இராகவன் கருப்பையா- எதிர்வரும் 12ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்றும் இல்லாத அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
உள் பூசல்களினால் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ கணிசமான அளவு தனது பலத்தை இழந்துள்ளது. அதன் தற்போதைய நிலை ‘மண் குதிர்’தான் என்று கூட சொல்லலாம். இப்படி நலிவடைந்துள்ள அக்கட்சி ஒற்றுமை அரசாங்கத்திற்கு எவ்வகையில் வெற்றியைத் தேடித்தரும் என்று தெரியாது.
இனத்தையும் மதத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தி பாமர மக்களையும் நகர் புறங்களுக்கு வெளியே உள்ள மலாய்க்காரர்களையும் தன் வசம் ஈர்த்துள்ள பாஸ் கட்சியும் பெர்சத்துவும் இத்தேர்தல்களில் அம்னோவை முற்றாக துடைத்தொழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இச்சூழல் பிரதமர் அன்வாருக்கும் தெரியாமல் இருக்காது. இருந்த போதிலும் அம்னோவை நம்பி, மூடா மற்றும் பி.எஸ்.எம். போன்ற சிறிய கட்சிகளை பக்காத்தான் தலைமைத்துவம் உதாசினப்படுத்தியுள்ளது ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அவ்விரு கட்சிகளும் தங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு இத்தேர்தலில களமிறங்குவதால் பக்காத்தானுக்குச் சேர வேண்டிய கணிசமான வாக்குளை அவை திசை திருப்பக் கூடும். குறைந்த பட்சம் 100 வாக்குகளாக இருந்தால் கூட அவை பக்காத்தானுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை ஆளும் கூட்டணி உணரத் தவறிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலின் போது பி.எஸ்.எம். கட்சியுடன் ஒத்துழைப்பு இருக்கும் என்றும் அதன் தலைவர் மைக்கல் ஜெயகுமார் பேராக்கின் சுங்ஙை சிப்புட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அக்கட்சியை பக்காத்தான் கண்டு கொள்ளவே இல்லை.
அதே போல மூடா கட்சியை தேர்தலுக்கு முன் பக்காத்தான் கூட்டணியில் அதிகாரப்பூர்மா இணைத்துக் கொள்ள அவகாசம் போதவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த நம்பிக்கையில் இருந்த மூடா கட்சியின் ஒரே நாடாளுமன்றத் தொகுதியான மூவார், பக்காத்தானின் கணக்கில் சேர்க்கப்பட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும் அத்தொகுதியின் பிரதிநிதியும் கட்சியின் தலைவருமான சைட் சாடிக்கிறகு அரசாங்க பதவி எதனையும் அன்வார் வழங்கவில்லை.
அது மட்டுமின்றி பக்காத்தான் கூட்டணியில் அக்கட்சியை இணைப்பதற்கோ எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அக்கட்சியுடன் ஒத்துழைப்பதற்கோ அன்வார் முனைப்புக் காட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இளையோரையும் புதுமுகங்களையும் கொண்டு அக்கட்சி அமைக்கப்பட்டுள்ள போதிலும், ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பதை அன்வார் உணரவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.
மூடாவுக்கும் பி.எஸ்.எம். கட்சிக்கும் விழப்போகும வாக்குகள் பக்காத்தானுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைத்தான் சிதறடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனெனில் அவ்விரு கட்சிகளுமே பல்லினக் கட்சிகளாகும். அக்கட்சிகளை ஆதரிப்பவர்கள் மதவாத, இனவாத கட்சிகளை ஆதரிக்க வாய்ப்பில்லை.
இருந்த போதிலும் இத்தகைய பாதகமான விளைவுகளை எதிர்நோக்குவதற்கு ஒற்றுமை அரசாங்கம் தயாராய் இருப்பது வியப்பாகவே உள்ளது.
இதற்கிடையே, துணிச்சல் இருந்தால் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருமாறு எதிர் கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார் அன்வார்.
இச்சவால் தற்போதைய சூழலில் தேவையில்லாத ஒரு வீண் விதண்டாவாதம் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் அத்தகைய நிலப்பாட்டில் சைட் சாடிக்கின் ஆதரவை ஒற்றுமை அரசாங்கம் இழக்கக் கூடும்.
அரசாங்கத்தின் குறைபாடுகளை வெளிப்படையாக தாம் விமர்சித்து வருகிற போதிலும் ஒற்றுமை அரசுக்கான தமது ஆதரவில் மாற்றம் இருக்காது என்று அவர் உறுதியளித்துள்ள போதிலும் பெரிக்காத்தான் கூட்டணியின் ஈர்ப்பு சக்திக்குள் அவர் மயங்கி விழுக்கூடிய வாய்ப்பையும் நாம் நிராகரிக்க முடியாது.
அன்வாரை கவிழ்ப்பதற்கு பாரிசான் உள்ளேயே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதும் நாம் அறியாமல் இல்லை.
எனவே இரு சிறிய கட்சிகளின் ஆதரவை நிராகரித்ததோடு அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இத்தேர்தலில் களமிறங்கும் அன்வாரின் வியூகம் எவ்வகையில் பலனளிக்கும் என்று இன்னும் 2 வாரங்களில் தெரிந்துவிடும்.