இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நம் நாட்டில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது பாராட்டத்தக்கது. ஏனெனில் அனைத்துலக நிலையில் ஆயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி இதுபோன்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
எனினும் அம்மாநாடு அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடு இல்லாமல் நடைபெற்றிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதோடு அதன் குறிக்கோள்களையும் முழுமையாக நாம் அடைந்திருக்க முடியும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
குறிப்பாக மாநாட்டுக்கு முன் அரங்கேறிய ஒரு சம்பவமும் மாநாட்டின் போது நடந்த ஒரு அவலமும் இந்த உன்னதமான நிகழ்வுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.
மாநாடு தொடங்க ஏறத்தாழ ஒரு வாரம் இருக்கையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது, தொடக்க விழாவில் யார் உரையாற்றுவது என்பது மீது எழுந்த சர்ச்சை நமக்கு தலை குனிவை ஏற்படுத்தியது.
இது போன்ற நிகழ்வுகளில் ‘புரோட்டோகோல்’ (protocol) எனப்படும் அதிகாரத்துவ நெறிமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரியும். இருந்த போதிலும் தங்களுடைய சுயநலத்திற்காக அத்தகைய வழிமுறைகளை தகர்த்தெரிய பல வேளைகளில் சில அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.
தமிழாராய்ச்சி மாநாடு என்பது தங்களுடைய பேச்சுத் திறனைக் காட்டுவதற்கான களமில்லை, மாறாக நடைமுறை எனும் ஒரு அம்சம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏற்பாட்டுக்குழுவில் முழுக்க முழுக்க கல்விமான்களும் தமிழ் அறிஞர்களும் இருந்திருந்தால் இந்நிலை நிச்சயம் ஏற்பட்டிருக்காது. அவர்களுடைய முழு கவனமும் மாநாட்டை சிறப்புற அரங்கேற்றுவதில்தான் இருந்திருக்கும்.
இருப்பினும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் அரசியல் புகுந்து விளையாடுவது புதிதான ஒன்றல்ல. தமிழகத்திலும் மலேசியாவிலும் காலங்காலமாக இப்படிதான் இருந்து வருகிறது என்பது வருந்தத்தக்க ஒன்று.
கடந்த 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற 5ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்க விழாவின் போது உரை நிகழ்த்திய எண்ணற்ற பேச்சாளர்களில் கிட்டதட்ட 80 விழுக்காட்டினர் பிரதான மேடையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசுவதிலேயே முழு கவனம் செலுத்தினார்கள்.
அதே போல 1987ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற 6ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அரசியல்தான் தலைவிரித்தாடியது. முன்னாள் அமைச்சர் சாமிவேலு தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் விஜேந்திரன், நல்லகருப்பன் மற்றும் பண்டிதன் போன்ற ம.இ.கா. தலைவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். தமிழாராய்ச்சி மாநாடு என்பதை விட ம.இ.கா. மாநாட்டை போல்தான் இருந்தது அந்த சமயத்தில்.
பிறகு 2015ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அதே நிலைதான். அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துவதால் மாநாட்டை சிறப்பாக அரங்கேற்றுவதற்கு தேவையான உயரிய ஆற்றலைக் கொண்ட கல்விமான்கள் ஒதுங்கியிருக்கும் நிலை கூட ஏற்படுகிறது.
கடந்த வார நிகழ்ச்சியின் போது உரை நிகழ்த்திய தமிழக முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான திருமாவளவன் தமிழாராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றி பேசி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்து மதத்தை தரம் தாழ்த்தி பேசியதால் அவர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதானது மாநாட்டுக்கு இழுக்குதான்.
அரசியல்வாதிகள் ஏற்பாட்டுக் குழுவில் மட்டுமின்றி பேச்சாளர்களாக இடம்பெறுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் நல்லதொரு பாடம் என்பதில் ஐயமில்லை.
பிரிதொரு அமர்வில் உரையாற்றிய மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் இராஜேந்திரன் மிகவும் துணிச்சலாக ஆணி அடித்தாற்போல் நச்சென்று தமது கருத்தை வெளிப்படுத்தினார்.
“தமிழகத்தில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அங்குள்ள குப்பைகளை இங்கே கொண்டு வந்து கொட்டாதீர்கள். எங்களுக்கென்று ஒரு வழிமுறை உள்ளது”, என மிகத் தெளிவாகப் பேசினார்.
“எல்லாருக்கும் பொதுவான தமிழ் மொழியை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது, தமிழில் ஆய்வுத்துறையை எப்படி மேம்படுத்துவது, தமிழில் வியாபாரத்தை எப்படி உயர்த்துவது முதலியவை மட்டுமின்றி இவற்றுக்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது போன்றவை பற்றிதான் பேச வேண்டுமே தவிர அரசியல் உரை நிகழ்த்தக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் காலங்களில் இவரைப் போன்ற கல்விமான்களிடம்தான் தமிழாராய்ச்சி மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும். இவர்கள்தான் தமிழை தொடர்ந்து செழிக்கச் செய்வார்கள். இவர்கள்தான் தமிழ் அழியாமல் இருப்பதை உறுதி செய்வார்கள்.
அரசாங்கத்திடம் இருந்து அனுகூலங்களைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பங்களிப்பு அவசியம் என்றால் அவர்களை புரவலர்களாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். எனவே தமிழாராய்ச்சி என்பது சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று எனும் அடிப்படையில் அரசியல்வாதிகளை சற்று தொலைவில் நிறுத்திவிட்டுதான் இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும்.
ReplyForward |