உலக இந்துகளுக்குச் சவால்!

கி.சீலதாஸ் – நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர்.

இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப காலத்தில் கடும் பகைமையில் சிக்கிக் கொண்ட போதிலும் கசப்பான அனுபவங்களை ஒரு பக்கம் தள்ளிவிட்டு இந்தியாவின் ஆற்றலைப் போற்றியது.

விஞ்ஞான உலகில் ஆசிய நாடுகளின் பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையே இந்தச் சந்திராயானின் வெற்றி பயணம் உணர்த்துகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் இந்த வெண்வெளிப் பயணம் வையகத்துக்கே நன்மை நல்கும் என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை. மனிதக் குலமும் பயனடையும் என்ற நம்பிக்கையும் வலுவடைகிறது என்பதே உலக விஞ்ஞானிகளின் உறுதியான கருத்து. இவ்வாறு பல வாழ்த்துச் செய்திகளும் நம்பிக்கையூட்டும் செய்திகளும் வந்து கொண்டிருக்கையில் சில மேலை நாடுகளின் கருத்து எப்படி இருக்கிறது என்பதையும் கவனிப்போம்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வைக் கேலி செய்வதில் மிகுந்த உற்சாகம் காட்டுவோரும் உள்ளனர். பிரிட்டிஷ் அமெரிக்கப் பத்திரிக்கை நிருபர்கள் இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பணியைக் கடுமையாக விமர்சித்துள்ள பாங்கு தரமற்ற மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது.

பிரிட்டனின் பிரபல அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் என்று போற்றப்படும் நைஜல் ஃபராஜ் (Nigel Farage) இந்தியா மேற்கொண்ட விண்வெளி ஆய்வு வெறும் பண விரயமாம்.

இந்திய மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காட்டினர் பட்டினியால் அவதியுறுவதாகவும், அவர்களின் பட்டினியைப் போக்க பணத்தைச் செலவு செய்திருக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். அவரின் கூற்று பிழையான தகவலைக் கொண்டிருக்கிறது.

கவுரவமான உலக மக்களின் வறுமையை ஆய்வு செய்யும் அமைப்புகளின் கருத்துப்படி, இந்தியாவின் வறுமை நிலை 28.4 விழுக்காட்டில் இருந்து 14.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலும்; 2017 முதல் 2021 ஆண்டு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு பொய்யான தகவலை வெளியிட்டு இந்தியாவை மட்டம் தட்ட வேண்டுமென்ற வேட்கை மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

உண்மைக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதைக் காட்டிலும் பொய்மைக்கு முக்கியத்துவம் தரும் உற்சாகம்தான் ஓங்கியிருப்பதைக் காண முடிகிறது. இது கேவலமான அணுகுமுறை! வறுமை இருக்கலாம்.

அதனால் விஞ்ஞான ஆய்வைக் கைவிட வேண்டுமா? இப்படிப்பட்ட ஆய்வுகள் காலப்போக்கில் நாட்டில் வறுமையை அடியோடு அழிக்கும் தரத்தைக் கொண்டிருக்கலாம் அல்லவா? அந்த இலக்கை அடைய பல வழிகளைத் தேடும்போது விண்வெளி ஆய்வு எந்த வகையில் பண விரயமாகக் கருத முடியும்?

அடுத்து, பெட்ரிக் கிறிஸ்டீஸ். இவரும் ஒரு பிரபல பத்திரிக்கையாளர். இவர் என்ன சொன்னார்? “ராக்கெட் விடும் அளவுக்கு உனக்கு (இந்தியாவுக்கு) வசதி இருக்கும்போது, உதவி தேடி கையேந்தி ஏன் வருகிறாய்?” இதுதான் அவரின் கேள்வி. அவர் இவ்வாறு பேசுவதற்கான காரணம் என்ன?

