ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தின் ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் இம்மையத்தின் முதல் மாணவியின் அரங்கேற்ற விழா நலினலயம் 1.0-ம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொகுத்துள்ளார் தீசா நந்தினி.
ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இணைந்து ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூலை ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் கடந்த 20ஆம் திகதி ஆகஸ்டு மாதம் 2023ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்நூல் வெளியீட்டு விழா கோலா லம்பூரில் அமைந்துள்ள ‘டெம்பில் அப் ஃபன் ஆர்ட்ஸ்’ நுண்கலை மையத்தில் அமைந்திருக்கும் ‘சந்தானந்’ அரங்கில் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவிற்கு, தேசிய கலை மற்றும் கலாச்சார மையத்திலிருந்து மரியாதைக்குரிய மொஹமட் ரைசுலி பின் மாட் ஜுசோ, சுஹைமி அப்துல் ரஹிம் (செனி புடாயா), ராஜஸ்வரி எ சர்குணன் , டத்தோ மோகன் கிருஷ்ணன் மற்றும் டத்தின் வேளாங்கன்னி சுப்ரமணியம் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
செல்வி தீஷா நந்தினி சுகுமாறன் , செல்வி மகாலெட்சுமி சுகுமாறன் மற்றும் செல்வி நமீத்தா சேகர், இம்மூன்று மாணவர்களும் தங்களுக்கும் தங்களது குருவான குரு நளினி ராதாக்கிருஷ் அவர்களுக்கும் இடையே அழகாய் ஊடுருவுகின்ற குரு மாணவர் பந்தத்தை அற்புதமாக இந்நூலில் எழுதியுள்ளனர்.
18 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் இம்மாணவர்கள் தங்கள் குருவுடன் இக்கலைத் துறையில் பயணம் செய்திருக்கின்றனர். கலை வாழ்வில் மட்டுமல்லாது வாழ்க்கையின் எதார்த்தங்கள், ஒழுக்கம், தியானம், நட்பு என பல்வேறு பரிமாணங்களில் இவர்களின் குரு தோளோடு தோள் நின்று சகோதரியாய் வழிகாட்டிய எண்ணிலடங்கா தியாகங்களை இவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளனர்.
இந்நூலின் மகத்துவமும் முக்கியத்துவமும் வருங்கால ஆசிரியர் மாணவர் இடையேயான நல்லுறவுக்கு வித்தாக அமையும் என்று நன்குணர்ந்த மரியாதைக்குரிய டத்தோ மோகன் வேளாங்கனி தம்பதியர், 200 பள்ளிகளுக்கு இந்நூலை வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளனர். அதே வேளையில், இவ்விழாவின் போது 15 பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இந்நூல் மேடையில் வழங்கப்பட்டது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்து நூலையும் வெளியீடு செய்வதற்கான வாய்ப்பு தனக்குக் கிடைத்ததையொட்டி துவான் மொஹமட் ரைசுலி வெகுவாக பாராட்டி பேசினார்.
பரதநாட்டியத்தின் புனிதமும் சிறப்பும் அடுத்து வருகின்ற தலைமுறைக்கு கொண்டுச்செல்வதற்கான அடித்தளமாகவும் இந்நூல் விளங்கும் என அவர் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார். தேசிய கலை மற்றும் கலாச்சார மையம் நிச்சயமாக ஶ்ரீ ராதாக்கிருஷ்ணன் இசை மற்றும் கலை பயிலகத்தோடு இணைந்து எதிர்காலத்தில் நல்ல ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறி நம்பிக்கை வழங்கினார்.
நூல் வெளியீட்டு விழா நிறைவு பெற்றவுடன், தொடர்ந்து, நளினலயம் 1.0’, ஶ்ரீ ராதாக்கிருஷ்ணன் இசை மற்றும் கலை பயிலகத்தின் முதல் மாணவியின் அரங்கேற்றமும் அதே அரங்கில் மிக சிறப்பாக நடந்தேறியது.
2005ஆம் ஆண்டு குரு நளினி ராதாக்கிருஷ் அவர்களோடுத் தொடங்கிய செல்வி நமீத்தாவின் நடன பயணம் 20ஆம் திகதி நளினயத்தின் மூலம் தலைச்சிறந்த குருமார்கள், இசை வித்வான்கள், ஊடகவியலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நல்ல ரசிகர்கள் மத்தியில் அரங்க்கேற்றம் கண்டது.
நாடுதழுவிய நிலையில் பல்வேறு பரத போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைக் குவித்திருக்கும் செல்வி நமீத்தா, வெளிநாடுகளிளும் தன் குருவின் ஆசீர்வாதத்தோடும் வழிகாட்டுதலோடும் தன் திறனை வெளிக்கொணர்ந்திருக்கின்றார். இறைவனுக்கு வணக்கம் செலுத்தி (விநாயகர் ஸ்லோகம்), பிரபஞ்சத்திற்கு நன்றி சமர்ப்பணமிட்டு (பிரபஞ்ச ஸ்துதி) அலாரிப்பு தொடங்கியது. பின்னர், ஜதிஸ்வரத்தில் நட்டுவாங்கமும் மிருதங்கமும் கலை கட்ட, அரங்கேற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
தொடர்ந்து, வர்ணத்தில், கிருஷ்ணனை நினைந்து மனம் குழையும் தலைவியின் பாவத்தை அழகாய் நாட்டியத்தில் கொண்டு வந்திருந்தார் செல்வி நமீத்தா. கரு நிறத்தோடு சிகப்பு ஜரிகையில் நாட்டிய உடையணிந்து ‘, ‘ஆனந்த பைரவி’ ராகத்தில் ஐயப்பன் பதம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ‘நேற்றந்தி நேரத்திலே’ முருகனை எண்ணி ஆசையில் வாடும் தலைவியின் ஏக்கத்தை ‘ஹுசேனி’ ராகத்தில் இசைக்கலைஞர்கள் விருந்து படைக்க நாட்டியத்தில் தனை லயித்து அரங்கேற்றம் செய்தார் நாட்டியமணி.
நிறைவாக தில்லான ‘சிவரஞ்சனி’ ராகத்தில் இடம்பெற்று கொல்லூர் மூகாம்பிகையின் புகழை எடுத்துரைகும்படி வடிவமைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் அவர்களைப் பின்தொடரவும்! Facebook (Sri Rathakrishnan FA), TikTok (srirathakrishanan_fa), Instagram (srirathakrishanan_fine_arts), Youtube (Sri Rathakrishnan Fine Arts), Email ([email protected]/dayascom/dayascome) இல் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தை நீங்கள் காணலாம். +6016-3413170 அல்லது +6016-3691158- இல் Whatsapp வழி தொடர்பு கொள்ளவும்.