அரசாங்க பதவிகளில் இந்திய அரசியல்வாதிகள் – கி.சீலதாஸ்

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் சிறுபான்மையினர் வரிசையில் நிற்கின்றனர். ஜனநாயகத்தில் மக்கள் எண்ணிக்கைதான் முக்கியம். மலேசியா சிறுபான்மை எனும்போது அந்த வரிசையில் முதலிடம் வகிப்பது சீனச் சமுதாயம். அதற்கு அடுத்து நிற்பதுதான் இந்தியச் சமுதாயம்.

மலேசியாவில் இந்தியர்கள் யார் என்கின்ற வினாவுக்குக் கிடைக்கும் விளக்கம், அது தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள், சீக்கியர்கள் மற்றும் ஏனைய இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் சமுகத்தினராவர்.

இந்த நாட்டு இந்தியர்களில் தமிழர்கள்தான் பெரும்பான்மையினர். பொதுவாக, இந்நாட்டு இந்தியர்களின் அரசியல் வாழ்வைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது நல்லதாகும்.

 

எனினும், இந்தச் சிறு கட்டுரையில் எல்லாவற்றையும் அடக்க முடியாது. மலேசிய இந்தியக் காங்கிரஸின் வரலாறு ஒருவகையில் உதவும். அதே சமயத்தில், இந்தியர்களின் அரசியல் வாழ்வைப் பற்றிப் பல நூல்கள் உள்ளன. அவற்றைப் படித்தால் பல உண்மைகள் புலப்படும். அவை யாவும் நமக்குத் திருப்தியளிக்காது.

அந்த வரலாற்று உண்மைகள் நமக்கு உணர்த்துவது என்ன? சிறுபான்மையினராக இருந்தபோதிலும் நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளைப் பெரிதுப்படுத்தி காலத்தை விரயமாக்கியதில்தான் சுகம் காணப்பட்டது போலும்.

இந்தக் குணம், இந்த அரசியல் குணத்தால் இந்தியச் சமுதாயம் பலன் கண்டதா என்றால் அதுவும் ஒரு கேள்விக்குறியே! அதோடு அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்தியர்களை, குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்தை எப்படி நடத்தினார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா?

அது பழைய கதை, இன்றைக்கு உதவுமா என்று கேட்டால் நம் முன்னோர் எப்படி நடந்து கொண்டார்களோ அதுபோலவே இந்தத் தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் நடந்து கொள்ள வேண்டுமா?

உதாரணத்திற்கு, அம்னோ தலைமையில் இயங்கிய கூட்டணி அரசுகள் இந்தியர்களை எவ்வாறு நடத்தியது என்று கேட்கும்போது நாம் அரசியல் விடையைத்தான் நாடுவோம்.

மலாயாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பல மாநிலங்களில் இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றனர். சிலாங்கூர், பாஹாங், நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு ஆகிய மாநிலங்களில் கூட்டணியைப் பிரதிநிதிக்கும் இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் வி.எல்.காந்தன், இவர் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சேவையாற்றியவர். ஒரு காலகட்டத்தில் காலஞ்சென்ற  சங்கரலிங்கம் பாஹாங் ஆட்சிக் குழு உறுப்பினராகச் சேவையாற்றியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜொகூரைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்தின் ஆட்சிக் குழுவில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினர் எம்.பி. குமரனுக்கு ஆட்சிக் குழுவில் இடமளிக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை இன்றுவரை புரியாதப் புதிராக இருக்கிறது.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. பாசமாணிக்கம் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஜொகூர் மாநில ஆட்சிக் குழுவில் அவருக்கு இடமளிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்னவெனில் அப்பொழுது ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சர் டத்தோ ஓதுமான் சாட் பாசமாணிக்கம் போல் மூவார் வாசி. அவர்கள் நெடுங்கால நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலங்களின் மலாய்க்காரர் அல்லாதார் முதலமைச்சராக பொறுப்பேற்க வழியில்லை.

1969ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் ஜனநாயகச் செயல்கட்சியும், கெராக்கனும் ஒன்று சேர்ந்ததால் மாநில அரசை அமைக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தன. அன்றைய ஜனநாயகச் செயல்கட்சியின் பொது செயலாளர் மலாய்க்காரர் அல்லாதார் முதலமைச்சராக வருவதில் தடை ஏதுமில்லை என்றார்.