2.3 பில்லியன் ஆங்கிலப் பவுண்டுகள் (பணம்) இந்தியாவுக்கு உதவியாகக் கொடுத்ததாம் பிரிட்டன். இது தவறான கருத்து எனப் பிரிட்டனின் வெளிநாட்டு அமைச்சகம் விளக்கியிருக்கிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு எந்தவொரு பண உதவியும் கொடுக்கப்படவில்லை.

ஆனால், நிறைய முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விளக்கமானது கிறிஸ்டீஸ் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமல்ல, கிறிஸ்டீஸ் மேலும் ஒரு கருத்தை முன்வைத்தார். பிரிட்டன் நல்கிய 2.5 பில்லியன் ஆங்கிலப் பவுண்டுகளை இந்தியா திரும்பத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவும் ஒரு தரக்குறைவான கருத்து என்பதோடு முழு உண்மையையும் புரிந்து கொள்ளாமல் உளறித் தள்ளிய அறிவற்ற கருத்து என்றாலும் பொருந்தும்.

இவ்வாறு உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாய்க்கு வந்ததைக் கொட்டித் தொலைவது சில அரசியல்வாதிகளுக்கு உள்ள அசட்டுத் தைரியம் என்றால் மிகையாகாது.

கிறிஸ்டீஸ் சொன்ன உண்மையற்ற கருத்தும், தமிழ்நாட்டு அமைச்சர்களில் ஒருவரான திரு உதயநிதி ஸ்டாலின் – இவர் தமிழ்நாட்டு முதலமைச்சர்; திரு மு.க. ஸ்டாலினின் மகன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இந்து சமயத்தை (சனாதன தர்மத்தை) கடுமையாக விமர்சித்ததோடு அது ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதைக் கடும் நோய்களுடன் ஒப்பிட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துரைத்தார்.

இதை விளக்கும்போது இந்தியச் சமுதாயம் பல நூற்றாண்டுகளாகக் கேவலமான நிலைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றால் அந்த நிலை இந்து சமயத்தால் ஏற்பட்டது என்ற விளக்கத்தை முன்வைக்கிறார் உதயநிதி.

இப்பொழுது அவர் தந்திருக்கும் விளக்கம், தாம் எல்லா சமயங்களையும் குறிப்பிட்டதாகவும் இந்து சமயத்தை மட்டும் குறிப்பிடவில்லை என்கிறார். உதயநிதி மாறனும் அவரைச் சார்ந்திருப்பவர்களும் உண்மையை உணர்ந்து இனிமேலாவது ஆங்கிலேயன் நட்டு வளர்த்த பொய்யை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்களிடம் தூய மனச்சாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்து சமயத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் அழியவில்லை. இந்து சமயத்தால் மக்கள் ஒருபோதும் பிறரைக் கையேந்தி நிற்கும் அவலநிலைக்குக் கொண்டு செல்லப்படவில்லை.

முகலாயர்களின் ஆட்சியில் கூட தென்னிந்தியர்கள் கூலிகளாக வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை. என்றைக்கு வெள்ளைக்காரர்கள், குறிப்பாக கிழக்கத்திய கம்பெனி இந்தியத் துணைக்கண்டத்தில் கால் பதித்ததோ, என்றைக்குத் தமது காலனிகளை விருத்திச் செய்ய தொழிலாளர்கள் தேவைப்பட்டார்களோ அந்தத் தேவையை நிறைவு செய்யும் தகுதியைத் தென்னிந்தியா கொண்டிருந்தது.

இந்த வெள்ளையர்கள் இந்திய மக்களின் பணத்தைச் சூறையாடினார்கள், அவர்களின் செல்வத்தைத் திருடினார்கள். திருடியதை யாவும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றார்கள். வளமாக வாழ்ந்த சமுதாயம் அடிமைகளானார்கள். பிறந்த ஊரில் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு யார் காரணம்?

