இராகவன் கருப்பையா – கல்வி கற்ற சமூகம்தான் வாழ்க்கையில் மேன்மையடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று காலங்காலமாக நாம் பறைசாற்றி வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும் எனவும் நம் இனம் சார்ந்த சமூக, அரசியல் தலைவர்கள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர்.
இந்த யோசனை தீவிரமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் எதிர்வரும் காலங்களில் நம் சமூகம் இந்நாட்டில் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை. சன்னம் சன்மாக ‘பி40’ தரப்பில் இருந்து நம்மில் பெரும்பாலோர் வெளியேறுவதற்கும் இது வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய ஒரு சமுதாயமாக இந்நாட்டில் தலைநிமிர்ந்து நாம் நடமாடுவதையும் அது உறுதி செய்யும்.
ஆனால் அப்படிபட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு எந்த அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கிறோம் என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.
உதாரணத்திற்கு கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், ஒரு சாரார் வறுமை கலாச்சார தாக்கத்தால் கல்வியில் நம்பிக்கை அற்ற நிலையில் இருக்கும் அதேவேளையில் இன்னொரு தரப்பிணர் தலைமுறையைச் சேர்ந்த நம் பிள்ளைகள் அதிக அளவில் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.
ஆனால் அவர்களில் பலர் உயர் கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காமலும் பொருளாதார சிக்கலில் மூழ்கியும் முடங்கிவிடுகின்றனர். அவர்களுக்கு கை கொடுத்து, ஊக்கப்படுத்தி, அவர்களை செம்மைபடுத்துவது நம் சமுகத்தின் கடப்பாடு என்பதை பல வேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளின் முடிவுகள் வெளியானவுடன் நம் பிள்ளைகளின் ஆனந்தக் கண்ணீருக்கு ஈடாக மேல் கல்வியைத் தொடர இயலாமல் அவர்கள் வடிக்கும் சோகக் கண்ணீரையும் நாம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆண்டு தோறும் மெட்ரிக்குலேஷன் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை, பல்கலைக்கழகங்களிலும் இடமில்லை, ஆசைப்பட்ட துறையில் கல்வியைத் தொடர இயலவில்லை போன்ற குறைபாடுகள்தான். அத்தகைய சோகங்களுக்கு இவ்வாண்டும் விதிவிலக்கில்லை.
இப்பிரச்சினை எழும்போதெல்லாம், “நான்தான் உதவி செய்தேன்”, “என் முயற்சியால்தான் அதிக இடங்கள் கிடைத்தன”, போன்ற அரசியல்வாதிகளின் சுய தம்பட்டங்கள்தான் நம் காதுகளை கிழித்துக் கொண்டிருக்கும். இவ்வாண்டு அதையும் கூட காணவில்லை.
மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதிசயமாக எதிர்கட்சி மலாய் அரசியல்வாதிகள் நமது மாணவர்களுக்கு உதவ வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். நம் இன அரசியல்வாதிகள் இவ்வளவு காலமாக இதற்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முன்னெடுப்புகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ‘மித்ரா’ களமிறங்க வேண்டும். ஆசைப்பட்டத் துறைகளில் உயர் கல்வியைத் தொடர தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நம் பிள்ளைகளின் வாழ்வில் மித்ரா ஒளியேற்ற முடியும்.
அரசாங்க பல்கலைக்கழகங்களில் பயிலும் பி40 தரப்பைச் சேர்ந்த 10,000 இந்திய மாணவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என மித்ரா தலைவர் ரமணன் இவ்வாண்டு முற்பகுதியில் அறிவித்தார்.
தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசு கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காததாலும் ஆசைப்பட்டத் துறைகளில் கல்வியைத் தொடர இயலாததாலும்தான் கடனை உடனை வாங்கி சொந்தமாக படிக்கின்றனர். அவர்கள் வசதியானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தவறாக எடைபோட்டு உதாசினப்படுத்தக் கூடாது என உதாரணத்தோடு அவரிடம் சுட்டிக் காட்டியபோது, அது குறித்து பரிசீலிக்கப்படும் என ‘மலேசியா இன்று’விடம் ரமணன் உறுதியளித்தார்.
அதே போல உயர் கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகளுக்கும் உபகாரச் சம்பளம் போன்றதொரு திட்டத்தை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் அவர்களை சேர்க்க வழி வகுக்க வேண்டும்.
அரசியல்வாதிகளாலோ சில அரசு சாரா இயக்கத்தினராலோ மித்ரா பணம் இனிமேலும் வழிமறிக்கப்படாது எனும் சூழல் பிறந்துள்ளதால் கல்வி கற்ற சமூகத்தை உருவாக்குவதில் ரமணன் குழுவினர் பெரும் பங்காற்ற முடியும்.
பி.டி.பி.டி.என். கல்விக் கடன்களை பெறுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன என்று பல பெற்றோர்கள் புகாரளித்துள்ளார்கள். அரசியல்வாதிகள் வெளியே பேசித்திரிவதைப் போல அவ்வளவு சுலபத்தில் அது கிடைத்துவிடாது.
அதே போல சிலாங்கூர் மாநிலம் அறிவித்த கல்வி உதவி நிதியைப் பெறுவதிலும் நம் இன மாணவர்கள் பெருவாரியான தடங்கள்களை எதிர்நோக்கி மவுனத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். அரசியல் விளம்பரத்திற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று கூட சில சமயங்களில் எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் சில தனியார் நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் நம் பிள்ளைகளுக்கு முழ உபகாரச் சம்பளம் வழங்குவதை நாம் இங்கு சுட்டிக் காட்டத்தான் வேண்டும். விளம்பரமே இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அந்நிறுவனங்கள் உதவுகின்றன.
எனவே கல்வி தொடர்பான இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு மித்ரா தீவிர கவனம் செலுத்தினால் படிப்படியாக கல்வி கற்ற, அறிவார்ந்த ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.