இராகவன் கருப்பையா – கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சியில் ‘உண்டி 18’ எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இந்த சட்டத் திருத்தம் 18 வயதுடைய இளையோரும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்கிறது.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலை பார்க்கப் போனால் இச்சட்டத் திருத்தம் நியாயம்தானா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் நம் நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் 18 வயதிலிருந்து 21 வயது வரையிலான இளையோரின் வாக்குகளை வேட்டையாடுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றன. அவர்களுக்கு முறையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசியல் கட்சிகள் மறந்துவிட்டதைப் போல் தெரிகிறது.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படாமல் சுமார் 8 மாதங்கள் கழித்து தனியாக நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்தல்கள் சரியான நேரத்தில்தான் நடத்தப்படுகின்றன. அதாவது கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து உரிய நேரத்தில் நடத்தப்படுகின்றன.
ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தல்தான் அரசியல் சுயநலத்திற்காக அவசர அவசரமாக முன்கூட்டியே நடத்தப்பட்டது எனும் விவகாரம் நிறை பேருக்கு, குறிப்பாக இளையோருக்குத் தெரியாமல் உள்ளது.
எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட், அரசாங்கத்தை அம்னோ முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடுமாறு அப்போதைய பிரதமர் சப்ரியை நிர்பந்தப்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அவருடைய கணிப்புக்கு அப்பாற்பட்டு அம்னோ படுதோல்வியடைந்ததால் பக்காத்தானுடன் கூட்டு சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த விஷயங்கள் எல்லாம் நிறைய பேருக்கு மறந்து போய்விட்டது மட்டுமின்றி கணிசமான அளவிலான இளையோருக்கு 8 மாதங்களில் மற்றொரு தேர்தலை எதிர்நோக்குவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘உண்டி 18’ சட்டத் திருத்தத்திற்கு மூலக் காரணமாக இருந்த முன்னாள் விளையாட்டுத் துறையமைச்சர் சைட் சாடிக் தலைமையிலான ‘மூடா’ கட்சியும் கூட இவ்விகாரத்தில் மெத்தனமாக இருந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நாட்டில் உள்ள இளையோரின் பெரும்பகுதியினரை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தன் வசம் ஈர்க்க அக்கட்சி தவறிவிட்டது.
ஆனால் பாஸ் கட்சியினர் இவ்விவகாரத்தில் மிகவும் லாவகமாக நடந்து கொண்டு இளையோரை கவர்ந்திழுத்துள்ளது அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றியாகும்.
எனினும் அவர்கள் வசீகரப்படுத்திய இளையோருக்கு அக்கட்சியினர் முறையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. சமயத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ள இளையோரை அவர்கள் ஈர்த்துள்ளதை கடந்த 15ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
குறிப்பாக ‘இஸ்லாம் டி அஞ்ச்சாம்'(இஸ்லாத்திற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது),’ ‘மலாய்க்காரர் அல்லாதார் நாட்டைக் கைப்பற்ற முனைகின்றனர், மலாய்க்காரர்ளுக்கு இந்நாட்டில் இடமில்லாமல் போகக் கூடும், மலாய்க்காரர் அல்லாதார்தான் நாட்டை ஆட்சி புரிகின்றனர்,’ போன்ற விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களின் வழி அவர்கள் இளையோரின் எண்ணங்களில் நச்சுத்தன்மையை விதைத்து இன்று வரையிலும் இடம் பிடித்து வருகின்றனர்.
குறுக்கு வழி அரசியலுக்கு இதனை ஒரு வெற்றிப் பாதையாகப் பார்க்கும் பெர்சத்து கட்சியினரும் தற்போது அதே பாணியில் தங்களுடைய பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதை நம்மால் உணரமுடிகிறது.
எனவே பெரிக்காத்தான் கூட்டணி இளையோருக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் சமயத்தையும் இனத்தையும் மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்களில் பெரும்பகுதியினரை மடக்கி வைத்திருக்கும் வேளையில் பக்காத்தான் கூட்டணியும் கூட அந்த இளைஞர்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதைப் போல் தெரிகிறது.
இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் சுமார் 660,000 இளையோர் முதல் முறையாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாட்டின் அரசியல் நிலவரங்களை அவர்கள் நன்கு உணர்ந்து விவேகமாக வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற வல்லரசுகளிலும் குறைந்த பட்ச வாக்களிப்பு வயது 18தான் என்ற போதிலும் அங்கெல்லாம் மதம், இனம் கலக்காமல் இளையோருக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.