இந்தியத் துணைக்கண்டத்தைப் பிற நாட்டவர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன்னர் அதன் பொருளாதாரம் உலகிலேயே முதன்மை நிலையில் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியத் துணைக்கண்ட நாடுகளைச் சூழ்ச்சியாகக் கவர்ந்த போதும் அதன் பொருளாதாரம் செழிப்பாகவே இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்கும் சூழ்ச்சியும் பரவியது. இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம் மோசமான வீழச்சியைக் கண்டது. நாட்டின் வளம் திருடப்பட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். வஞ்சிக்கப்பட்டனர். இந்தப் பொருளாதாரச் சரிவுக்கு இந்து மதமா காரணம்? பகுத்தறிவைப் போற்றும் சீர்த்திருத்தவாதிகள் இந்த உண்மையை அறிய முற்பட வேண்டும்.

வெள்ளைக்காரன் சொன்னதை நம்பி மோசம் போனார்கள் தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள். மலாயா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளுக்குக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். சென்ற நாடுகளில் நோய் கொடுமையால் மரித்தவர்கள் பல்லாயிரம். இதற்குக் காரணம் இந்து மதமா? இல்லவே இல்லை! காலனித்துவப் பிசாசு வெள்ளைக்காரன்.

அந்த வெள்ளைக்காரன் ஊட்டிய பொய்களை நம்பி பிராமண எதிர்ப்பை வளர்த்து அரசியலின் வாழ்வு நடத்துவோர் யார் என்ற அடையாளத்தை மக்கள் நிச்சயமாக உணரும் காலம் வரும். காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? வெள்ளைக்காரன் நடத்திய கொடுமை மிகுந்த சூழ்ச்சி இப்பொழுது பகிரங்கமாகிவிட்டது.

வஞ்சித்த வெள்ளையர்களுக்குச் சிலை அமைத்து புகழ்பாடும் கூட்டம்தான் எப்பொழுதும் போல இந்து சமயத்தின் மீது பழி சுமத்துகிறது. அதற்குத் துணை பொய் பிரச்சாரம். இவ்வாறு பொய் தகவல்களைப் பரப்பி அரசியல் நடத்துவோருக்கும், இந்தியாவின் விஞ்ஞானப் பெருமையைச் சிறுமைப்படுத்தும் மேலை நாட்டவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பொய்யில் வாழும் கூட்டத்தினர் என்றால் தவறாகுமா?

சந்திராயான்-3 குறித்து தவறான பிரச்சாரம் செய்யும் வெள்ளைக்காரர்கள் போல் உதயநிதி மாறனும் வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ள யாதொரு முயற்சியும் எடுக்காமல் பேசுவது, நடந்து கொள்வது தரமான அரசியலாகக் கருத முடியாது. சாக்கடை அரசியல் நடத்துவோர் என அழைக்கப்படலாம். உதயநிதி மாறன் மேலும் நல்ல தெளிவு பெற வேண்டுமானால் இந்தியாவின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணம் யார் என்பதைத் துல்லியமாக விளக்கியுள்ளார் காலஞ்சென்ற அங்குஸ் மெடிசன். அவர் எழுதிய (Contours of the World Economy 1-2030 AD) நூலை, உதயநிதி படித்து மனம் திருந்துவார் என்று நம்புவோம்.

உதயநிதி மாறன் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் அந்த நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் நாம் அதைக் கண்டுகொள்ள மாட்டோம். காரணம் அது நமக்குத் தேவையில்லை. ஆனால், அவர் தமது அரசியல் வாழ்வைச் செம்மைப்படுத்த இந்து மதத்தின் மீது பொய்யான தகவல்களைச் சுமத்துவது உலக இந்துகளுக்கே விடுக்கப்பட்ட சவாலாகும்.

வரலாற்று உண்மையைச் சில காலம் மறைக்கலாம். பொய்யை, அநியாயத்தை வெகுகாலம் மறைத்து வைக்க முடியாது. கிறிஸ்டப்பர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தான். அவன் வரலாற்று நாயகன் என நம்பி சிலை வைத்தனர். இப்பொழுது உண்மை புலப்பட்டது. அவர் ஒரு வரலாற்று கொலைக்காரன், கொள்ளைக்காரன். அவன் சிலை அகற்றப்பட்டுவிட்டது.