டான் சீ கூன் இதற்கு உடன்படவில்லை. இந்த வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளும்போது மலேசிய அரசியலில் சில கட்டுப்பாடுகள் இருப்பதைக் காணலாம். அந்தக் கட்டுப்பாடுகள் ஒரு மரபாக வேரூன்றிவிட்டது என்று கூட சொல்லலாம்.

பினாங்கு, மலாக்கா மாநிலங்களில் ஒரு மலாய்க்காரர் அல்லாதார் முதலமைச்சராக வர வாய்ப்புண்டு. சபா, சரவாக் மாநிலங்களை மலாய்க்காரர் அல்லாதவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, டத்தோ ஸ்டீபன் காலோங் நிக்கான் சரவாக் முதலமைச்சர், சபாவில்  டொன்ட் ஸ்டீபன்ஸ், ஜோஸப் கிட்டிங்கான் ஆகியோர் மலாய்க்காரர்கள் அல்ல.

சுதந்திரத்துக்குப் பின் மாநிலத்தின் முதல் முதலமைச்சராகச் சேவையாற்றியவர் பினாங்கின்  மைக்கல் வொங் பாவ் கீ (1911-2002).

2018ஆம் ஆண்டு நடந்த மாநிலப் பொது தேர்தலில் வெற்றி கண்ட ஒரு தமிழர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மலேசியாவிலேயே முதன் முதலாக ஒரு தமிழர் துணை முதலமைச்சர் பதவி இதுவே முதல் தடவை. இது வரலாற்று உண்மை. ஒரு இரமசாமியை துணை முதலமைச்சராக நியமித்த பெருமை அன்றைய முதலமைச்சர் லிம் குவான் எங்கைச் சாரும். அப்பொழுது அவர் ஜனநாயகச் செயல்கட்சி பொதுச் செயலாளர்.

நடந்து முடிந்த பினாங்கு மாநிலப் பொது தேர்தலில் வெற்றி கண்ட ஜெகதீப் சிங்குக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். இது கட்சியின் ஏற்பாடு. ஒரு கட்சியில் இணைந்தால் அக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு மனப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.

அதோடு, கட்சித் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கட்சி விஷயங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது. சுதந்திரமாகச் செயல்பட விரும்பினால் கட்சியை விட்டு விலகுவதுதான் நாகரீகமான நடத்தை எனலாம்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்னமே கட்சியிலிருந்து விலகுவது, தாம் சார்ந்திருந்த கட்சியைக் குறை கூறுவது, “தாவி, தாவி கிடைக்காத திராட்சை புளிக்கிறது” என்று நரி சொன்னது போல் அல்லவா இருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க பினாங்கின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் சிங் ஒரு பஞ்சாபி. எனவே, பெரும்பான்மை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட மாட்டாது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. துணை முதலமைச்சராக இருந்தால்தான் தமிழர்களின் பிரச்சினைகளைக் கவனிக்க முடியுமா? தமிழர் அல்லாதார் தமிழர்களின் பிரச்சினைகளைக் கவனிக்க மாட்டார்களா? பிரதமர் அன்வர் தமிழர்களின் பிரச்சினை என்று சொல்லாமல் இந்தியர்களின் பிரச்சினை என்று அணுகுவது தமிழர்களின் பிரச்சினை ஒதுக்க்பட்டுவிட்டது என்பது பொருள்படுமோ?

2008ஆம் ஆண்டு ஒரு இந்தியருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை இதுகாறும் பாதுகாக்கப்பட்டது, இனிமேலும் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கே தமிழர், தமிழரல்லாதார் என்ற இன வேறுபாட்டு பேச்சுக்கு இடமில்லை. இடமளிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை என்றால் தவறில்லை. இதை நிறுத்திக் கொண்டால் தமிழர்களின் மானம் காக்கப்படும்.

பினாங்கு துணை அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தப் பதவி தமிழர்களின் பாரம்பரிய உரிமை என்று நினைத்துப் பேசுவது முதிர்ச்சியற்ற அரசியல் தரத்தை வெளிப்படுத்துகிறது. இனத்துவேஷத்தைப் பரப்பும் மோசமான நடவடிக்கை என்றாலும் தகும். அரசியல் வாழ்வு தற்காலிகமானது, அது எப்பொழுதும் நிரந்தரமில்லாது ஊசலாடிக் கொண்டிருக்கும். நிலைத்தன்மை கிடையாது. பதவி எம்மாத்திரம்?