உதயநிதிக்கு எதிராக மஇகா-வின் போர்க்கொடி தேவையா?

இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியர்களின் காவலன் என்று காலங்காலமாக சுயமாகவே பறைசாற்றிக் கொண்டிருந்த ம.இ.கா.வின் தற்போதைய நிலை என்ன என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

நம் சமூகத்தினரின் ஆதரவை கிட்டதட்ட முற்றாக இழந்துவிட்ட அக்கட்சி தனது பழைய செல்வாக்கை மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கு தட்டித்  தடுமாறிக் கொண்டிருப்பதும் வெள்ளிடை மலை.

இந்நிலையில் நம் சமூகத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்ககரமான நடவடிக்கைகளை செயல்படுத்தினால் மட்டுமே கட்சி மீட்சி பெறமுடியும் என்பதை அதன் தலைமைத்துவம் உணர வேண்டும்.

மாறாக மலிவான விளம்பரம் தேடும் வகையில் அக்கட்சி எவ்விதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் மக்களின் அபிமானத்தை கடுகளவும் அது பெறவே முடியாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் புதல்வரும் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தலைநகரில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக ம.இ.கா. செய்துள்ள அறிவிப்பு நகைப்புக்குரிய ஒரு நடவடிக்கை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அண்மையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி கருத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக அங்கு சர்ச்சையையும் எழுந்துள்ளதாக நம்பப்படுகிறது.

பிரிதொரு நாட்டில் ஏறத்தாழ 84 மில்லியன் தமிழர்கள் வாழும் ஒரு மாநிலத்தில் அந்த சர்ச்சை எழுந்துள்ளது. அதனை அவர்களே சமாளிக்கட்டுமே! அதனால் ம.இ.கா.வுக்கு என்ன? இங்கு பேரணி நடத்தி அவர்கள் என்ன சாதனை புரியவிருக்கிறார்கள்?

காலங்காலமாக நம் நாட்டில் அம்னோவும் பாஸ் கட்சியும் மேற்கொண்டு வரும் கலாச்சாரத்தையே நமக்கு இது ஞாபகப்படுத்துகிறது. அத்தகைய ஒரு கலாச்சாரத்தை ம.இ.கா. தேவையில்லாமல் பின்பற்ற வேண்டிய அவசியமே  இல்லை.

சுமார் 60 ஆண்டு கால பாரிசான் அரசாங்கம் மட்டுமின்றி 22 மாத கால பக்காத்தான் ஆட்சியிலும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திலும் கூட நம் சமுதாயம் ஓரளவு கவனிப்பாரற்றுதான் தவிக்கிறது. நலிந்து கிடக்கும் நம் சமூகத்தின் நலனை பேணுவதற்கு தேவையான நூற்றுக்கணக்கான வேலைகள் அப்படியே கிடப்பில் உள்ளன.

இந்நிலையை மாற்றியமைக்கத்தான் ம.இ.கா. தனது நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் உபயோகிக்க வேண்டுமே தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  வீண் விதண்டாவாதத்தின் வழி மலிவு விளம்பரம் தேட முற்படக் கூடாது. அதற்கான அவசியமும் இல்லை.

அது மட்டுமின்றி உதயநிதி தயாரிக்கும் திரை படங்களுக்கு  நம் நாட்டில் தடை விதிக்க வேண்டும் என தொடர்புதுறை பல்லூடக அமைச்சுக்கு ம.இ.கா. பரிந்துரை செய்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுவும் கூட மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பறிக்க முற்படும் ஒரு அதிகப்பிரசங்கித்தனம்தான் என்றால் அது மிகையில்லை. ம.இ.கா.வுக்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது?

ஆக, இது போன்ற அநாவசியமான காரியங்களில் நேரத்தை விரயமாக்குவதால் அக்கட்சி மீதான மக்களின் வெறுப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

மலேசிய இந்தியர்கள் அக்கட்சியை பாராட்டவா போகிறார்கள்?