மலேசியர்களுக்கான நாட்டை உருவாக்குவது இனி  அன்வார் கையில்தான் உள்ளது

இராகவன் கருப்பையா – ஐந்து ஆண்டுகளில் நான்கு பிரதமர்களையும் வெவ்வேறு சமயங்களில் பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் சந்தித்த நம் நாடு இன்னமும் சீரான ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை.

கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த 6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, குறிப்பாகப் பாஸ் கட்சியின் அடைவு நிலை, கடந்த 8 மாதங்களாக நம்மிடையே நிலவும் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டில் 2ஆவது தடவையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீர், மேகா ஊழல்களில் மூழ்கிக் கிடந்த நாட்டின் தலைவிதியை மாற்றியமைப்பார் என்று எல்லாருமே எதிர்பார்த்தோம்.

ஆனால் அவருடைய எண்ணம் முழுவதும், பிரதமர் பொறுப்பை ஏற்கக் காத்திருந்த அன்வாரை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதில் மட்டுமே இருந்தது பிறகுதான் அம்பலமானது.

ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்துப் பேராசையினால் உந்தப்பட்டுக் கொல்லைப் புறமாக நுழைந்து குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிய முஹிடின் நாட்டை எவ்வாறெல்லாம் சீரழித்தார் என்பதும் யாவரும் அறிந்த ஒன்று.

ஒன்றரை ஆண்டுகளில் அவருடைய ஆட்சியும் கவிழ்ந்ததைத் தொடர்ந்து தலைமைத்துவத் திறமையில்லாத சப்ரி, அதிர்ஷ்டக் குலுக்கில் ‘ஜேக்போட்’ அடித்ததைப் போல அரியணையில் அமர்ந்தார். குறுகிய காலத்தில் நிறைய நாடுகளை வலம் வந்த அவரும் ஏறத்தாழ 13 மாதங்களிலேயே ஆட்சியைக் கலைக்க வேண்டிய நிருபந்தம் ஏற்பட்டது.

இப்படி நிலையில்லாத ஆட்சியில் தத்தளித்த நாட்டின் அவலத்திற்குக் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தல் ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று எண்ணியிருந்த மக்களுக்குப் பாஸ் கட்சியின் திடீர் எழுச்சி ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

இருந்த போதிலும் இந்தச் சட்டமன்றத் தேர்தல்கள் நிலைமையைச் சீர்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாஸ் கட்சி புதிதாக மாநிலம் எதனையும் கைப்பற்றவில்லை என்ற போதிலும் பக்காத்தானின் கைவசம் உள்ள மாநிலங்களில் அது அடைந்துள்ள முன்னேற்றம் நமக்குப் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதே வேகத்தில் போய்க் கொண்டிருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தை அக்கட்சி கைபற்றிவிடும் அபாயத்தை நாம் நிராகரிக்க முடியாது.

அந்தத் தீவிரவாதக் கட்சியிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பிரதமர் அன்வார் இனிமேலும் மெத்தனமாக இருக்க முடியாது. கடந்த நவம்பர் மாதத்தில் கிடைத்த அமோக வெற்றியை ஒரு உந்துதலாகக் கொண்டு இந்த 8 மாதங்களில் பாஸ் கட்சி களத்தில் இறங்கி நிறைய வேலை செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் கூட்டணி அதீத நம்பிக்கையுடன் சோம்பித் திரிந்து விளையாட்டாக இருந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பக்காத்தானின் பலம் பொருந்திய உறுப்புக் கட்சியான ஜ.செ.க.வுக்குக் கூட இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவு புதிதாக இளையோர்களைக் கவர்ந்து வலுப்படுத்தப்படும் என அதன் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் அறிவித்தார். இத்தகைய வேலைகளைப் பாஸ் கட்சி ஓராண்டுக்கும் மேலேயே தொடக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இளையோர்களை ஈர்ப்பது மட்டுமின்றி அதிகமான மலாய்க்காரர்கள் பாஸ் கட்சியின் தீவிரவாதக் கொள்கைகளுக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கு அன்வார் புதிய வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளது. இதனைச் செயல்படுத்த, மத்திய அரசாங்கத்தின் ஆட்சி தன் வசம் இருப்பது அன்வாருக்கு பெரியதொரு சாதகமான ஒரு அம்சமாகும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அன்வார் இதனை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் நடைபெறும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் மிதவாதத்திற்கு முற்று புள்ளி வைத்துப் பயங்கரமான தீவிரவாதக் குழியில் நாட்டைத் தள்ளிவிடும்.

அதே சமயம் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இனிமேலும் அன்வார் உதாசீனப்படுத்தக் கூடாது. கடந்த 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணிக்குப் பிறகு பேரலையாகத் திரண்டு பக்காத்தானுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிய நம் சமூகத்தின் ஒரு சாரார் ஏன் கடந்த வாரம் எதிரணிக்கு வாக்களித்தனர் என்பதையும் அன்வார் ஆராய வேண்டும்.

மலாய்க்காரர்களின் ஆதரவு  பிளவு பட்ட நிலையில் உள்ளதால் குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் இந்தியர்ஆதரவு அத்தியாவசியமாகிறது.