வு’ எனும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களை ஊக்குவிக்கும் நாம், இனி ‘தமிழ் கற்போம்’ என்றொரு சுலோகத்தையும் அதோடு சேர்த்துக் கொள்ளலாம்.
நாட்டில் தமிழ் பள்ளிகள் குறைந்து வரும் இத்தருணதில், தேசிய பள்ளிகளில் இருந்து வரும் இடைநிலைப் பள்ளி மாணவர்களையும் தமிழ் கற்க ஊக்குவித்தாலும் ஒரு வகையில் அதுவும் நமக்கு வெற்றிதான்.
“When the student is ready, the teacher will appear”, எனும் ஒரு சொற்றொடர் ஆங்கிலத்தில் உள்ளது. அதாவது, “மாணவன் தயாராக இருந்தால் ஆசிரியர் தோன்றுவார்,” என்று பொருள்படும். எனினும் ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்,’ எனும் நிலையை கூட நாம் எதிர்நோக்கக் கூடும். இது கடந்த கால அனுபவங்கள் நமக்கு கற்றுத்தந்த பாடம்.
இருப்பினும் குறைந்த பட்சம் 10 மாணவர்களுடன் நாம் தயார் நிலையில் இருந்தால், அரசாங்க அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும் பிரதமரை நேரடியாக சந்தித்து அதற்கு நாம் தீர்வுகாண ஏற்பாடு செய்யலாம்.
பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை, தலைமையாசிரியர் அனுமதிக்கவில்லை, அமைச்சு அங்கீகாரம் அளிக்கவில்லை போன்ற வெட்டித்தனமான கதைகளுக்கெல்லாம் இனி இடமிருக்கக் கூடாது.